தமிழ்நாடு மின்சார வாரியம்

EB Bill: மின் கட்டணத்துக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறதா… உண்மை என்ன?

மின் கட்டணம் செலுத்தும் மின் நுகர்வோருக்கு தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் கொடுக்கப்படும் ரசீதில் ஜிஎஸ்டி தொகை குறிப்பிடப்பட்டு வசூலிக்கப்படுவதால், குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறதா… ஜிஎஸ்டி கவுன்சில் என்ன சொல்கிறது?

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி)

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

நாடு முழுவதும் இருந்த பல்வேறு வரி விதிப்புகள் நீக்கப்பட்டு 2017 ஜூலை 1-ல் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்குகள் மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி) நடைமுறைக்கு வந்தது. அப்போது, மின் கட்டணம், மின்வாரியம் அளிக்கும் இதர சேவைகளுக்கு ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டுமா என ஜிஎஸ்டி கவுன்சிலிடம் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். இதற்கு, கடந்த 2018-ல் பதிலளித்த ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகள், மின் கட்டணம் தவிர, மின்வாரியம் அளிக்கும் மற்ற சேவைகளான விண்ணப்பக் கட்டணம், மின் அளவி இடமாற்றக் கட்டணம், மின் அளவி வாடகை, உபகரணங்கள் சோதனைக் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு ஜி.எஸ்.டி வசூலிக்க வேண்டும் என்று விளக்கமளித்திருக்கின்றனர். அதேபோல், இந்தக் கட்டணத்தை ஜிஎஸ்டி அமலான 2017-ம் ஆண்டில் இருந்தே வசூலிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து, 2017-18 இடைப்பட்ட கால அளவில் மின்வாரியத்தின் இதர சேவைகளைப் பெற்ற 1.2 கோடி மின் நுகர்வோரிடம் இருந்து ரூ.34.52 கோடி நிலுவைத் தொகை வசூலிக்கப்பட வேண்டி இருப்பதாக மின்வாரியம் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Also Read:

IT Raids: ஐ.டி ரெய்டில் சிக்கும் பணம் என்னவாகும்… சோதனையிட அங்கீகரிக்கப்பட்டவர்கள் யாரெல்லாம்?

ரசீதில் ஜிஎஸ்டி

இந்தநிலையில், மின் கட்டணம் செலுத்தப்பட்டதற்காக மின்வாரியம் சார்பில் நுகர்வோருக்கு வழங்கப்படும் ரசீதில் ஜிஎஸ்டி எனக் குறிப்பிடப்பட்டு 18% தொகை வசூலிக்கப்பட்டது வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து, மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதைக் கைவிட வேண்டும் என அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. “மின் நுகர்வில் 100 யூனிட்டுக்கும் குறைவாகப் பயன்படுத்திய வீடுகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது அநியாயமாகும். சான்றாக திருச்சி மின் திட்டத்தில் மின் இணைப்பு எண் 464-ன் மின் கட்டணம் ரூ.95. இதற்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி ரூ.90 என்பதைத் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், வசூலிக்கப்பட்ட வரித் தொகையைக் கட்டணத்தில் வரவு வைத்து ஈடு செய்ய வேண்டும்’’ தி.மு.க கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியிருந்தார்.

மின்வாரிய ரசீது
மின்வாரிய ரசீது

அதேபோல், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பொருட்கள் (ம) சேவைகள் வரி குறித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது விமர்சனங்கள் வைத்துவிட்டு தற்போது முதலமைச்சராக பதவிக்கு வந்தபின் அதிமுக ஆட்சியில் பொருட்கள், சேவை வரி வசூலிக்காத இனங்களுக்கும் வரி வசூலிக்க உத்திரவிட்டு வருவது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை தோலுரித்து காட்டுகிறது’’ என்று விமர்சித்திருந்தார்.

தமிழ்நாடு மின்வாரியம் என்ன சொல்கிறது?

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி, `மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு தெளிவாக இருக்கிறது. மின்வாரியம் அளித்து வரும் இதர சேவைகளுக்கு 2018 ஏப்ரல் முதலே ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகுதான் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது போல் ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். அதில் உண்மையில்லை’’ என்று விளக்கமளித்திருந்தார்.

மின்வாரிய ரசீது
மின்வாரிய ரசீது

மின்வாரியத்தின் இதர சேவைகளுக்கான கட்டணங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது குறித்து ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்திலும் விளக்கப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு மின்வாரியம் தரப்பில் சொல்கிறார்கள்.

Also Read: Fuel Usage: மாதம் ரூ.2,000 கார் பெட்ரோல் பில்லில் மிச்சம் பிடிக்கலாம்… ஈஸியான 10 வழிகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top