முதல்வரான பின்னர் இரண்டாவது முறையாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மனோகர் தேவதாஸின் Multiple Facets of My Madurai புத்தகத்தைப் பரிசளித்தார். இந்த புத்தகத்தில் என்ன ஸ்பெஷல்?

டெல்லி சென்றிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வது, பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளின் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதன்பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், `சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். அதேபோல், பேரவையில் முன்னாள் முதல்வரின் கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைக்கவும், மதுரையில் நடைபெறும் நூலகப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்தார். முதல்வரான பின்னர் குடியரசுத் தலைவருடனான முதல் சந்திப்பு இதுவே. இந்த சந்திப்பின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு Multiple Facets of My Madurai என்ற மனோகர் தேவதாஸின் புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் பரிசளித்தார்.
Multiple Facets of My Madurai

பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் மனோகர் தேவதாஸ், தனது சிறுவயதில் தான் பார்த்த மதுரை நகர வீதிகளை ஓவியமாகத் தீட்டினார். அந்த ஓவியங்களின் தொகுப்பே Multiple Facets of My Madurai புத்தகம். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் மனோகர் தேவதாஸ், Oldham Company-யில் வேதியியலாளராக நாற்பதாண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். வேலை ஒரு பக்கம் இருந்தாலும் ஓவியம் வரைவதன் மீதான தனது ஆர்வம் என்றுமே குறைந்ததில்லை என்கிறார் மனோகர். `எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே நான் வரைகிறேன். ஆறாவது படிக்கும்போது முதல் நான் வரைந்து வருகிறேன். எனது கல்லூரியில் இருந்த Chapel-ல் தொடங்கி பழமையான கட்டடங்களை ஓவியமாகத் தீட்டி வருகிறேன்’’ என்கிறார்.

தனது மனைவி மஹிமாவோடு இணைந்து கிரீட்டிங் கார்டுகள் எனப்படும் வாழ்த்து அட்டைகள் வரைவதில் புகழ்பெற்றவர். 13 ஆண்டுகளுக்கு முன்பே மனைவி மஹிமாவை விபத்தொன்றில் பறிகொடுத்த மனோகர், மதுரை பற்றிய கடைசியாக 2003-ல் மதுரை அருகே இருக்கும் யானை மலை. கிரீட்டிங் கார்டுகளுக்காக 2007ம் ஆண்டு வரை வரைந்து வந்த அவருக்கு 40 வயதிலேயே கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், ஓய்வுபெற்று பல ஆண்டுகளுக்குப் பின்னரும் வரைவதை அவர் நிறுத்தவே இல்லை. 2010ம் ஆண்டுக்குப் பிறகு அவரது ஓவியக் கண்காட்சி நடைபெறவில்லை. 2015-ல் முழுமையாகக் கண்பார்வை இழந்த மனோகர் தேவதாஸுக்குக் கடந்த 2020-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறுவயதில் தான் பார்த்த மதுரை நகரின் வீதிகளையும் விழாக்களையும் பென்சில் ஸ்கெட்சாகத் தொடர்ந்து வரைந்து வந்தார். அந்த ஓவியங்கள் தொகுக்கப்பட்டு Multiple Facets of My Madurai என்ற பெயரில் 2003-ல் புத்தகமாக வெளிவந்தது. ஏறக்குறைய 15 ஆண்டுகால எழுத்து, 14 ஆண்டுகால ஓவியப் பணி மூலம் இதை நிறைவு செய்ததாகச் சொல்கிறார் அவர். சித்திரைத் திருவிழா, தேர்த் திருவிழா, வைகை நதியில் இருந்த பாலம், மதுரையின் பழமையான கட்டடங்கள் போன்றவற்றை மிகவும் நுணுக்கமான தகவல்களோடு வரைந்திருக்கும் மனோகரின் ஓவியங்கள் அழியாப் புகழ்பெற்றவை. பல்வேறு கலாசார அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் மதுரை நகரின் முக்கியமான ஆவணம் இவரின் புத்தகம். சென்னை நகரின் தொன்மை பற்றி இவர் `Madras inked’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை உருவாக்கி வருகிறார்.
0 Comments