#JusticeforManikandan: முதுகுளத்தூர் மணிகண்டன் சந்தேக மரணம்… வலுக்கும் சர்ச்சை.. என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் பகுதியில் கீழத்தூவல் காவல்நிலையம் உள்ளது. இந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் கடந்த 4-ம் தேதி மாலையில் பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நீர்கோழியேந்தல் பகுதியைச் சேந்த லட்சுமணக்குமார் என்பவரின் 21 வயது மகன் மணிகண்டன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். காவலர்கள் தடுத்தும் வாகனத்தை நிறுத்தாமல் அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. உடனே, காவலர்கள் அவர்களை விரட்டிப் பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல்துறை மீது குற்றச்சாட்டு

கீழத்தூவல் காவல்நிலையத்தில் விசாரணை முடிந்த பின்னர் மணிகண்டனின் பெற்றோரை அழைத்து விபரத்தை தெரிவித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். மணிகண்டன் வீடு திரும்பிய பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்துள்ளார். காவலர்கள், மணிகண்டனை அடித்ததன் காரணமாகதான் மணிகண்டன் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி முதுகுளத்தூர் – பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஆனால், காவலர்கள், மணிகண்டன் பாம்பு கடித்து இறந்ததாக தங்களது தரப்பிலிருந்து தெரிவித்து வருகின்றனர்.

காவல்துறை விளக்கம்

அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், “மாணவர் மணிகண்டன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் என்று மக்கள் சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. மணிகண்டனுக்கு அறிவுரை சொல்லியே காவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர்” என அவர் விளக்கம் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி-யை ஆய்வு செய்ததில் மாணவரை காவலர்கள் தாக்கியதற்கான காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் மாணவரை பெற்றோர்கள் பத்திரமாக அழைத்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#JusticeForManikandan

காவலர்களது விளக்கத்தை ஏற்க மறுத்த உறவினர்களிடம் ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திருமலை மற்றும் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியலை மக்கள் கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து சந்தேக மரணம் 174-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாணவரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. மணிகண்டனை காவல்நிலையத்தில் இருந்தே மிகவும் முடியாத நிலையில் அவரது பெற்றோர்கள் அழைத்து சென்றதாகவும் வீட்டுக்குச் சென்று மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கிராம மக்கள் ரூ.1 கோடி இழப்பீடும் கேட்டு வருகின்றனர்.

கீழத்தூவல் காவல் ஆய்வாளர் லட்சுமி, எஸ்பி தனிப்பிரிவு காவலர் ஐயப்பன், காவலர்கள் செந்தில், பிரேம்குமார், லட்சுமணன் மற்றும் கற்பகம் உள்ளிட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மணிகண்டனின் சகோதரர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், காவலர்கள் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் சுற்றும் கடிதம் ஒன்றில், “நான் நீர் கோழியேந்தல் கிராமத்தில் குடியிருந்து வருகிறேன். நான் விவசாய வேலை செய்து வருகிறேன். இன்று (04-12-21) கீழ்த்தூவல் காவல் நிலையத்தில் எனது மகன் மணிகண்டன் விசாரணைக்காக இருந்தவரை இரவு நேரம் என்பதால் நாளை காலை 10 மணிக்கு தாங்கள் முன் தவறாமல் ஆஜர் படுத்துகிறேன். எனது மகன் மணிகண்டனை, நானும் எனது உறவுக்காரர் குமரையா மகன் இராமலிங்கம் ஆகிய இருவரும் நல்ல நிலையில் அழைத்து செல்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

கடிதம்

தலைவர்கள் கருத்து

மாணவரின் மரணம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் மாணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதுதொடர்பாக ட்விட்டரின் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

“ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சார்ந்த சகோதரர் மணிகண்டன் அவர்களுடைய மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. வாகன பரிசோதனையின் போது அழைத்துச் செல்லப்பட்ட சகோதரர் காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு எந்த மட்டத்தில் நடந்திருந்தாலும் கூட, உரிய தண்டனை அளிக்க வேண்டும். சகோதரரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

டிடிவி தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், மேலத்தூவல் கிராமத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.இந்நிகழ்வில் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் இதுகுறித்து டி.ஜி.பி. நேரடியாக தலையிட்டு, விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்திடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,காவல்துறையின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும், அவ்வப்போது மரணமடைவதும் தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் நடந்தேறியிருக்கிற தம்பி மணிகண்டனின் மரணம் கொலையாக இருக்கலாம் எனும் வாதத்தில் அடிப்படையில்லாமலில்லை. ஆகவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டனின் மர்ம மரணம் குறித்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Also Read : Pablo Escobar: 35 வயதில் உலகின் 7-வது கோடீஸ்வரன்; போதைப் பொருள் கடத்தல் மன்னன்- யார் இந்த பாப்லோ எஸ்கோபர்?

அ.தி.மு.க இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுகுளத்தூரில் உரம் வாங்க சென்ற 21 வயது மாணவன், வாகன சோதனையின்போது காவலர்களால் கைது செய்யப்பட்டதோடு, அவரது வாகனமும்,தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் பெற்றோர்கள் மகனை பார்த்தபோது நடக்கமுடியாமலும், உடல்நிலை சரியில்லாமல் ரத்த வாந்தி எடுத்ததாகவும், முக்கிய இடங்களில் வீக்கம் இருந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டதாக மாவட்ட SP தெரிவிக்கும் நிலையில் உடல்நிலை சரியில்லாமல் போனதும், உடலில் வீக்கங்களும் வந்ததும் எவ்வாறு? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே கேள்விக்குறியாக உள்ள நிலையில் இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடியா அரசு விசாரணையை தீவிரப்படுத்தி உண்மையை விளக்க வேண்டும். போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட மரணமெனில், காரணமானவர்களுக்கு தண்டனையை உறுதிசெய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top