விநாயகர் சதுர்த்தி விழாவுக்குக் கட்டுப்பாடுகள் விதித்தது ஏன் என்பது பற்றியும் விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்குக் கூடுதல் ஊக்கத் தொகை அளிப்பது பற்றியும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள்
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கத் தடை, ஊர்வலம், நீர் நிலைகளில் கரைக்கத் தடை என விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடப் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்திருக்கிறது. இதற்கு, பா.ஜ.க, இந்து முன்னணி சார்பில் கடும் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு, போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க நாகர்கோவில் எம்.எல்.ஏ காந்தி பேரவையில் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகப் பதிலளித்திருந்தார்.
பா.ஜ.க மீண்டும் கேள்வி
இந்தநிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக பேரவையில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்கவும், ஊர்வலங்கள் நடத்தவும் தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும். அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகாவில் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தமிழகத்திலும் அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
நயினார் நாகேந்திரன் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், `கேரள மாநிலத்தில் ஓணம், பக்ரீத் பண்டிகைகளுக்கு அனுமதி அளித்ததால்தான் கொரோனா தொற்று அதிகரித்தது. தமிழகத்தில் இன்னும் கொரோனா பாதிப்புக் குறையவில்லை. இதனாலேயே, பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு தடை விதித்திருக்கிறது. அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக விதிமுறைகளைக் கடைபிடித்து விழாவைக் கொண்டாடலாம். இதை யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.
மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் 12,000 தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஐந்தாயிரம் ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 3,000 தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணத்தொகையாக ரூ.5,000 சேர்த்து மொத்தம் 10,000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும்’’ என்றார்.
Also Read – விநாயகர் சதுர்த்தி 2021: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் – 7 சுவாரஸ்ய தகவல்கள்!