வரலாற்றுப் பாரம்பரிய செறிவுமிக்க சென்னை என்றழைக்கப்படும் மெட்ராஸ் இன்று (ஆகஸ்ட் 22) தனது 383-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. மெட்ராஸ் டே ஏன் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ல் கொண்டாடப்படுகிறது தெரியுமா… அந்த வரலாற்றைத் தெரிஞ்சுக்கலாம் வாங்க…
சென்னை
இந்தியாவில் பிரிட்டீஷார் உருவாக்கிய கொல்கத்தா, மும்பை மாநகரங்களை விடவும் மூத்த மாநகரம் நம்ம மெட்ராஸ். அதேபோல், மற்ற இரண்டு நகரங்களைப் போல பிரிட்டீஷார் புதிதாக உருவாக்கிய நகரம் இல்லை சென்னை. மாநகரின் அடையாளங்களாக நிற்கும் பல கட்டடங்கள் 7 மற்றும் 8-ம் நூற்றாண்டு பழமைவாய்ந்தவை. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் போன்றவை திராவிட கட்டடக் கலைக்குச் சான்றாக நிற்பவை. சோழ, பல்லவ காலம் தொட்டு கடைசியாக விஜயநகரப் பேரரசு காலம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் அதன் பணிகள் நடந்திருக்கின்றன.
விஜய நகரப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த மதராஸப்பட்டினத்தை பிரிட்டீஷ் அரசாங்கம் விலைக்கு வாங்கியது. அப்போதைய விஜயநகரப் பேரரசின் வைசிராயாக இருந்த தமர்லா வெங்கடாத்ரி நாயக்கரிடம் இருந்து விலைக்கு வாங்கியது பிரிட்டீஷ் அரசாங்கம். அப்படி விலைக்கு வாங்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேதிதான் ஆகஸ்ட் 22, 1639. இதுவே மெட்ராஸின் பிறந்தநாள் ஆவணமாக வரலாற்றில் பதிவாகிவிட்டது. பிரிட்டீஷ் தரப்பில் விஜயநகரப் பேரரசுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் என்கிற இருவர். இதைக் கொண்டாடும் விதமாகவே ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1996-ம் ஆண்டு சென்னை என்கிற பெயர் பெற்றது.
சென்னை தினக் கொண்டாட்டம்
சென்னை தினம் கொண்டாடப்பட வேண்டும் என்கிற விதை போட்டது 2004-ம் ஆண்டில். அப்போது, ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் மயிலாப்பூர் திருவிழா கொண்டாடப்பட்டு வந்ததைக் கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர்கள் சஷி நாயர், வின்சென்ட் டிஸோசா மற்றும் வரலாற்று அறிஞர் முத்தையா ஆகியோர் சென்னை தினம் என்கிற புதிய கொண்டாட்டத்தைத் தொடங்கி வைக்க எண்ணினார்கள். அப்படித்தான் சென்னை தினம் உருவானது. 2004-ம் ஆண்டில் 5 நிகழ்ச்சிகளோடு தொடங்கப்பட்ட கொண்டாட்டங்களில், 2007-ல் 60 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாநகரின் வரலாறு, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் என பல்வேறு தீம்களை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நம்ம மெட்ராஸ் நம்ம கெத்து!
கற்காலம் தொட்டே சென்னையில் மக்கள் வாழ்ந்து வந்ததற்கான பதிவுகளை இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை கண்டுபிடித்திருக்கிறது. சென்னையின் பல்லாவரத்தில் பெருங்கற்கால கலாசாரப் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து பெருங்கற்காலத்திலேயே மக்கள் இங்கு வாழ்ந்திருக்கலாம் என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்தது.
வந்தாரை வாழவைக்கும் நம்ம சென்னையோட எந்த அம்சம் உங்களுக்கு ரொம்பவே புடிச்சது? அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!