தனது பெயரைப் பயன்படுத்தத் தடை கோரி விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு, விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை என நடிகர் விஜய் தரப்பு சொல்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் என்ன நடக்கிறது?
விஜய் மக்கள் இயக்கம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய்க்கு முதல்முதலில் ரசிகர் மன்றத்தைத் தொடங்கியவர், திருச்சியைச் சேர்ந்த ராஜா என்பவர்தான் என்கிறார்கள். தீவிர எஸ்.ஏ.சி ஆதரவாளரான இவர், கடந்த 1993-ல் விஜய் ரசிகர் மன்றத்தை திருச்சியில் தொடங்கியிருக்கிறார். அதன்பின்னர், தமிழகம் முழுவதும் விஜய்க்கு ரசிகர் மன்றங்கள் உருவாகவே, ஒரு கட்டத்தில் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இதில், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி-யின் பங்கு ரொம்பவே முக்கியமானது. மக்கள் இயக்கத்தினர் எஸ்.ஏ.சி-யை `அப்பா’ என்றே அழைத்து வந்தனர்.
புஸ்ஸி ஆனந்த்
புதுச்சேரி மாநில காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான அஷ்ரப்பிடம் உதவியாளராக இருந்தவர் ஆனந்த். கடந்த 2006 தேர்தலில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் புஸ்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். தொடக்கம் முதலே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்த ஆனந்த், புஸ்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றதால், புஸ்ஸி ஆனந்த் ஆனார். தொடக்க காலங்களில் புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றத்தின் கௌரவத் தலைவராக இருந்து வந்த அவர், பின்னாட்களில் தலைவரானார். எம்.எல்.ஏவான பின்னரும் தொடர்ந்து ரசிகர் மன்றத் தலைவராக இருந்த அவர், விஜய்க்கு நெருக்கமானார். இது எஸ்.ஏ.சி-க்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், எஸ்.ஏ.சிக்கு நெருக்கமானவர்கள் ஒரு அணியாகவும் விஜய், புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கமானவர்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சர்ச்சை
இந்தநிலையில், மாஸ்டர் ஷூட்டிங்கின்போது நெய்வேலியில் இருந்த விஜய்யை அழைத்து வந்து நீலாங்கரை வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. அந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 2020 இறுதியில் நடிகர் விஜயை அரசியலுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக நாளைய முதல்வரே..’,
வருங்கால முதல்வரே..’ என்றெல்லாம் அழைத்து ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டினர். இந்த விவகாரம் விவாதமான நிலையில், புஸ்ஸி ஆனந்த் பெயரில் விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தது உண்மைதான்’ என்றார். ஆனால், விஜய்யின் ஒப்புதல் இன்றி அவர் செயல்பட்டது தெரியவந்தது. அப்போது, விஜய் மற்றும் எஸ்.ஏ.சி இடையிலான பிரச்னை வெளியே தெரியவந்தது. இதற்கிடையில், சில காலம் அமைதியாக இருந்து வந்தனர் இருவரும். சமீபத்தில், அண்ணா பிறந்தநாளை ஒட்டி மதுரை விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டரில்,வேண்டும் அண்ணா – மீண்டும் அண்ணா’ என்று அறிஞர் அண்ணா உருவில் விஜய்யைப் பொறுத்தி அரசியலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறி விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், `என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவா்கள் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தொிவித்துக் கொள்கிறேன்’’ என்று விளக்கமளித்திருந்தார்.
விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை
இந்தநிலையில், நடிகர் விஜய்யை அரசியல் தலைவர்களோடு ஒப்பிட்டு போஸ்டர் அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. புஸ்ஸி ஆனந்த் பெயரில் வெளியாகியிருந்த அந்த அறிக்கையில், `சமீப காலமாக, இயக்க தோழர்கள் ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் / ஆர்வகோளாறால் நமது தளபதி அவர்களை, பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை நமது தளபதி அவர்களுடைய படங்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தைப் பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.
ரசிகர்கள் / இயக்கத் தோழர்களின் இச்செயல்களை அவ்வப்போது தளபதி அவர்களின் அனுமதியின் பேரில் கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும் இப்படித் தொடர்வது வருத்தத்திற்குரியது.
இதுபோன்ற செயல்களை நமது தளபதி அவர்கள் என்றும் விரும்புவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும்பட்சத்தில், தளபதி அவர்களின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தளபதி அவர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன் ’’ என்று கூறப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் வழக்கு
இதேபோல், தன்னுடைய புகைப்படத்தையும், பெயரையும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோர் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சார்பில் சென்னை மாநகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனுவுக்கு எஸ்.ஏ.சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எஸ்.ஏ.சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், `28.2.2021-ம் தேதி நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கப் பொதுக்குழுக் கூட்டத்தில், நிர்வாகிகள் அனைவரும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அதையடுத்து, விஜய் மக்கள் இயக்கத்தைக் கலைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இயக்கம் கலைக்கப்பட்டது. தற்போது, விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை. இதுகுறித்து சங்கங்களின் பதிவாளருக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், எஸ்.ஏ.சி தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம்தான் கலைக்கப்பட்டது. நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அது கலைக்கப்படவில்லை என்று விஜய் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி விளக்கம் கொடுத்து வரும் நிலையில், வழக்கு விசாரணைக்கு வரும் அக்டோபர் 29-ம் தேதி இந்த விவகாரம் பற்றி நீதிமன்றத்தில் இருதரப்பும் தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டி வரும் என்கிறார்கள்.
Also Read – விஜய்யின் ஸ்லிம் ஃபிட்னெஸ்.. இதெல்லாம்தான் சீக்ரெட்ஸ்!