சென்னையில் நடந்த குடியரசு தின விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டபோது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ரிசர்வ் வங்கி

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆர்.பி.ஐ -யின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி நாதன் விழாவில் கலந்துகொண்டு கொடியேற்றினார். நிகழ்ச்சி முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. அப்போது, அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் அமர்ந்துகொண்டிருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கும் நிலையில், அந்த அதிகாரிகளின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாக்குவாதம்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது ஏன் எழுந்து நிற்கவில்லை என்று சக ஊழியர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அப்போது, நாங்கள் ஏன் எழுந்து நிற்க வேண்டும் என்று கூறி அவர்கள் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றமே உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் அரசாணை குறித்து கேள்வி எழுப்பிய சக ஊழியர்களிடம், குறிப்பிட்ட அந்த ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
தலைவர்கள் கண்டனம்
இதையடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆர்.பி.ஐ ஊழியர்களுக்கு எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். `ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா?’’ என டிசம்பர் 12-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை நகலின் புகைப்படத்தைப் பகிர்ந்து தூத்துக்குடி எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேபோல், மதுரை எம்.பி சு.வெங்கடேசன்,RBI சென்னை தமிழகத்திற்குள் இல்லையா? 2021 டிச 17, அரசாணை தமிழ்நாட்டுக்குள் இருக்கும் அனைத்து அலுவலகங்களுக்கும் பொருந்தும். ரிசர்வ் வங்கி குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை’’ என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
புகாரும் போராட்டமும்
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரகத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ், ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆர்.பி.ஐ ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், சென்னை ஆர்.பி.ஐ அலுவலக வாயிலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி
இந்த சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை ரிசர்வ் வங்கியின் மண்டலத் தலைவர் எஸ்.எம்.என்.சுவாமி நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். மேலும், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்-ஐயும் அவர் சந்தித்துப் பேசினார்.
0 Comments