புளியந்தோப்பு கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்புக் கட்டடம் தொட்டாலே உதிரும் வகையில் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மீது கடந்த ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன் பேரவையில் வலியுறுத்தினார்.
புளியந்தோப்பு குடிசை மாற்றுவாரிய வீடுகள்
புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் ரூ.112.6 கோடி மதிப்பீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு கட்டப்பட்ட குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு இருக்கிறது. இந்த குடியிருப்பில் 864 வீடுகள் இருக்கின்றன. 2019ம் ஆண்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இந்தக் குடியிருப்புகள், கட்டி முடிக்கப்பட்டதும் கொரோனா சிகிச்சைக்காக மாநகராட்சி கையகப்படுத்தி, பயன்படுத்தி வந்தது. குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டவர்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், தாமதமாக 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதே, வீடு ஒன்றுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கேட்டதாகப் புகார் எழுந்தது.

இந்தநிலையில்தான், சமீபத்தில் பெய்த மழையால் குடியிருப்பு சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. சுவர்களில் இருக்கும் பூச்சு தொட்டாலே உதிர்வதாகவும் குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ, போட்டோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, குறிப்பிட்ட குடியிருப்பில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். ஐ.ஐ.டி குழுவை வைத்து ஆய்வு நடத்தி அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
பேரவையில் எதிரொலிப்பு!
இந்தசூழலில், புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு குறித்து பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் எழும்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன். தீர்மானத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், “புளியந்தோப்பு குடிசைமாற்று வாரியம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்பது ஊடகங்களில் செய்தியாக வெளியாகி இருக்கிறது. எனவே, இதனை கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
இந்த கட்டடம் 2018-ல் தொடங்கப்பட்டு 2019-ல் முடிக்கப்பட்டது. தொட்டால் விழும் கட்டடத்தை அ.தி.மு.க அரசு கட்டியுள்ளது. இந்த கட்டடம் முறைகேடாக கட்டப்பட்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் உள்ளது தெளிவாக தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சி கட்டிமுடித்த அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த கட்டடம் கட்டி முடித்த பிறகு இதற்கு சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் கட்டடம் தொடர்பான அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பேசினார்.
சர்ச்சையான ஒப்பந்ததாரர்

புளியந்தோப்பு பன்னடுக்கு குடியிருப்பைக் கட்டிக் கொடுத்தது பி.டி.எஸ் கட்டுமான நிறுவனம். கொங்கு நாடு கல்விக் குழுமத்தின் பொருளாளராக இருக்கும் தென்னரசு என்பவர் இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்து வருகிறார். புளியந்தோப்பு கேசவன் பிள்ளை பூங்கா குடியிருப்பு மட்டுமல்லாது, இந்த நிறுவனம் கட்டிக் கொடுத்த தடுப்பணைகளும் தரமற்ற நிலையில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. விழுப்புரம் அருகே உள்ள திரிமங்கலம் – தளவாணூர் இடையே தென்பெண்ணை ஆற்றில் பி.எஸ்.டி நிறுவனம் கட்டிய தடுப்பணை கடந்த ஜனவரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டாக உடைந்தது. திறக்கப்பட்ட நான்கே மாதத்தில் அந்தத் தடுப்பணை உடைந்தது அப்போதே சர்ச்சையானது. அதேபோல், காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓரத்தூர் – ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து ரூ.60 கோடியில் கட்டிய தடுப்பணை, செங்கல்பட்டு வயலூரில் பாலாற்றின் குறுக்கே ரூ.32 கோடியில் கட்டிய தடுப்பணை ஆகியவையும் தரமற்ற முறையில் இருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. இந்த நிறுவனம் மட்டும் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
Also Read – பேரவையில் எதிரொலித்த கொடநாடு வழக்கு…. 2017-ல் என்ன நடந்தது?





Tham gia cộng đồng game thủ tại Go88 để trải nghiệm các trò chơi bài, poker phổ biến nhất hiện nay.