`காமராஜர் முதல் ஸ்டாலின் வரை…’ – `தமிழ் கடல்’ நெல்லை கண்ணன் அரசியல் பயணம்!

சைவ சித்தாந்த தமிழறிஞர்களில் மிக முக்கியமானவர் நெல்லை கண்ணன். 1945-ம் ஆண்டு ஜனவரி 27-ல் திருநெல்வேலியில் விவாசயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோரான சுப்பையா பிள்ளை – இலக்குமி அம்மாள் இவருக்கு இட்ட பெயர் கிருஷ்ணன். இளம் வயதிலேயே தமிழால் ஈர்க்கப்பட்ட இவர், அந்தப் பெயரை கண்ணன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார். பாரதி மேல் தனித்த பாசம் கொண்ட இவர், காமராஜர், கண்ணதாசன் போன்ற ஆளுமைகளோடு நெருக்கமாக இருந்தவர். காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர்களுள் முக்கியமானவர் நெல்லை கண்ணன். தேசியவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கண்ணன், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

இலக்கியம், சைவ சித்தாந்த மேடைகள் மட்டுமல்லாது, அரசியல் வட்டாரத்தில் இவரது பேச்சுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. மேடைப் பேச்சில் வல்லவரான கண்ணனுக்குப் பேச்சுதான் உயிர் மூச்சு.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலான 1977 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் கண்டார். தி.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவைத் தொடங்கிய எம்.ஜி.ஆருக்கு ஆதரவான அலை தமிழகம் முழுவதும் வீசிய அந்தத் தேர்தலில், நெல்லை கண்ணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் எட்மண்டுவிடம் சுமார் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியாகப் போட்டியிட்ட 1980 தேர்தலில் நெல்லை கண்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.  எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு நடந்த 1989 தேர்தலில் மீண்டும் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட கண்ணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.எல்.சுப்பிரமணியத்திடம் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். காங்கிரஸ் கட்சியில் இளம் வயதில் இருந்தே பயணித்த கண்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர், துணைத் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர். 1996 தேர்தலில் காலம் இவருக்கு வித்தியாசமான வாய்ப்பை வழங்கியது. அ.தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் சார்பில், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தி.மு.க தலைவர் கருணாநிதியை எதிர்த்து நெல்லை கண்ணனை அந்தக் கட்சி களமிறக்கியது. அந்தத் தேர்தலில் கருணாநிதி சுமார் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

கருணாநிதி
கருணாநிதி

நெல்லைக் கண்ணனின் வாக்கு வன்மைக்கு ஒரு சம்பவத்தைச் சான்றாகச் சொல்வார்கள். 1984 தேர்தலின்போது தமிழக காங்கிரஸின் முக்கியமான தலைவராக சிவாஜி கணேசன் விளங்கினார். அப்போது, நெல்லையில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிவாஜி கலந்துகொண்டு பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், சிவாஜியால் சரியான நேரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அப்போது, சிவாஜிக்குப் பதிலாக மைக் பிடித்து பேசத் தொடங்கினார் நெல்லை கண்ணன். சுமார் ஐந்து மணி நேரம் இடைவிடாமல் தனது பேச்சாற்றலால் கூட்டத்தையே கட்டிப்போட்டார் நெல்லை கண்ணன். காமராஜர் தொடங்கி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மூப்பனார் என காங்கிரஸ் தலைவர்களோடு நெருங்கிய நட்பு பாராட்டியவர். எந்த அளவுக்கு என்றால், நெல்லைக்குப் பிரசாரம் செய்ய வந்திருந்த ராஜீவ் காந்தி, இவரது வீட்டில் உணவருந்தும் அளவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கியவர்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

தமிழகத்தின் பழமையான காங்கிரஸ் தொண்டரான நெல்லை கண்ணன் அ.தி.மு.க-விலும் சில காலம் பயணித்தார். ஆரம்பம் முதலே திராவிட சித்தாந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வந்த கண்ணன், தி.மு.க-வையும் அதன் முன்னாள் தலைவர் கருணாநிதியையும் மிக அதிகமாக விமர்சித்தவர். துக்ளக் இதழில் அப்படி திமுகவையும் கருணாநிதியையும் விமர்சித்து இவர் எழுதிய கட்டுரைகள் பிரபலம். 1996 தேர்தலுக்கு சில மாதங்கள் இருந்த நிலையில், போயஸ் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். உறுப்பினர் கார்டோடு ஜெயலலிதா இவருக்கு கார் ஒன்றையும் பரிசளித்து பிரசாரம் பீரங்கியாக இருக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்ந்தியிருந்தார். ஒருவகையில் பார்த்தால் நாஞ்சில் சம்பத்துக்கெல்லாம் முன்னோடி நம்ம நெல்லை கண்ணன். அந்தத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்ற நிலையில், மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பினார். ஆனால், அதன்பிறகு அவர் அரசியல் மேடைகளில் அதிகம் பார்க்க முடியவில்லை. அதேநேரம், பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்களில் இவரது பேச்சு ஓங்கி ஒலித்துக் கொண்டே இருந்தது.  

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

மதுரை இளைய ஆதீனமாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டபோது, அதற்குக் கடுமையான எதிர்வினையாற்றினார் கண்ணன். `நித்தியானந்தனைக் கைது செய்தால், அருணகிரி நாதர் விடுதலையாவார்’ என்று முழங்கினார். இதற்காகத் தனது தலைமையில் மதுரை ஆதீன மீட்புப் போராட்டக் குழுவை உருவாக்கினார். பின்னர், நித்தியானந்தா வெளியேறியபோது தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். இதேபோல், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, ’கூடா நட்பு’ என்று அறிக்கை மூலம் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையிலும் கருணாநிதியைக் கடுமையாக விமர்சித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார். அரசியல் மேடைகளில் இருந்து ஒதுங்கியிருந்த நெல்லை கண்ணனை, 2019 குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்புப் போராட்டம் லைம் லைட்டில் கொண்டுவந்து நிறுத்தியது. SDPI சார்பில் 2019 டிசம்பரில் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் பேசியதற்கு பா.ஜ.க கடுமையான எதிர்வினையாற்றியது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நெல்லைக் கண்ணனைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்ற தலைவர்கள் போராட்டம் நடத்தினர். 2020 ஜனவரியில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நித்யானந்தா
நித்யானந்தா

தீவிர காங்கிரஸ் தொண்டராகவும் திராவிட எதிர்ப்பாளராகவும் தன்னை முன்னிறுத்திக் கொண்ட நெல்லை கண்னன், இறுதிக் காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். கடந்த ஆண்டு பெரியார் திடலில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் விருது வழங்கும் விழாவில் நெல்லை கண்ணனுக்கு காமராசர் கதிர் விருது வழங்கி, அந்தக் கட்சி இவரைக் கௌரவித்தது. அந்த மேடையில் கண்ணீருடன் நெல்லை கண்ணன் பேசியது பரவலாகக் கவனம் பெற்றது. `இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் வேறு யாருமில்லை. உங்கள் விழிவட்டப் பார்வையில் என்னையும் வைத்துக் கொள்ளுங்கள். 1985லேயே கருணாநிதி என்னை அழைத்தார். அப்போது இந்தப் புத்திக்கு உரைக்கவில்லை. இந்த அரசியல் அநாதைகள் என்னையும் அநாதையாக்குவார்கள் என்று..’ என அப்போது பேசியிருந்தார். அந்த வகையில் காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த நெல்லை கண்ணன், இப்போதைய முதல்வர் ஸ்டாலின் வரையில் மூன்று தலைமுறை தலைவர்களோடும் பழகிய முதிர்ந்த அனுபவம் கொண்டவர். அரசியல் மேடைகளிலும் இலக்கிய, சைவ சித்தாந்த மேடைகளிலும் தனது கணீர் குரலால், நெல்லைத் தமிழில் தாலாட்டிய நெல்லை கண்ணனின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு…!

Also Read: பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த தானிய பெட்டகம் – என்ன ஸ்பெஷல்?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top