இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1952ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் முதல் 2016ம் ஆண்டு நடைபெற்ற 15வது சட்டப்பேரவைத் தேர்தல் வரை எலெக்ஷன் ரீவைண்ட்.
-
1 முதல் சட்டப்பேரவைத் தேர்தல் - 1952
* 1952ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 9 கட்டங்களாக நடைபெற்ற சென்னை மாகாணத்துக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 367 இடங்களில் 152 இடங்களில் வென்றது. சில கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் ராஜாஜி முதலமைச்சரானார். ஆந்திர மாநிலம் உருவாக்கத்துக்குப் பின்னர், 1954ம் ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காமராஜரை முதல்வராகத் தேர்வு செய்தனர்.
* ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட போது, சென்னை மாகாணத்தின் 140 தொகுதிகள் அந்த மாநிலத்துக்கும் 5 தொகுதிகள் மைசூருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 375-ல் இருந்து 231 ஆகக் குறைந்தது. -
2 இரண்டாவது தேர்தல் - 1957
* மொழிவாரி மாநிலங்கள் பிரிப்புக்குப் பின் 1957ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி சென்னை மாகாணத்தின் 205 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வென்றது. தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக காமராஜர் பொறுப்பேற்றார்.
* 1949ம் ஆண்டு திமுக உருவாக்கப்பட்ட பின்னர், அந்த இயக்கம் முதன்முதலில் இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. கட்சியாக அங்கீகரிக்கப்படாத நிலையில், 117 தொகுதிகளில் சுயேட்சையாகப் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் 15 தொகுதிகளில் வென்று, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அடுத்து சட்டப்பேரவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. -
3 மூன்றாவது தேர்தல் - 1962
* திமுகவிலிருந்து விலகி ஈ.வி.கே.சம்பத் தொடங்கிய தமிழ் தேசியக் கட்சி, காங்கிரஸில் இருந்து விலகி ராஜாஜி தொடங்கிய ஸ்வந்திரா கட்சி ஆகிய இரண்டு புதிய கட்சிகள் இந்தத் தேர்தலில் களம்கண்டன.
* 205 தொகுதிகளிலும் தனித்துக் களம்கண்ட காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி 139 இடங்களில் வென்றது. 142 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 50 இடங்களிலும் 68 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் மட்டுமே வென்றது. ஈ.வி.கே.சம்பத் மற்றும் ராஜாஜி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. காமராஜர் மீண்டும் முதல்வரானார். -
4 நான்காவது தேர்தல் - 1967
* தமிழகத்தில் அண்ணா தலைமையிலான திமுக முதல்முறையாக ஆட்சியமைத்த தேர்தல். 1967ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது விருதுநகரில் போட்டியிட்ட காமராஜரும் தோல்வியைச் சந்தித்தார். 234 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் 51 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
* கூட்டணி அமைத்து 173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக மட்டும் 137 இடங்களில் வென்றது. அதன் கூட்டணிக் கட்சிகள் 38 இடங்களில் வென்றன. 1967 மார்ச் 6-ம் தேதி முதல்வராகப் பதவியேற்ற அண்ணா, பதவியிலிருக்கும்போதே உடல்நலக் குறைவால் 1969ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி மறைந்தார். அதன்பின்னர் கருணாநிதி முதல்முறையாக முதல்வர் பதவியேற்றார். -
5 ஐந்தாவது தேர்தல் - 1971
* தமிழகத்தில் ஐந்தாவது சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 1971-ல் நடந்தது. அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதி தலைமையில் 203 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 184 இடங்களில் வென்றது. தமிழக முதல்வராக இரண்டாவது முறையாக கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார்.
* அண்ணா மறைவுக்குப் பின்னர் திமுக கருணாநிதி தலைவராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின் துணையோடு அவர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். இந்தத் தேர்தலில் நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார். -
6 ஆறாவது தேர்தல் - 1977
* திமுக தலைமையோடு ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு வெளியேறி 1972-ல் அதிமுக என்ற கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அதிமுக போட்டியிட்ட முதல் சட்டப்பேரவைத் தேர்தல். 1976ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியை இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசு கலைத்து, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. அதன்பின்னர், 1977ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
* முதல்முறையாக எம்.ஜி.ஆர் தலைமையில் தேர்தலைச் சந்தித்த அதிமுக 130 இடங்களில் வென்றது. அதிமுக தலைமையிலான கூட்டணி மொத்தமாக 144 இடங்களில் வென்று முதல்முறையாக எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வரானார். கருணாநிதி தலைமையிலான திமுகவால் 48 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. -
7 ஏழாவது தேர்தல் - 1980
* சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு கலைக்கப்பட்டதால், தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 1980ம் ஆண்டு மே 28ம் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக நடந்த மக்களவைத் தேர்தலில் வென்றிருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி இந்தத் தேர்தலில் வெற்றியைத் தக்கவைக்கவில்லை.
* எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக கூட்டணி 162 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அதிமுக 129 இடங்களில் வென்ற நிலையில், கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களிலும் வென்றன. மூப்பனாரின் இந்திரா காங்கிரஸ் - திமுக கூட்டணியால் 69 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. திமுக 37 இடங்களிலும் இந்திரா காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றன. -
8 எட்டாவது தேர்தல் - 1984
* எம்.ஜி.ஆர் கடைசியாகப் போட்டியிட்ட தேர்தல். இந்திரா காந்தி கொலை, ராஜீவ் காந்தியின் பாப்புலாரிட்டி, எம்.ஜி.ஆரின் உடல்நலக் குறைபாடு என முக்கியமான சூழலில் தேர்தல் நடந்தது. முந்தைய தேர்தலை விட இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி கூடுதலாக 25 இடங்களில் வென்று 195 தொகுதிகளைக் கைப்பற்றியது.
* அதிமுக 132 இடங்களிலும் காங்கிரஸ் 61 இடங்களிலும் வென்ற நிலையில், தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். கருணாநிதி, தேர்தலில் போட்டியிடத் தொடங்கிய பிறகு, அவர் இறக்கும் வரையிலும் அவர் போட்டியிடாத ஒரே தேர்தல் இதுதான். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 34 இடங்களைப் பிடித்தது. திமுகவால் 24 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. -
9 ஒன்பதாவது தேர்தல் - 1989
* எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெ.அணி, ஜா அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபடவே அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. அதிமுக இரண்டு பிரிவுகளாப் பிரிந்து போட்டியிட்ட இந்தத் தேர்தலில் திமுக 13 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் வெற்றிபெற்றது.
* 1989 ஜனவரி 21ம் தேதி நடந்த தேர்தலில் வெற்றிபெற்று கருணாநிதி ஆட்சியைப் பிடித்தது. திமுக 150 இடங்களில் வென்றது. ஜெ.அணி 27 இடங்களிலும் ஜா.அணி 2 இடங்களிலும் வென்றன. கருணாநிதி தலைமையிலான திமுக அரசை, அப்போதைய பிரதமர் சரண் சிங் தலைமையிலான மத்திய அரசு, 1991-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி கலைத்தது. -
10 பத்தாவது தேர்தல் - 1991
* ஜெ.அணி - ஜா.அணி ஒண்றிணைந்ததால், இரட்டை இலை சின்னத்தை மீட்டு அதிமுக ஜெயலலிதா தலைமையில் தேர்தலைச் சந்தித்தது. 24 ஜூன் 1991ல் நடந்த தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
* ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகான இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 225 இடங்களில் வென்று, ஜெயலலிதா முதல்முறையாக தமிழக முதல்வரானார்.
* கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி இந்தத் தேர்தலில் 7 இடங்களில் மட்டுமே வென்றது. திமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. -
11 பதினோராவது தேர்தல் - 1996
* 1991ம் ஆண்டு முதல்முறையாக ஆட்சிப்பொறுப்பேற்ற ஜெயலலிதா அரசு கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது. சுதாகரனுக்கு ஜெயலலிதா நடத்திய ஆடம்பர திருமணம் போன்றவை 1996ம் ஆண்டு மே 2ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவைக் கொடுத்தது. பர்கூரியில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வியைத் தழுவினார்.
* திமுக கூட்டணி 221 இடங்களில் வெற்றிபெற்றது. நான்காவது முறையாக கருணாநிதி தமிழக முதல்வரானார். அதிமுக கூட்டணியால் 4 இடங்களுக்கு மேல் வெற்றிபெற முடியவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் தகுதியைக் கூட அதிமுகவால் பெற முடியவில்லை. தமிழ் மாநில காங்கிரஸின் சோ.பாலகிருஷ்ணன் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். -
12 பன்னிரெண்டாவது தேர்தல் - 2001
* 2001ம் ஆண்டு மே 10-ம் தேதி நடந்த தேர்தலில் அதிமுக 196 இடங்களில் வென்றது. அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், ஊழல், கிரிமினல் வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர் முதல்வராக முடியாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால் அவர் பதவியேற்க முடியவில்லை.
* 2001ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் முதல்முறையாகப் பதவியேற்றார். தன்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலையான ஜெயலலிதா 2002ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி மீண்டும் முதல்வரானார்.
* கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி 37 தொகுதிகளில் மட்டுமே வென்றது. -
13 பதிமூன்றாவது தேர்தல் - 2006
* 2006ம் ஆண்டு மே 8-ம் தேதி நடந்த தேர்தலில் திமுக 96 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 1952ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் முதல்முறையாக எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவோடு திமுக ஆட்சியமைத்தது. கருணாநிதி ஐந்தாவது முறையாக தமிழக முதல்வரானார்.
* அதிமுக தலைமையிலான கூட்டணி 69 இடங்களில் வென்றது. முதல்முறையாக தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜயகாந்த் ஒரு இடத்தில் வென்றிருந்தாலும், பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் பிரித்தார். -
14 பதினான்காவது தேர்தல் - 2011
* 2011ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி 203 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அதிமுக மட்டுமே 150 இடங்களில் வென்றது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக 29 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
* திமுக 23 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக எதிர்க்கட்சியானது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். -
15 பதினைந்தாவது தேர்தல் - 2016
* 2016ம் ஆண்டு மே 26ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக அதிமுக வென்று ஆட்சியமைத்தது. 1984ம் ஆண்டுக்குப் பின் ஆளுங்கட்சி வெற்றிபெற்று இரண்டாவது முறையாக
234 தொகுதிகளிலும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டன.
* அதிமுக 134 இடங்களில் வென்ற நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி 97 இடங்களைப் பிடித்தது. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் கடைசித் தேர்தலாக இது அமைந்துவிட்டது. 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணத்துக்குப் பின் ஓ.பி.எஸ் முதல்வராகப் பொறுப்பேற்றார். பின்னர், கூவத்தூரில் அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, 2017ம் ஆண்டு பிப்ரவரி 16-ல் தமிழக முதல்வரானார்.
0 Comments