தேசிய அளவில் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் தாஜ்மகாலை முந்தி மகாபலிபுரம் முதலிடம் பிடித்திருக்கிறது. மத்திய சுற்றுலாத் துறை வெளியிட்டிருக்கும் பட்டியலில் மொத்தமாக தமிழகத்தைச் சேர்ந்த 5 சுற்றுலாத் தலங்கள் இடம்பிடித்திருக்கின்றன.

சுற்றுலாத் துறையின் ரிப்போர்ட்!
கடந்த 2021 மார்ச்சுக்குப் பிறகு, அதாவது கொரோனா லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின்னர் நடப்பு ஆண்டு மார்ச் மாதம் வரையிலான வெளிநாட்டுப் பயணிகள் வருகை குறித்து மத்திய சுற்றுலாத் துறை புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தேசிய அளவில் நுழைவுச் சீட்டு பெற்று வெளிநாட்டுப் பயணிகள் பார்வையிட்ட சுற்றுலாத் தலங்கள் பட்டியலில், மகாபலிபுரம் முதலிடம் பிடித்திருக்கிறது.
Also Read – குரங்கு வேட்டை முதல் ஆபத்தான பழங்குடி மக்கள் சந்திப்பு வரை… யார் இந்த புவனிதரண்!
ஓராண்டில் மட்டும் 1,44,984 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் பல்லவர் சிற்பங்களைப் பார்வையிட்டிருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் தாஜ்மகாலைப் பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை 38,922 மட்டுமே. மத்திய தொல்லியல் துறையின் கீழ் நுழைவுச் சீட்டு கொடுத்து பார்வையிடும் சுற்றுலாத் தலங்களில் வெளிநாட்டினர் அதிகம் பேர் பார்வையிட்ட இடங்கள் பட்டியலில் டாப் 10-ல் தமிழகத்தைச் சேர்ந்த 5 சுற்றுலாத் தலங்கள் இடம்பிடித்திருக்கின்றன.

- மகாபலிபுரம்
- சாளுவன்குப்பம்
- செஞ்சிக் கோட்டை
- திருமயம் கோட்டை அருங்காட்சியகம்
- சித்தன்னவாசல் குகைக் கோயில்

தமிழகத்தைச் சேந்த இந்த ஐந்து இடங்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. இந்திய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையில், 45.5% பேர் மகாபலிபுரத்துக்கு விசிட் அடித்திருக்கிறார். அதேநேரம், தாஜ்மாகாலைப் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் 12.21% மட்டுமே.

பயண திட்டத்தில் மாற்றம் மற்றும் சுற்றுலாத் தலங்களை அணுகக் கூடிய வசதி போன்ற காரணங்களால் மகாபலிபுரம் முதலிடத்தைப் பிடித்திருக்கலாம் என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள். தாஜ்மகாலுக்கு வரும் பெரும்பான்மையான வெளிநாட்டினர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். 2021-ம் ஆண்டின் இறுதிவரை விமான சேவை போன்றவை இந்த நாடுகளில் முழுமையாகத் தொடங்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

அதேநேரம், `இதன்மூலம் இந்தியாவின் கலாசாரத் தலைநகரம் நம்ம தமிழகம்தான் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் பேர் வந்த சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் மகாபலிபுரம் முதலிடம் மட்டும் பிடிக்கவில்லை. எண்ணிக்கை அடிப்படையில் மகாபலிபுரத்துக்கும் மற்ற சுற்றுலாத் தலங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் ரொம்பவே பெரியது’’ என்கிறார் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் செயலாளர் சந்திர மோகன்.
0 Comments