kongu nadu

திடீர் கவனம் பெறும் `கொங்கு நாடு’ அரசியல்… தமிழகத்தைப் பிரிப்பது சாத்தியமா?

தமிழ்நாட்டைப் பிரித்து கொங்கு நாடு என்ற பகுதி உருவாக்கப்பட இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோஷம் முதல்முறையாக எழுவது இல்லை. வடமாவட்டங்களைப் பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸும் மேற்கு மாவட்டங்களைத் தனியாக கொங்கு நாடு எனப் பிரிக்க வேண்டும் என இப்போது தி.மு.க கூட்டணியில் இருக்கும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் ஈஸ்வரன் எம்.எல்.ஏ உள்ளிட்டோரும் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்தநிலையில், திடீரென இப்போது கொங்கு நாடு கோஷம் வலுப்பெற என்ன காரணம்?

தி.மு.க-வும் ஒன்றிய அரசும்!

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது. அப்போது முதல் அமைச்சர்கள் தொடங்கி அரசின் அதிகாரபூர்வ செய்திக் குறிப்புகள் வரை மத்திய அரசை ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. இது பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்.ஒன்றிய அரசு என்ற வார்த்தை ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதுதான். புதிதாகப் பயன்படுத்தப்படுவதில்லை’ என்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார். ஒன்றிய அரசு விவாதம் தமிழக அரசியல் களத்தில் வலுவாக எதிரொலித்துக் கொண்டிருந்த சூழலில் பா.ஜ.க தரப்பில் கொங்கு நாடு கோஷம் பதிலடியாகக் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

கொங்கு நாடு

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகனுக்கு சமீபத்திய மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போது, அரசு சார்பில் அவர் குறித்த விளக்கக் குறிப்பில் தமிழகம் என்று குறிப்பிடாமல் `கொங்கு நாடு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் அந்த கோஷம் வலுப்பெற முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது. போதாக்குறைக்கு தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி நாளிதழ் ஒன்று தமிழகத்தைப் பிரித்து கொங்கு நாடு என புதிய மாநிலம் அமைக்க இருப்பதாக வெளியிட்ட செய்தி பா.ஜ.க ஆதரவாளர்களால் வைரலாக்கப்பட்டது.

Modi - L murugan

தமிழகத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி கொங்கு மண்டலம் என்றழைக்கப்படுகிறது. இதில், 10 எம்.பி தொகுதிகளும் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளும் இருக்கின்றன. இதைத் தனியாகப் பிரித்து புதுச்சேரி யூனியன் பிரதேசம் போல தனி யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு முயற்சி செய்வதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அ.தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படும் இந்தப் பகுதியில் தி.மு.க பெருவாரியான தொகுதியில் தோல்வியைத் தழுவியிருந்தது. அதேபோல், பா.ஜ.க வெற்றிபெற்ற 4 தொகுதிகளில் மூன்று தொகுதிகள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவை.

ம.நீ.ம-வில் இருந்து விலகிய அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், சமீபத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். அப்போது பேசிய ஸ்டாலின், “ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு நாம் வெற்றி பெற்றிருந்தாலும், கோவை, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாததை எண்ணி நான் இப்போது வருத்தப்படுகிறேன். மகேந்திரன் போன்றவர்கள் தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால் கொங்கு மண்டலத்தில் தி.மு.க பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும். அந்தக் கவலை இல்லாதிருந்திருக்கும். இப்போது ஒன்றும் குறைந்துவிடவில்லை. லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக மகேந்திரன் வந்திருக்கிறார்” என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ-வும் அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவியுமான வானதி சீனிவாசன் ஃபேஸ்புக் பதிவு மூலம் இதுகுறித்து பேசியிருந்தார். `கொங்கு தேர் வாழ்க்கை என்று இறையனாரின் சங்கப்பாடல் காலம் முதல் கொங்கு நாடு என்ற வரையறை உண்டு. அண்ட நாடு, அரையன் நாடு, ஆறைநாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, ஒருவங்க நாடு,காங்கேயம் நாடு, காஞ்சிக்கோயில் நாடு, காவடிக்கன் நாடு, கிழங்கு நாடு, குறும்பு நாடு, தட்டையன் நாடு, தலையன் நாடு, திருவாவினன் குடி நாடு, தென்கரை நாடு, நல்லுருக்கன் நாடு, பூந்துறை நாடு, பூவாணிய நாடு, பொன்களூர் நாடு, மணல் நாடு, வடகரை நாடு, வாரக்கண் நாடு, வாழவந்தி நாடு, வெங்கால நாடு என்று 24 நாடுகள் உள்ளடக்கிய கொங்கு நாடு என்று கொங்கு மண்டல சதகங்களில் குறிப்பு இருக்கிறது.

MK Stalin - Mahendran

ஆகெழு கொங்கர் என்று பதிற்றுப்பத்திலும், கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே என்று புற நானூற்றிலும் கொங்கு தேசம் பற்றிய விரிவான சித்திரம் தமிழ் சங்ககால இலக்கியம் முழுக்க பரந்து இருக்கிறது. நாயக்கர்களின் காலத்திலும் கொங்கு பாளையப்பட்டுக்கள் என்று கொங்கு பகுதிக்கான வரி நடைமுறைகள் பிற பகுதிகளை விட தனியாகத்தான் இருந்திருக்கிறது. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பொருளில் மூதுரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது’ என்ற அவரது பதிவும் வைரலானது.

இந்த வாதத்துக்கு எதிராக தி.மு.க மட்டுமல்லாது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கருத்துத் தெரிவித்திருக்கின்றன. அமைதியாகவும், நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் மக்களிடம் வெறுப்பு மற்றும் பகை அரசியலை வளர்ப்பதற்கு கொங்கு நாடு என்ற விஷ விதை தூவும் ஒன்றிய அரசின் திட்டம் புலி வால் பிடித்த கதையாக முடியும் என்பதை எச்சரிக்கிறோம்’’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதேபோல்,பா.ஜ.க-வின் இந்த பிரிவினைவாத முயற்சி ஒற்றுமையை விரும்பும் தமிழக மக்களிடம் எடுபடாது’’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.

Kongu nadu

தமிழகத்தைப் பிரிப்பது சாத்தியமா?

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் Jammu and Kashmir Reorganisation Act கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அது ஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், ஆகஸ்ட் 9-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமானது. இதேபோல், கடந்த 2014-ல் ஆந்திராவை இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதா அப்போதைய காங்கிரஸ் அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல், தமிழகத்தைப் பிரிக்க வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே ஒரு மாநிலத்தைப் பிரிப்பது சாத்தியமாகும். நிர்வாக வசதிக்காகவும் மக்கள் தொகை அடிப்படையிலும் பிரிக்கிறோம் என்று மத்திய அரசு காரணம் கூறலாம் என்கிறார்கள். அதேநேரம், மாநில அரசின் ஒப்புதல் இன்றி மாநிலத்தைப் பிரிப்பது இயலாத காரியம் என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

Also Read – 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு… இந்தியாவின் 4-வது பெரிய குழுமம்! பஜாஜ் நிறுவன கதை தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top