சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருக்கும் காஞ்சிரங்கால் ஊராட்சி திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரித்து வருவதை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். அந்த ஊராட்சியில் என்ன ஸ்பெஷல்?
காஞ்சிரங்கால் ஊராட்சி
சிவகங்கை அருகே இருக்கும் காஞ்சிரங்கால் ஊராட்சி 8 கிராமங்களை உள்ளடக்கியது. சுமார் 14,000 பேர் வசிக்கும் இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள், மீன் போன்ற உணவுக் கழிவுகள் தினசரி சேகரிக்கப்படுகிறது. சிவகங்கை நகராட்சி பகுதிகளில் இருந்தும் உணவுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மின்சாரமாக மாற்றப்படுகிறது. மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின்கீழ் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவை மின்சாரமாக மாற்றும் ஆலையைக் கடந்த 10-ம் தேதி அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 7 ஊராட்சிகளில் ரூர்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டியின் முயற்சியால் செயல்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் பிரதமர் மோடியின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.
திடக்கழிவு ஆலை
வீணாகும் சாப்பாடு, எச்சில் இலை, மீன், காய்கறிகள் போன்றவைகளை ஊராட்சியினர் வீடு வீடாகச் சேகரிக்கிறார்கள். காஞ்சிரங்கால் ஊராட்சியில் இருந்து மட்டும் தினசரி 100 கிலோ உணவுக் கழிவுகள் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இதுதவிர, சிவகங்கை நகராட்சி பகுதியில் இருந்தும் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அதன்பின்னர், அந்த குப்பைகளை நீரில் கரைத்து அங்குள்ள கிடங்கில் ஊற்றுகிறார்கள். அவை மீத்தேன் வாயுவாக மாற்றமடைகின்றன. அதன் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2 டன் வரை கொள்ளளவு கொண்ட இந்த ஆலை மூலம் தினசரி 220 கிலோவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆலையில் இருக்கும் 15 KVA ஜெனரேட்டரை ஒரு மணி நேரம் இயக்க 10 கியூபிக் மீட்டர் மீத்தேன் வாயு தேவை. 200 கியூபிக் மீட்டர் கேஸ் தயாரிக்கப்பட்டால், அதன்மூலம் ஜெனரேட்டரை 20 மணி நேரம் இயக்க முடியும்.
தற்போதைய நிலையில், தினசரி 200 கிலோ கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, 20 மின் கம்பங்களுக்கு மின்சாரம் அளிக்கப்படுகிறது. அத்தோடு, குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களுக்கான மின்சாரம், அரசு கட்டடங்களுக்குத் தேவையான மின்சாரமும் கிடைக்கிறது. விரைவில் 200 மின்கம்பங்களுக்கு மின்சாரம் கொடுக்கும் அளவுக்கு மின் உற்பத்தியை அதிகப்படுத்த இருப்பதாகச் சொல்கிறார் காஞ்சிரங்கால் ஊராட்சியின் தலைவர் மணிமுத்து. அதேபோல், இதிலிருந்து வெளிவரும் கழிவுப் பொருள் இயற்கை உரமாகப் பயன்படுகிறது. விவசாயத்துக்கு நுண்ணுயிர் சத்தாக இது பயன்படுகிறது.
You have noted very interesting points! ps decent website.Blog money