நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து மகளைக் கடத்த முயன்ற வி.ஏ.ஓ… என்ன நடந்தது?

நாகப்பட்டினத்தில் சாதி மறுப்புக் காதல் திருமணம் செய்த பெண்ணை, நீதிமன்ற வளாகத்திலேயே கடத்த முயன்ற கிராம நிர்வாக அலுவலரால் சர்ச்சை ஏற்பட்டது.

சாதி மறுப்புக் காதல் திருமணம்

புதுக்கோட்டை கீரனூர் பகுதியைச் சேர்ந்த பாரதியும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செம்பியன் மாதேவி கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவரும் தஞ்சாவூர் அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். இருவேறு சமூகங்களைச் சேர்ந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவெடுத்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் கடந்த 9-ம் தேதி கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது.

பாரதி
பாரதி

திருமணத்தை முறைப்படி பதிவு செய்வதற்காக வழக்கறிஞர் ஒருவர் துணையோடு நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்கள். அப்போது, `சில்லுனு ஒரு காதல்’ பட பாணியில் அங்கு காரில் வந்த பெண்ணின் தந்தை, மாமா உள்ளிட்ட உறவினர்கள் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சித்ததாகத் தெரிகிறது.

ஆனால், அவர்களுடன் செல்ல மறுத்த பாரதி, தன்னைக் காப்பாற்றுமாறு கூக்குரலிட்டிருக்கிறார். இதைக்கேட்ட அங்கிருந்த பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பெண்ணை அழைத்துச் செல்ல முற்பட்டவர்களைத் தடுத்ததோடு, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். பெண்ணின் தந்தையிடம் கேள்வியெழுப்பிய பெண் போலீஸ் ஒருவரிடம், தான் வி.ஏ.ஓ என்றும், தனது மகளை அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும் பதிலளித்திருக்கிறார். அந்தப் பெண்ணை மீட்ட போலீஸார் நீதிமன்றத்துக்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

கணவர் புகார்

மதன்ராஜ்
மதன்ராஜ்

இந்தசூழலில், தனது மனைவியைக் கடத்திச் செல்ல முயற்சிப்பதாக நாகை வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் மதன்ராஜ் புகார் பதிவு செய்தார். புகாரை அடுத்து இருதரப்பையும் அழைத்து போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், தனது கணவருடன் செல்லவே விரும்புவதாக பாரதி தெரிவித்தால், பெற்றோர், உறவினர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அவருக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பெண் வீட்டார் எழுதிக் கொடுத்ததாகத் தெரிகிறது. சமாதானப் பேச்சுவார்த்தையை அடுத்து மதன்ராஜ் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. நீதிமன்ற வளாகத்தில் புகுந்து பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சித்த பெண் வீட்டார் மீது வழக்குப் பதியாதது ஏன் என்ற சர்ச்சையும் ஒருபுறம் எழுந்திருக்கிறது.

Also Read – LocalBodyElection: ஒரு வாக்கு டு தரையில் அழுதுபுரண்ட வேட்பாளர் வரை – உள்ளாட்சித் தேர்தல் 15 சுவாரஸ்யங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top