சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கான உயிர் காக்கும் சிகிச்சையை அரசே வழங்கும் வகையிலான `இன்னுயிர் காப்போம்’ திட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவந்திருக்கிறது. இதன் முக்கிய அம்சங்கள் என்ன?
இன்னுயிர் காப்போம் திட்டம்
தமிழகத்தில் சாலை பாதுகாப்பு, விபத்துகளில் உயிரிழப்புகளைக் குறைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்காக அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். சாலை விபத்துகளில் ஒரு லட்சம் பேரில் 23.9 என்றிருக்கும் இறப்பு விகிதத்தையும் குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில், சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு முதல் 48 மணி நேர சிகிச்சையை அரசே வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இன்னுயிர் காப்போம் திட்டம் என்ற பெயரில் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது. அதேபோல், தமிழகத்தில் சாலை பொறியியல், வாகன போக்குவரத்து, காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் பள்ளி, கல்லூரி கல்வித் துறைகளை இணைத்து கருத்துக்களின் அடிப்படையில் வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பல்துறை நிபுணர்கள் உள்ளடக்கிய `சாலை பாதுகாப்பு ஆணையம்’ என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சாலை பாதுகாப்பு திட்டங்களையும், வழிமுறைகளையும் , நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி அதிகாரங்களுடன் உருவாக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது.
சாலை பாதுகாப்பு ஆணையம்
மருத்துவம், போலீஸ், போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த ஆணையத்தில் இடம்பெறுவர். அறிவியல்பூர்வமான தரவுகள், ஏற்கனவே இருக்கும் தகவல்கள் அடிப்படையில் தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக ஆக்கப்பூர்வமான நடைமுறைகளை தொழில்நுட்பங்கள் உதவியோடு கொண்டு வர பரிந்துரை செய்வார்கள். இன்னுயிர் காப்போம் திட்டம், சாலை பாதுகாப்பு ஆணையம் இவற்றுக்காக புதிய சட்ட மசோதாக்கள் உருவாக்கப்பட்டு, வரும் ஜனவரியில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
எந்தெந்த மருத்துவமனைகள்?
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சாலை ஓரங்களில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. இதில், 182 அரசு மருத்துவமனைகளும் அடங்கும். விபத்தில் சிக்குவோர் இந்த மருத்துவமனைகளில் கட்டணம் எதுவுமின்றி முதல் 48 மணி நேரம் சிகிச்சை பெறலாம். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக் கட்டணத்தை அரசே வழங்கும். முதற்கட்டமாக இந்தத் திட்டத்துக்கு ரூ.50 கோடியை ஒதுக்கியிருக்கும் அரசு, செலவினத்தைக் கணக்கிட்டு பின்னர் இந்தத் திட்டம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
யாரெல்லாம் பயன்பெறலாம்?
இந்தத் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு அட்டை இல்லாதவர்களும் பயன்பெற முடியும். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், தமிழகத்துக்கு சுற்றுலா வரும் வெளி மாநில, வெளிநாட்டவரும் இதன்மூலம் சிகிச்சை பெறலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது.
சிகிச்சைகள் என்னென்ன?
நபர் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில் அறுவை சிகிச்சைகள் உள்பட 81 வகையான சிகிச்சைகள் வழங்கப்படும். சாலை விபத்தில் சிக்குவோருக்கு இலவசமாக உயிர்காக்கும் சிகிச்சைகளை விரைவாகக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்னுயிர் காப்போம் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் கிராம மக்களுக்கு அவசர முதலுதவி சிகிச்சைகள் தொடர்பான பயிற்சியையும் அரசு வழங்க இருக்கிறது. அதேபோல், சாலைகளில் விபத்துகள் அடிக்கடி நடக்கும் பகுதிகளுக்கு அருகே உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் கொண்ட 300 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட இருக்கின்றன. அந்த ஆம்புலன்ஸ்கள் விபத்தில் சிக்குவோருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்த சிறப்புப் பயிற்சி பெற்றவர்களால் இயக்கப்படும்.