மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் - நித்தியானந்தா

மதுரை ஆதீனத்துக்கும் நித்தியானந்தாவுக்கும் என்ன பிரச்னை… 2012-ல் என்ன நடந்தது?

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவரது அறை தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கிறது. மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியாக நித்தியானந்தா தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் - நித்தியானந்தா
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் – நித்தியானந்தா

தமிழகத்தின் தொன்மையான சைவ மடாலயங்களுள் ஒன்று மதுரை ஆதீனம். இதன் 292-வது மடாதிபதியாகக் கடந்த 1980-ம் ஆண்டு முதல் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரியர் இருந்து வருகிறார். தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட அருணகிரிநாதர், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக் கொண்டவர். குறிப்பாக தேர்தல் சமயங்களில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்து வந்தார்.

நித்தியானந்தா

மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை நியமித்து அருணகிரிநாதர் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 27-ல் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக அறிவித்தது அப்போது பெரிய அளவில் சர்ச்சையானது. இதையடுத்து, தனது அறிவிப்பை 2012 டிசம்பர் 19-ல் திரும்பப்பெற்றுக் கொண்டார் மதுரை ஆதீனம். மதுரை ஆதீனத்தில் தம்பிரான்கள் இல்லாததால், திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான், சுந்தரமூர்த்தி சுவாமிகளை இளைய ஆதீனமாக நியமித்தார் அருணகிரி நாதர். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாகவே குறிப்பிட்டிருந்தா நித்தியானந்தார். இதற்கு மதுரை ஆதீனம் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆவணங்கள் போலியானவை என்றும் வாதிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கடந்த 2018 மே மாதத்தில் மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்குத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்குகள் இப்போதும் விசாரணையில் இருக்கின்றன.

நித்தியானந்தா அறிக்கை

கைலாசா தனி நாட்டை உருவாக்கியிருப்பதாகக் கூறி யூ டியூபில் தினசரி சத்சங்கம் நடத்தி வருகிறார் நித்தியானந்தா. கைலாசா நாட்டுக்கென தனி நாணயங்களையும் அவர் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், தீவிர சுவாசக் கோளாறு காரணமாக மதுரையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தநிலையில், மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கும் நித்தியானந்தா, அந்த அறிக்கையில் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக தன்னைக் குறிப்பிட்டிருக்கிறார். இது சர்ச்சையாகியிருக்கும் நிலையில், மீனாட்சியம்மன் ஆலயத்தின் அருகே இருக்கும் மதுரை ஆதீனத்தின் அறை மூடப்பட்டு சீலிடப்பட்டிருக்கிறது. மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் போன்றவை இருக்கும் அந்த அறையில் வெளியாட்கள் யாரும் நுழைவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

Also Read – TN Budget: தமிழக பட்ஜெட் – பெட்ரோல் வரி ரூ.3 குறைப்பு… முக்கிய அம்சங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top