போலீஸார் நடவடிக்கைக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வீடியோ வெளியிட்ட டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி குறட்டைவிட்டு தூங்கியது தெரியவந்திருக்கிறது. என்ன நடந்தது?
சூர்யா தேவி

டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர் சூர்யா தேவி. நடிகர்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள் வரை பலரையும் விமர்சனம் செய்தே லைம்லைட்டுக்கு வந்தவர். இவர் சமீபத்தில் மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சிக்கா என்ற சிக்கந்தரை காலனியால் தாக்கிய வீடியோ வைரலானது. அவர் தன்னை அவதூறாகப் பேசியதால் தாக்கியதாகச் சொன்னார் சூர்யா தேவி. இதுதொடர்பாக சிக்கந்தர் அளித்த புகாரை அடுத்து மதுரை போலீஸார் சூர்யா தேவி மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.
தான் தேடப்படும் தகவல் அறிந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் சூர்யா தேவி. அந்த வீடியோவில், “வாழவே பிடிக்கவில்லை. எனக்கு வேறொரு பிரச்னை. நான் சாகப்போறேன். இந்த வீடியோவை மதுரை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப் போறேன். இதுக்குமேல என்னால உயிரோடு வாழ முடியாது. இதே இடத்துல உக்கார்ந்து எல்லா விஷயத்துக்கும் போராடியிருக்கேன். என் மனசளவுல நான் ரொம்ப பாதிச்சிருக்கேன். செத்துறலாம் போல இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல சாகப்போறேன்’’ என்று கூறியிருந்தார்.

மேலும், தனது இரண்டு குழந்தைகளையும் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் வில்லியம்ஸிடம் ஒப்படைக்கும்படி கூறியிருந்த அவர், வீடியோவை மதுரை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருந்தார்.
தூக்குக் கயிறு
இந்த வீடியோ கிடைத்தவுடன் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மணப்பாறை காந்தி நகரில் இருந்த சூர்யா தேவியின் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். தற்கொலை செய்யப் போவதாக சூர்யா தேவி கூறியிருந்த நிலையில், அவரது வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே சென்றதாகத் தெரிகிறது. வீட்டில் தூக்குக் கயிறை ஒருபுறம் தொங்கவிட்டுவிட்டு, சூர்யா தேவி பெட்டில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள் போலீஸார். இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், அருகிலிருந்த உறவினர் வீட்டில் சமாதானம் பேசி அவரை ஒப்படைத்து விட்டு வந்திருக்கிறார்கள் போலீஸார்.
0 Comments