தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பரவலைத் தடுக்க மே மாதம் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து, பலரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். பேரிடர் காலங்களில் பெறப்படும் நிதியானது முழுமையாக கொரோனா தொடர்பான தடுப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். வங்கிக்கணக்கு விபரங்களையும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் மற்றும் பல்கலைக்கழகத்தின் தலைவர் மேரி ஜான்சன் தமிழத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சத்தை வழங்கினார். பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழக மக்களுக்காக நிவாரண நிதியை வழங்கிய சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழக நிர்வாகத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தராகக் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட மரிய ஜீனா ஜான்சன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியாவின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக மத்திய அரசின் பெண்கள் மட்டும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்ட இவர், ஐ.நா-வுடன் இணைந்து செயல்படும் நிதி ஆயோக் குழுவில் இடம்பெற்றுள்ள 12 பெண்களில் ஒருவராவார்.
0 Comments