இந்திய மேப் உருவாகக் காரணமாக இருந்த சென்னை – 50 வருட வரலாறு தெரியுமா? #SollaMaranthaKadhai

எவரெஸ்ட் உயரமும் செயிண்ட் தாமஸ் மவுண்டும்!

‘மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே’ என்ற கிராமத்து சொலவடை மிக பிரபலம். ஆனால் அப்படியும் சில நிகழ்வுகள் அதிசயமாக நிகழ்ந்து வரலாற்றில் இடம் பெற்றுவிடுகின்றன. அப்படித்தான் ஒரு சம்பவம் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. எவரெஸ்ட் உலகின் உயரமான சிகரம் என்று அறிவித்ததற்கும், சென்னை பரங்கி மலைக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ஆம், எவரெஸ்ட் தான் உலகின் உயரமான சிகரம் என்ற கண்டுபிடிப்புக்கான காரணம் சென்னை பரங்கி மலை. புனித தாமஸ் மலை, சென்னை தாம்பரம் நெடுஞ்சாலையில் உள்ளது. எத்தனையோ பயணங்களில் அந்த மலையின் தூரக் காட்சியை பார்த்திருக்கலாம். பரங்கிமலை என்று உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படும் செயின்ட் தாமஸ்மவுண்ட், சென்னையின் புராதனத்தின் சாட்சியாக உறைந்துபோயிருக்கிறது.

Solla Marantha Kadhai
Solla Marantha Kadhai

‘இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ், கிறிஸ்துவ மதத்தைப் பரவச் செய்வதற்காக இந்தியாவுக்கு வருகை தந்து, அதன் தொடர்ச்சியாக தமிழகத்துக்கும் வருகை தந்திருக்கிறார். அவர் இறந்த பின்னர் அவரது நினைவாக இந்த மலையின் மீது ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.’ இது எல்லோருக்கும் சொல்லப்பட்ட கதை. ஆனால் வரலாற்றில் சொல்லப்படாமல் உறைந்து போய் நிற்கும் கதைகளும் இங்கு ஏராளம். அப்படி பரங்கி மலையைப் பற்றி சொல்ல மறந்த கதை இது. 

இன்று நாம் பயன்படுத்துவது போல சர்வசாதாரணமாக பூமியின் வரைபடத்தை (Map) பயன்படுத்த அனுமதி அப்போது இல்லை. வரைபடம் என்பது மிகவும் ரகசியமான ஒன்று. அது, மன்னர்களின் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். போர்க்காலங்களில்தான்  மட்டும்தான் அது வெளியே எடுக்கப்படும். மற்ற காலங்களில் திசையை வைத்தும், சூரியனை வைத்துமே தூரத்தைக் கணக்கிட்டு வந்தனர்.11-ம் நூற்றாண்டில் பெர்ஷியாவைச் சேர்ந்த அல்பெருனீ இந்தியாவுக்கு வந்து ஒரு வரைபடத்தை உருவாக்கி இருக்கிறார். ஆனால், அது முழுமையானதாக இல்லை.
அப்போது உருவான வரைபடங்கள் அடிப்படையான நிலவியல் விவரங்கள் இல்லாத காரணத்தால், பயணம் செய்வதும், சந்தை அமைப்பதும், எல்லையைப் பிரித்து நிர்வாகம் செய்வதும், படை நடத்திப்போவதும் நடைமுறைப் பிரச்னையாக இருந்தது. 

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது இந்த தேசம் பல்வேறு மன்னர்களின் கீழ் பிரிந்து கிடந்தது. மொத்த இந்தியாவிற்கான வரைபடம் என எதுவும் கிடையாது. மொத்த நிலப்பரப்பையும் மெல்ல தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், இதன் நிலப்பரப்பு குறித்த துல்லியமான தகவல்கள் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தனர். இந்த கருத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது தான் ‘இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு’ (The Great Trigonometrical Survey of India). நிலத்தை முக்கோணங்களாக பிரித்து அளந்ததால், இந்த பெயர் கொடுக்கப்பட்டது. ராபர்ட் கிளைவ் காலத்திலிருந்தே இந்தியாவை நில அளவை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அவர்கள் வணிக நோக்கத்துக்காகவும் உள்நாட்டுப் பிரச்னைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விருப்பப்பட்டதாலும் இந்தியாவின் நிலப்பரப்பு எவ்வளவு பெரியது, கடல் மட்டத்திலிருந்து ஒவ்வொரு ஊரும் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினார்கள்.

Solla Marantha Kadhai
Solla Marantha Kadhai

திப்புசுல்தானுக்கு எதிராக மைசூர் போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம் அது. அமெரிக்காவில் பதினைந்து ஆண்டுகள் சர்வேயராகப் பணிபுரிந்தபின், கிழக்கிந்திய கம்பெனியில் ராணுவ அதிகாரியாகச் சேர்ந்திருந்தார் வில்லியம் லாம்ப்டன். ஒரு நாள் இரவில் லாம்ப்டன் சார்ந்திருந்த ஆங்கிலேயப் படை ஸ்ரீரங்கபட்டினத்தைத் தாக்க நகர்ந்துகொண்டிருந்தது. வானில் விண்மீன்களின் நிலையைப் பார்த்து படை எதிர்த்திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்து படைத் தளபதியிடம் சொன்னார் லாம்ப்டன். போரின் திசையும் மாறியது. படை முதல்வர் வெல்லெஸ்லியின் அபிமானத்துக்குப் பாத்திரமானார். திப்புசுல்தானை வென்ற பிறகு, இந்தியாவின் மேல் தன் பிடியை இறுக்கத் திட்டமிட்ட பிரித்தானியர்கள் நாட்டின் வரைபடத்தை துல்லியமாக வரைய முற்பட்டனர். இந்த அணிக்கு லாம்ப்டன் தலைவரானார்.

லாம்ப்டன் இந்தப் பணியை எங்கிருந்து தொடங்கினார்…. இந்திய வரைபடம் உருவான சுவாரஸ்ய வரலாறு பற்றி தெரிந்துகொள்ள சொல்ல மறந்த கதையின் இந்த எபிசோடை முழுசா பாருங்க..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top