சாமியார்கள்

Samiyar: தமிழகத்தின் செம ஜாலி சாமியார்கள்… இந்த 9 பேரைப் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?

ஆன்லைனில் திடீரென வைரலான அன்னபூரணி அம்மா என்பவரது அருளாசி வழங்கும் நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்திருக்கிறார்கள். திடீர் லைம் லைட்டால் அவர் தலைமறைவானதாகவும் ஒருபுறம் போலீஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழகத்தில் சாமியார்கள் என்கிற பெயரில் எத்தனையோ போலிகளும் நடமாடி வருகின்றனர். அவர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திவிடும். சில ஜாலி சாமியார்கள் பற்றிக் கேட்டால் குபீரென சிரிப்பும் நமக்கு வந்துவிடுவதுண்டு.

அப்படி தமிழகத்தில் சமீப காலங்களில் திடீர் செய்திகளால் பிரபலமான 9 ஜாலி சாமியார்கள் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ஸ்ரீ பவித்ரா காளிமாதா

ஸ்ரீபவித்ரா காளிமாதா
ஸ்ரீபவித்ரா காளிமாதா

மாடர்ன் டிரெஸ், கழுத்து நிறைய நகைகள், ஹை-ஹீல்ஸ் செருப்பு, செம்பட்டை தலைமுடி என டிப்-டாப்பாக உடையணிந்து வந்த பெண் சாமியாரால் சமீபத்தில் பட்டுக்கோட்டை ஏரியா பரபரத்தது. பட்டுக்கோட்டை பாளையம் செம்பிரான்குளம் தென்கரையில் உள்ள ஸ்ரீஅக்கினி காளியம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வுக்கு வந்த அவர், தன்னை சாமியார் என்றழைக்கக் கூடாது; காளி மாதா என்றுதான் அழைக்க வேண்டும் என்று கூறிக் கொண்டார். மேலும், அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் பிரளயம் ஏற்படும் என்றும், மிகப்பெரிய அளவில் கடை அடைப்பும் நிகழும் என்று மீடியாக்களில் பேட்டி கொடுத்து பல்ஸை ஏற்றினார்.

ராஜேந்திரன் என்கிற அன்பே சிவம் சாமியார்

அன்பே சிவம் சாமியார்
அன்பே சிவம் சாமியார்

சதுரகிரி மலைக்குச் செல்லும் ஸ்ரீவில்லிப்புத்தூர் அடிவாரத்தில் முகாமிட்டிருந்தவர் ராஜேந்திரன் என்கிற அன்பே சிவம் சாமியார்’. கோவையைச் சேர்ந்த மருந்து நிறுவன அதிபர் கௌதம் என்பவருக்கு மூலிகைகள் என்கிற பெயரில் சில செடிகளைக் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் தனது உறவினர்கள் சிலருக்கு நோய்கள் குணமாகவே, அவரை கோவைக்கு அழைத்திருக்கிறார் கௌதம். வீட்டில் இடம் கொடுத்து தங்க வைத்திருந்த நிலையில், இரவோடு இரவாக வீட்டில் இருந்த 3 லட்ச ரூபாயுடன் அன்பே சிவம் சாமியார் மாயமாகியிருக்கிறார். அவருக்கு கௌதம் போன் செய்த நிலையில்,அன்பே சிவம்’ என்று கூறியபடி இணைப்பைத் துண்டித்ததோடு, போனையும் சுவிட்ச் ஆஃப் செய்திருக்கிறார். புகாரின் பேரில் போலீஸ் ரேடாரில் இருக்கிறார் அன்பே சிவம் சாமியார்.

யோகா சாமியார் சத்தியநாராயணன்

யோகா சாமியார்
யோகா சாமியார்

சென்னை கொளத்தூரில் சிறிய அளவில் தியான பீடம் அமைத்து தியானம், சொற்பொழிவு ஆற்றி வந்திருக்கிறார் யோகா சாமியார் சத்திய நாராயணன். நாளடைவில் பக்தர்கள் அதிகமாகவே, தியான பீடத்தை விரிவாக்கி அருகிலிருக்கும் இடங்களையும் வளைத்துப் போட்டிருக்கிறார். சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய அவர், 22 வயதுப் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோவில் கைதாகியிருக்கிறார். தான் 17 வயதாக இருந்தபோது பாட்டியுடன் சத்தியநாராயணன் தியான பீடத்துக்குச் சென்றதாகவும், மயக்க மருந்து கொடுத்து அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் கர்ப்பமடைந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து திருமணமான தனக்கு தற்போது பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.

Also Read:

IT Raids: ஐ.டி ரெய்டில் சிக்கும் பணம் என்னவாகும்… சோதனையிட அங்கீகரிக்கப்பட்டவர்கள் யாரெல்லாம்?

சென்னை `கஞ்சா சாமியார்’ சேகர்

கஞ்சா சாமியார் ராஜேந்திரன்
கஞ்சா சாமியார் ராஜேந்திரன்

சென்னை மயிலாப்பூர், ராயபுரம், ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் சாமியார் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீஸாருக்குப் புகார் சென்றிருக்கிறது. விசாரணையில் இறங்கிய போலீஸார், சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் சாமியார் ஒருவரைச் சுற்றி கல்லூரி மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை நோட் பண்ணியிருக்கிறார்கள். மப்டியில் அவரைச் சுற்றி வளைத்தபோது, சாமியார் வேடத்தில் கஞ்சா பொட்டலங்களை அவர் விற்று வந்தது தெரியவந்திருக்கிறது. சாமியார் வேடத்தில் இருந்தால் தன் மீது சந்தேகம் வராது என்று நினைத்து இந்த வேடத்தில் கஞ்சா விற்றதாக போலீஸாரிடம் கூறிய சேகரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. புழல் சிறையில் சேகர் அடைக்கப்பட்டிருக்கிறார்.

நாமக்கல் அணில்குமார் சாமியார்

அணில்குமார் சாமியார்
அணில்குமார் சாமியார்

நாமக்கல் மஞ்சநாயக்கனூர் மலைக்கரட்டில் இருக்கும் கருப்பணார் சுவாமி கோயிலுக்கு சில ஆண்டுகள் முன் வந்த அணில்குமார், அதை சுத்தப்படுத்தியிருக்கிறார். மடம் ஒன்றைக் கட்டி அருகிலிருந்த நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லி வந்திருக்கிறார். பேய் விரட்டும் வீடியோவை யூ டியூபில் போட்டால் நல்ல வியூஸுடன் வருமானமும் கிடைக்கும் என்று யாரோ ஒருவர் கொளுத்திப் போட வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ வைரலான நிலையில், பேய் ஓட்டுவதாகக் கூறி போதையில் பெண் ஒருவரை சரமாரியாக அணில் குமார் தாக்கிய சம்பவத்துக்குக் கண்டங்கள் குவிந்தன. யூ டியூப் வீடியோவால் போலீஸில் சிக்கிய அணில் குமார், சிறைவாசியாகியிருக்கிறார்.

செங்குன்றம் `யோகக்குடில்’ சிவக்குமார் சாமியார்

யோகக்குடில் சிவக்குமார்
யோகக்குடில் சிவக்குமார்

சென்னை செங்குன்றத்தை அடுத்த புத்தாகரம் பகுதியில் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து தனது பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர் சிவக்குமார். மதம் மறப்போம்; மனிதம் வளர்ப்போம்!’ என்ற பெயரில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயக் கடவுள்கள், மத குருமார்களை ஆபாசமாக சித்திரித்துப் பேசி பரபரப்பைக் கிளப்புவது இவரது ஸ்டைல். தமிழகம் முழுவதும் புகார்கள் இவருக்கு எதிராகக் குவிந்த நிலையில்,என்னுடைய ஆதரவாளர்களுக்கென பிரத்யேகமாக யூ டியூப் சேனல் நடத்தி வருகிறேன். மத குருமார்கள் யாரும் என்னுடைய வீடியோவைப் பார்க்க வேண்டாம் என்று தொடக்கத்திலேயே சொல்லிவிடுவேன். இதனால், என்னுடைய வீடியோவை நீக்க முடியாது’ என்று திருச்சி உறையூர் போலீஸில் தெனாவெட்டாக ஸ்டேட்மெண்ட் கொடுத்தவர். புகார்கள் அதிகரித்த நிலையில், சென்னை மாதவரம் தனிப்படை போலீஸார் சமீபத்தில் இவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

விளாத்திகுளம் அண்டா சாமியார்

அண்டா சாமியார்
அண்டா சாமியார்

தூத்துக்குடி விளாத்திகுளத்தைச் சேர்ந்த முனீஸ்வரன், அப்பகுதியில் வராகி ஜோதிட நிலையம் என்ற பெயரில் ஜோதிட நிலையத்தை நடத்தி வந்திருக்கிறார். காவி உடையுடன் வட்ட வடிவ கோடுகளுக்கு மத்தியில் அண்டாவில் நீர் நிரப்பி தியானம், பூஜைகள் செய்வது இவரின் ஸ்டைல். கரிசல்குளத்தைச் சேர்ந்த கணவரை இழந்த ஒரு பெண் இவரிடம் குறி கேட்கச் சென்ற நிலையில், `உன் கணவனின் ஆத்மா சாந்தியடையவில்லை. பரிகாரமாக உனது வீட்டை இடித்து, நான் சொல்லும்படி மாற்றியமைத்தால்தான் ஆன்மா சாந்தியடையும்’ என்று கூறியிருக்கிறார். பணமில்லை என்று சொன்ன அவரின் தாலிச் செயினைப் பெற்றுக்கொண்டு 30,000 ரூபாய் கொடுத்து வீட்டை இடிக்கச் சொல்லவே, இந்த விவகாரம் வெளியில் கசிந்திருக்கிறது. புகாரின் பேரில் இப்போது சிறையில் தியானம் செய்துகொண்டிருக்கிறார் அண்டா சாமியார்.

வேலூர் சாந்தா சாமியார்

சாந்தா சாமியார்
சாந்தா சாமியார்

வேலூரை அடுத்த திருவலம் பகுதியில் இருக்கும் ஸ்ரீ ஸர்வமங்கள பீடத்தின் மடாதிபதியாக வலம் வந்தவர் சாந்தா சுவாமிகள்’. சாந்தகுமார் என்ற இயற்பெயருடைய இவர் மீதான புகார் கொஞ்சம் பகீர் ரகம். தன்னிடம் ஆசி பெற வந்த ஆண் பக்தர்களைக் கட்டியணைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற புகாருடன், ரூ.65 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும் இவர் மீது புகார் எழுந்தது. ஃபேஸ்புக் மெசெஞ்சர் மூலம் ஆண் பக்தர்களிடம் ஆபாசமாக சாட்டிங் செய்ததாகவும், தன்னுடைய ஆபாச புகைப்படத்தை அவர்களுக்கு அனுப்பி தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இவரை குண்டர் சட்டத்தில் வேலூர் காவல்துறை சிறையிலடைத்தது. 9 மாத சிறைவாசம் முடிந்து ஜாமீனில் வெளிவந்த சாந்தா சாமியார், சித்தேரி பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது ஆண் பக்தர்களை அழைத்தும் அவர்கள் அருகே செல்லவே அஞ்சியிருக்கிறார்கள். இதனால்,இனிமேல் ஆண் பக்தர்களைத் தொடவே மாட்டேன்’ என்று சபதமெடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாராம்.

திருச்சி தேஜஸ் சுவாமிகள்

தேஜஸ் சுவாமிகள்
தேஜஸ் சுவாமிகள்

திருச்சி மாவட்டம் அல்லித்துறை வன்னியம்மன் கோயில் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்தவர் `தேஜஸ் சுவாமிகள்’. கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியன். தொழிலதிபர்கள், வெளிநாட்டுப் பிரமுகர்கள் என இவரது கிளையண்ட் லிஸ்டால் குறுகிய காலத்தில் பிரபலமாகியிருக்கிறார். ரவுடிகள் என்கவுண்டர்கள் தொடர்பாகவும் வி.ஐ.பி ஒருவரின் வீட்டுக்கு சைரன் வைத்த காரில் சென்றது தொடர்பாகவும் வழக்கறிஞர் கார்த்திக் என்பவருடன் தேஜஸ் சுவாமிகள் பேசிய ஆடியோ கடந்த ஜூலையில் வெளியாகி திருச்சி ஏரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரௌடி ஒருவர் மீதான புகாரை வாபஸ் பெறும்படி டாஸ்மாக் மேலாளர் ஒருவரை மிரட்டிய புகாரில் சிக்கிய தேஜஸ் சுவாமிகளை பொன்மலை போலீஸார் கைது செய்தனர்.

உங்களுக்குத் தெரிந்த சில ஜாலி சாமியார்கள் பற்றி கமெண்டில் சொல்லுங்கள்

Also Read – Youtube-ன் TOP 10 Most viewed videos எதெல்லாம் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top