Smart card

உங்க ஸ்மார்ட் கார்டு அப்டேட்டடா இருக்கா… 90 நொடில தெரிஞ்சுக்கங்க..!

தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பழைய ரேஷன் அட்டைகள் மாற்றப்பட்டு ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கப்பட்டது. ஸ்மார்ட் கார்டுகள் ஏடிஎம் கார்டுகள் அளவில் சிப் பொருத்தப்பட்டு டிஜிட்டலாக மாற்றப்பட்டிருக்கின்றன. நியாய விலைக்கடைகளில் இருக்கும் பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் மிஷின்கள் மூலம் ரீட் செய்யப்பட்டு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதில், அரிசி குடும்ப அட்டை (PHHRICE, PHAA, NPHH, NPHH-L), சர்க்கரை குடும்ப அட்டை (NPHHS), அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்தப்படும் குடும்ப அட்டை (NPHHNC) என பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட் கார்டு – விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் புதிதாக ஸ்மார்ட் கார்டுக்கு ஆன்லைனில் அல்லது அருகில் உள்ள நியாய விலைக்கடைக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க பழைய ரேஷன் கார்டின் நகல், குடும்பத்தலைவரின் போட்டோ, இருப்பிடச் சான்று போன்றவை தேவை. இருப்பிடச் சான்றாக, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், சொத்துவரி நகல், தொலைபேசி பில், கியாஸ் பில், மின்சார வாரிய ரசீது, வாக்காளர் அடையாள அட்டை என இவற்றில் ஒன்றை நீங்கள் சமர்ப்பிக்கலாம். இவற்றை எல்லாம் டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துக் கொண்டு, https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Smart Ration Card

தமிழிலேயே கிடைக்கும் அந்த இணையதளத்தின் `பயனர் உள்நுழைவு’ ஆப்ஷனைப் பயன்படுத்தி, புதிய ஸ்மார்ட்கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பிறகு ஸ்மார்ட் கார்டின் நிலை குறித்தும் மேற்கூறிய இணையதளத்திலேயே தெரிந்துகொள்ள முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது முதல் டயலாக் பாக்ஸில் குடும்பத் தலைவரின் விவரங்கள், புகைப்படம் உள்ளிட்டவைகளைக் கொடுக்க வேண்டும். அடுத்ததாக குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும். புதிய கார்டுகள் குறித்த விவரங்களை சரிபார்ப்பதற்காக அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நீங்கள் ஒருமுறை நேரில் செல்ல வேண்டியதிருக்கும். ஆன்லைன் வசதி இல்லையென்றால் அருகில் இருக்கும் நியாய விலைக்கடைக்கு நேரில் விசிட் அடித்து, அங்கிருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். புதிய ஸ்மார்ட் கார்டுகள் விண்ணப்பம் அளிக்கப்பட்டு அதிகபட்சமாக 65 நாட்களுக்குள் உங்களுக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கும். அதேபோல், அருகில் இருக்கும் இ-சேவை மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

Smart Ration Card

https://www.tnpds.gov.in/ – இணையதளத்திலேயே ரேஷன் கார்டில் முகவரி திருத்தம், குடும்ப உறுப்பினர்களை நீக்குதல், சேர்த்தல் உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும். உங்கள் ஸ்மார்ட் கார்டு தொலைந்து விட்டால் மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி மூலம் புதிய ரேஷன் கார்டுகளை அருகிலிருக்கும் இ-சேவை மையத்தில் ரூ.30 செலவில் பெற்றுக்கொள்ளலாம்.

Smart Ration Card

அதேபோல், புகார்களையும் நீங்கள் இணையதளம் வாயிலாகவே பதிவு செய்ய முடியும். ரேஷன் கார்டுகள் தொடர்பாக உங்களுக்கு சந்தேகங்கள் அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் அருகிலுள்ள ரேஷன் கடையைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது அரசு உதவி மையத்தை 1967 (அ)18004255901 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

உங்க ஸ்மார்ட் கார்டு அப்டேட்டடா இருக்கா?

அரசின் இணையதளத்தில் முதன்முதலில் விசிட் அடிப்பவராக நீங்கள் இருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டு லாக் இன் செய்யலாம். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேப்சாவை அதற்குரிய இடத்தில் நிரப்புங்கள். அதன்பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபியைப் பதிவு செய்து லாக் இன் ஆகலாம்.

ஸ்மார்ட் கார்டு

உங்களுக்கான பிரத்யேக பேஜில் உங்கள் குடும்பத்தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர்கள் விவரம், கியாஸ் இணைப்புகளின் எண்ணிக்கை, வீட்டு முகவரி, ஸ்மார்ட் கார்டு எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், இணைக்கப்பட்ட ஆதார் அட்டை விவரங்கள், நியாய விலைக்கடையின் குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என ஒருமுறைக்கு இருமுறை பொறுமையாக செக் செய்யுங்கள். அந்த விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் உங்கள் ஸ்மார்ட் கார்டு அப்டேட்டாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அந்தத் தகவல்களில் எதுவும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தால், அதையும் உங்களால் செய்ய முடியும். உங்கள் ஸ்மார்ட் கார்ட் அப்டேட்டடா இருக்கானு இந்த இணையதளம் மூலம் ஒன்றரை நிமிடத்தில் தெரிந்துகொள்ள முடியும்.

Also Read – உங்க பெயர்ல எத்தனை சிம் கார்டு இருக்கு… கண்டுபிடிக்க ஈஸியான வழி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top