ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவியின் புகைப்படம் இருந்தால்தான் தி.மு.க தேர்தல் வாக்குறுதியான உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று பரவிய தகவலால், ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் என்ற இடத்தில் பெண்கள் படத்தை மாற்றுவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உண்மை என்ன?
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு கடந்த ஆட்சியில் அ.தி.மு.க அரசு ரூ.2,500 உதவித் தொகையாக ரேஷன் கடைகள் மூலம் கடந்தாண்டு வழங்கியது. ஆனால், இந்தத் தொகை போதாது. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு உதவித் தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதையடுத்து, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண உதவியாக ரூ.4,000 கொடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் மே மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு தவணைகளாக ரூ.2,000 வீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி ரேஷன் கடைகள் மூலம் கொடுக்கப்பட்டது.
அதேபோல், தி.மு.க-வின் மற்றொரு தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்போதே புதிய ஸ்மார்ட் கார்டுக்காக விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகமானது. புதிதாகத் திருமணம் செய்துகொண்டவர்கள், பல்வேறு காரணங்களுக்காக குடும்ப அட்டை விண்ணப்பிக்காமல் இருந்தோர் என பல்வேறு தரப்பினரும் புதிய ஸ்மார்ட் கார்டுக்காக ஆன்லைன் மற்றும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கத் தொடங்கினர்.

சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் ஸ்மார்ட் கார்டுக்காக விண்ணப்பிக்கும் தகுதியானோருக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குடும்ப அட்டைக்காக விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. புதிதாக விண்ணப்பிப்போர் எண்ணிக்கை உயர்ந்ததால், சமீபத்தில் அரசின் இணையதளமான https://tnpds.gov.in/ முடங்கியது. இணையதளம் சரிசெய்யப்பட்டு இப்போது செயல்படத் தொடங்கியிருக்கும் நிலையில், வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆவணங்கள் சரிபார்க்கும் பணியும் தொடங்கியிருக்கிறது.
உரிமைத் தொகை

ஸ்மார்ட் கார்டில் குடும்பத் தலைவர் என்ற இடத்தில் குடும்பத் தலைவிகளின் புகைப்படம் இருந்தால்தான் மாதம்தோறு ஆயிரம் ரூபாய் தொகையைப் பெற முடியும் என்ற வதந்தி பரவத் தொடங்கியது. இதனால், ஸ்மார்ட்கார்டில் குடும்பத் தலைவிகளின் புகைப்படங்களை மாற்றக் கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை திடீரென உயரத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தகவலில் உண்மை இல்லை என்கிறார்கள் அரசு தரப்பில். இதுகுறித்து விசாரித்ததில், `உரிமைத் தொகை விவகாரத்தில் அரசிடம் இருந்து இதுவரை வழிகாட்டுதல்கள் எதுவும் வரவில்லை. அப்படி வரும் பட்சத்தில் அதுகுறித்து உரிய முறையில் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படும். குடும்பத்தலைவிகள் படம்தான் இருக்க வேண்டும் என்று அரசு எந்த இடத்திலும் அறிவுறுத்தவில்லை. உரிமைத் தொகை பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரர்களை அடையாளம் கண்டு அவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலேயே வழிகாட்டுதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் ஸ்மார்ட்கார்டில் குடும்பத் தலைவர் புகைப்படம் இருந்தாலும் உரிமைத் தொகை கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்றே தெரிகிறது’’ என்று தெரிவித்தனர். உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, விரைவில் அரசாணை வெளியாகும் என்று பதிலளித்தார்.
Also Read – உங்க ஸ்மார்ட் கார்டு அப்டேட்டடா இருக்கா… 90 நொடில தெரிஞ்சுக்கங்க..!
0 Comments