சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரத்துக்கு வழக்கறிஞர்கள் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. பின்னணி என்ன?
சஞ்ஜிப் பானர்ஜி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகக் கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றார் சஞ்ஜிப் பானர்ஜி. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் இரண்டாவது இடத்தில் இருந்த அவர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்று 10 மாதங்கள் நிறைவடையாத நிலையில் பணியிட மாற்றத்துக்கு கொலீஜியம் பரிந்துரை செய்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவை பரிந்துரைத்துள்ளது. அதேபோல், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
வலுக்கும் எதிர்ப்பு
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்று ஓராண்டு கூட நிறைவு பெறாத நிலையில், அவரை இடமாற்றம் செய்யும் உத்தரவை கொலீஜியம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் உள்பட 237 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கியமான இரண்டு வழக்கறிஞர்கள் சங்கங்களான Madras High Court Advocates Association (MHAA) மற்றும் Madras Bar Association ஆகியவை எதிர்ப்புத் தெரிவித்து அமைதிப் போராட்டத்தையும் நடத்தியிருக்கின்றன. இதுகுறித்து அந்த சங்கங்கள் சார்பில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், “மனசாட்சிப்படி தீர்ப்பு வழங்கினால், தலைமை நீதிபதியின் நிலைதான் தங்களுக்கும் ஏற்படுமோ என நீதிபதிகளிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதே அச்சத்தோடு நிறைய நீதிபதிகள் இருக்கிறார்கள். அரசியலைமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை பணியிடமாற்றம் செய்வது சாதாரண விஷயமில்லை’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்ற விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “சுதந்திரமான நீதிபதிகளை அச்சுறுத்த இது ஒரு வழிமுறையோ என்றும் உலகம் எண்ணுவதற்கு இடம் கொடுக்கவே செய்யும். 1976ஆம் ஆண்டு நெருக்கடி (எமர்ஜென்சி) அறிவிக்கப்பட்டபோது இப்படி நிகழ்ந்தது. மக்களாட்சியில், மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்தான் – அதன் சுதந்திர செயல்பாடும், ஆளுமையும்தான் மிகுந்த நம்பிக்கையைத் தருவன. பெகாசஸ் போன்ற வழக்கு தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றத்தின் ஆணை மக்கள் நம்பிக்கையை உயர்த்துவதாக அமைந்தது. ஆனால், இதுபோன்ற காரண காரியமின்றி வழங்கப்படும் மாறுதல் – மாற்றல்களால் அது மக்கள் நம்பிக்கையை குறைக்கவே செய்யும்.

Also Read – சென்னை மாநகராட்சிப் பள்ளியில் சாதி பாகுபாடு? – சர்ச்சையான நிர்வாகத்தின் முடிவு!
இது ஒரு தனி நபர் பிரச்சினையல்ல; இது ஒரு கொள்கைப் பிரச்சினை. நியாயங்கள் காயங்களாகக் கூடாது. எனவே, உச்ச நீதிமன்றம் இந்த மாற்றல் பரிந்துரையை மறு ஆய்வு செய்து, ரத்து செய்யவேண்டும். குடியரசுத் தலைவரும் இத்தகைய பரிந்துரையை நடுநிலையோடு பார்த்து நிராகரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.
அதேநேரம், பணியிட மாற்றத்துக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து பேசியிருக்கும் MHAA முன்னாள் தலைவரும் பா.ஜ.க சட்டப்பிரிவு தலைவருமான வழக்கறிஞர் பால் கனகராஜ், தலைமை நீதிபதி பணியிடமாற்றம் அரசியலாக்கப்படுகிறது. இதன் பின்னணியில் இருக்கும் காரணம் தெரியாமல் எதிர்ப்பது எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும். நிச்சயம் பணியிடமாற்றத்தின் பின்னணியில் சரியான காரணம் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
0 Comments