கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரை வரதட்சணை கேட்டு கணவன் குடும்பத்தார் கொடுமை செய்தநிலையில், நீதிகேட்டு கண்ணீர் மல்க கொட்டும் மழையில் அவர் போராட்டம் நடத்தினார். என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை அருகே இருக்கும் திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த மொழிப்போர் தியாகி ஜேம்ஸ் என்பவரின் மகள் ஷீலா பிரியதர்ஷினி. வழக்கறிஞரான இவருக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த ராஜா ஷெரினுக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 9-ல் திருமணம் நடந்திருக்கிறது. இவர் அரசு பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசியராகப் பணியாற்றி வருகிறார். வரதட்சனையாக 65 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் 25 செண்ட் நிலம் ஆகியவை கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் வரதட்சணை கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இருந்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜாஷெரினின் தந்தை எலியாஸ், உறவினர்கள் ஷீலாவைக் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து, குளித்துறை மகளிர் காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்திருக்கிறார். அப்போது இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் கணவன் – மனைவி இருவரும் தனிக்குடித்தனத்தில் வசிக்க அனுமதியளித்திருக்கிறார்கள். அதன்படி நாகர்கோவிலில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருவரும் வசித்து வந்திருக்கிறார்கள்.
கொட்டும் மழையில் போராட்டம்!
சமீபத்தில் சொந்த ஊருக்குப் போய்விட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் ராஜாஷெரீன். அதன்பிறகு பல நாட்களாகியும் அவர் வீடு திரும்பாததால், கணவனைப் பல இடங்களிலும் தேடியிருக்கிறார் ஷீலா. இதையடுத்து, தனது மாமியாரைத் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டிருக்கிறார். அப்போது, கூடுதல் வரதட்சணை கேட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, குளித்துறை அருகே இருக்கும் திருத்துவபுரம் பகுதியிலுள்ள கணவரின் சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறார். அங்கு கணவர் இருப்பதாகக் கூறி வீட்டுக்குள் செல்ல முயற்சித்தபோது, அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை சாத்தியிருக்கிறார்கள்.
இதையடுத்து, தன்னை கணவரிடம் சேர்த்து வைக்கக் கோரி கண்ணீர் மல்க வீட்டின் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டார் பெண் வழக்கறிஞரான ஷீலா பிரியதர்ஷினி. “என் கழுத்துல தாலி கட்டினீங்கள்ல… வெளியே வாங்க.. நான் உங்களை விட்டுட்டு போக மாட்டேன். அதுக்கு நீங்க என்னைக் கொன்னுடலாம். வீட்ல வைச்சு நிறையவாட்டி என்னைக் கொல்ல டிரை பண்ணீங்கள்ல… அப்பவே என்னைக் கொன்னுருக்கலாம்ல’’ என்று கூறி கண்ணீர் மல்க வீட்டின் வெளியே தர்ணாவில் ஈடுபட்டார். காலை 8 மணி முதல் போராட்டம் நடத்திய நிலையில், மாலையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறி போகச் சொல்லியும் அவர் செல்ல மறுத்து கொட்டும் மழையில் தரையில் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸார் சாமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Also Read – சர்ச்சை பேச்சு… சாபம் – வைரல் பாதிரியார் `ஜார்ஜ் பொன்னையா’!