Makedatu - Cauvery River

மேகதாது அணை விவகாரத்தில் என்ன பிரச்னை… வரலாறும் பின்னணியும்..!

மேகதாதுவில் அணை கட்டும் பணிகளை கர்நாடக அரசு தொடங்கியிருக்கும் நிலையில், இந்த விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. மேகதாது அணை பிரச்னையின் வரலாறு என்ன… பின்னணி என்ன?

காவிரி ஆறு

தென்னிந்தியாவின் புனித நதியாகக் கருதப்படும் காவிரி ஆறு தென்மேற்கு கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் பிரம்மகிரி மலையில் தலைகாவிரியாக உற்பத்தியாகி தென்கிழக்காக கர்நாடகா, தமிழ்நாட்டில் பாய்கிறது. காவிரி படுகையின் மொத்த நீளம் 81,155 ச.கி.மீ. இது நமது நாட்டின் மொத்தப் பரப்பளவில் 2.7%. கர்நாடகாவில் 34,273 ச.கி.மீ, தமிழகத்தில் 43,856 ச.கி.மீ, கேரளாவில் 2,866 ச.கி.மீ மற்றும் புதுச்சேரியில் 160 ச.கி.மீ என நான்கு மாநிலங்களில் விரிந்து கிடக்கிறது காவிரி படுகை. கர்நாடகாவில் 320 கி.மீ, தமிழகத்தில் 416 கி.மீ பயணிக்கும் காவிரி ஆற்றின் மொத்த நீளம் 800 கி.மீ.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் – கர்நாடகா இடையேயான பிரச்னை இன்று – நேற்று தொடங்கியதல்ல. 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட வரலாறு கொண்டது. நதி நீர் பங்கீடு தொடர்பாக மெட்ராஸ் ராஜ்தானி – மைசூர் இடையே 1892, 1924 என இரண்டு முறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன.

Makedatu

1974-ம் ஆண்டு முதல் கர்நாடகா காவிரி நீரை நான்கு நீர்த்தேக்கங்களுக்குத் திருப்பி வருகிறது. காவிரி நதி நீண்ட தூரம் பயணிக்கும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த வேலையில் கர்நாடகா ஈடுபட்டு வருகிறது. இது குறித்த பிரச்னையைத் தீர்ப்பதற்காகவே 1990-ல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பின்னரே, அதாவது 2007-ம் ஆண்டுதான் காவிரி நீரை 4 மாநிலங்களும் எந்தளவுக்குப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது குறித்த இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கமான மழைப்பொழிவு இருக்கும் காலங்களில் நான்கு மாநிலங்கள் இடையே நதி நீர் பங்கீடு குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பின்னரே 2013-ம் ஆண்டிலேயே அது அரசிதழில் வெளியானது.

இதை எதிர்த்து கர்நாடகா உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், அங்கு பின்னடைவைச் சந்தித்தது. தமிழகத்துக்கு 12,000 கியூசெக்ஸ் நீரை ஆண்டுதோறும் கர்நாடகா வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடகாவில் பரவலாகப் பெரும் போராட்டங்கள் நடந்தன. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018-ல் இறுதித் தீர்ப்பை அளித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அளிக்கும் கணக்கீட்டின்படி 4 மாநிலங்களும் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் எனவும் காவிரி ஆறு நாட்டின் சொத்து எனவும் உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடகாவுக்கு 284.7 டி.எம்.சி, தமிழகத்துக்கு 404.25 டி.எம்.சி, கேரளாவுக்கு 30 டி.எம்.சி மற்றும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி தண்ணீர் என பங்கிட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கான உத்தரவை முறையாக அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.

Makedatu

மேகதாது அணை திட்டம்

காவிரி ஆறு பயணிக்கும் பகுதியில் தமிழக எல்லையில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்துக்கு முன்பாக குறுகிய பாறைகள் மிகுந்து காணப்படும் பகுதியே ஆடுதாண்டும் காவிரி (மேகதாது). இந்தப் பகுதியில்தான் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த அணை, பெங்களூரு நகர குடிநீர் தேவைக்காகக் கட்டப்படுவதாகச் சொல்கிறது கர்நாடகா. கடந்த 2017-ம் ஆண்டு முதல்முறையாக இந்தத் திட்டத்துக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்தது. அப்போதைய மத்திய நீராதாரத் துறையிலும் ஒப்புதல் கிடைத்தது. அதன்பின்னர், சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்காகக் கோப்புகளை கர்நாடகா அரசு அனுப்பியது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரி வனச்சரலாயப் பகுதியின் 63% வனப்பகுதிகள் நீரில் மூழ்கும் என்பதால், சுற்றுச்சூழல் துறை அனுமதி இருந்தால் மட்டுமே அணை கட்ட முடியும்.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ல் வழக்குத் தொடரப்பட்டது. அணை கட்டப்பட்டால், தமிழகத்துக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச நீரும் கிடைக்காது என தமிழக அரசு வாதிடும் நிலையில், அதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறது கர்நாடகா. 2020 ஜூனில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வெளியான நாளிதழ் செய்தி ஒன்றில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டும் பணிகளைத் தொடங்கியிருப்பதற்கான புகைப்பட ஆதாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதே எதிர்ப்பைப் பதிவு செய்துவந்த தி.மு.க, ஆளுங்கட்சியான பின்னர் இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக கர்நாடக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. `மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்புத் தர வேண்டும். இதனால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது’ என்று கூறி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்துக்குப் பதில் கடிதம் எழுதியிருக்கும் ஸ்டாலின், “மேகதாது சமநிலை நீர்த்தேக்கப் பிரச்சினையில், 67.16 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கும் நோக்கம் கொண்டதாக இத்திட்டம் உள்ளது. தமிழ்நாட்டின் இரண்டு நீர்மின் திட்டங்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று கூற விரும்புகிறேன். இந்த இரண்டு நீர்மின் திட்டங்களில் நீர் பயன்பாடு இல்லை என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்துகிறேன். கிடைக்கக்கூடிய நீர் உச்ச மின் தேவையை பூர்த்தி செய்ய உந்தப்பட்டு மீண்டும் புழக்கத்தில் விடப்படுகிறது.

Makedatu

கூடுதல் பயன்பாடு எதுவும் உருவாக்கப்படவில்லை. இரண்டு திட்டங்களும் தமிழகத்தில் நீர்ப்பாசனம் அல்லது குடிநீர் பயன்பாட்டிற்கான நீர் கிடைப்பதை பாதிக்காது. எனவே, இத்தகைய வேறுபட்ட திட்டங்களை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், `பெங்களூரு நகரப் பகுதியின் தேவையைப் பூர்த்தி செய்ய கர்நாடகாவில் ஏற்கெனவே போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும்போது, ​​4.75 டி.எம்.சியைக் குடிநீர் தேவைக்காக 67.16 டி.எம்.சி சேமிப்புத் திறன் கொண்ட ஒரு நீர்த்தேக்கத்தின் தேவை என மேகதாது அணை கட்டப்படுவதாக நியாயப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது கட்டாயம் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைப்பதை பாதிக்கும்’ என்றும் அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read – கச்சத்தீவு வரலாறு… 1974 ஒப்பந்தத்தின் பின்னணி என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top