Murugesan

சேலத்தில் ஒரு சாத்தான்குளம் சம்பவம்… போலீஸ் அடித்ததில் வியாபாரி பலி – என்ன நடந்தது?

சேலம் அருகே சோதனை சாவடியில் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரி முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். என்ன நடந்தது?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 11 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இதனால், தளர்வுகள் இருக்கும் பக்கத்து மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கி வரும் நிலை இருக்கிறது.

போலீஸ் எஸ்.ஐ. பெரியசாமி
போலீஸ் எஸ்.ஐ. பெரியசாமி

இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இடையபட்டி கிரமாத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் அவரது நண்பர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் வெள்ளிமலை கிராமத்துக்கு மது வாங்குவதற்காக சென்றிருக்கிறார்கள். அங்கு மது அருந்திவிட்டு கல்வராயன்மலை கிராமம் வழியாக சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்கள். அப்போது, பெத்தநாயக்கன்பாளையம் அருகே மலையாளப்பட்டி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீஸார் அவர்களை நிறுத்தி விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தகராறை அடுத்து போலீஸார் முருகேசனைத் தாக்கியிருக்கிறார். எஸ்.ஐ பெரியசாமி, வியாபாரி முருகேசனை லத்தியால் தாக்குவதை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். போலீஸ் தாக்குதலில் ரோட்டிலேயே மயங்கி விழுந்திருக்கிறார் முருகேசன். இதையடுத்து, அவருக்கு தும்மல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

முருகேசன்
முருகேசன்

முருகேசன் உயிரிழப்புக்குக் காரணமான போலீஸ் எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். `விடுங்க சார்… ஐயோ, அடிக்காதீங்க’ என போலீஸாரிடம் கெஞ்சும் வீடியோ வைரலானது. அதைத் தொடர்ந்து ஏத்தாப்பூர் சிறப்பு எஸ்.ஐ பெரியசாமி, சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு அவர் மீது குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், வியாபாரி முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதோடு போலீஸார் நடவடிக்கைக்குக் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தனர்.

தென்காசி சர்ச்சை

அபிதா

தென்காசி அருகே புளியேரை தாட்கோ நகர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் அந்தோணி மீது பொய் வழக்கு பதிவு செய்து போலீஸார் அவரைக் கடுமையாகத் தாக்கியதாக மகள் அபிதா புகார் கூறியிருக்கிறார். தனது தந்தை மீது ரேஷன் அரிசி கடத்தியதாக பொய்யாக வழக்கு செய்திருப்பதாகக் கூறி அபிதா செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் தாக்கியதில் கடுமையான காயங்களுடன் 50 வயதான, தனது தந்தை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அபிதா கூறியிருக்கிறார்.

Also Read – வீடியோகான் சகாப்தம் சரிந்த கதை… சறுக்கல் தொடங்கியது எங்கே?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top