Farm Laws: `நாங்க விதை போட்டிருக்கிறோம்’ – வேளாண் சட்டம் வாபஸ்; டெல்லி விவசாயிகளின் ரியாக்‌ஷன் என்ன?

விவசாய உற்பத்தி, வியாபாரம், விவசாயிகள் விலை உறுதி ஒப்பந்தம் ஆகிய மூன்று சட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன. அந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி இந்த மூன்று சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

அந்த மூன்று சட்டங்கள் காரணமாக விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயரும் என்பது மத்திய அரசின் வாதமாக இருந்தது. ஆனால் , விவசாய சங்கத்தினர் தங்களது விளைபொருட்களில் பெரும் வணிக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிப்பார்கள் என்று குற்றம்சாட்டினார். பஞ்சாப் , ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் போராட்டத்தை தொடங்கினார்கள்.

வேளாண் சட்டங்கள் வாபஸ்

தற்போது இந்த போராட்டம் ஒரு வருடத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில், “நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்தோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம். ஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இது குறித்து புரியவைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆனாலும், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுகிறோம். வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டங்களைத் திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடுங்கள். போராடும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்” என்றார்.

விவசாயிகள் ரியாக்‌ஷன்

இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் களத்தில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரஜ்விந்தர் சிங்கிடம் பேசினோம். “எங்கள் குருவான குருநானக் பிறந்த நாளன்று இந்த அறிவிப்பு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டங்களை நீக்கிய பிறகுதான் வீடுகளுக்குத் திரும்புவோம். வெறும் அறிவிப்பு வந்தவுடன் இங்கே இருந்து யாரும் வீடு திரும்ப மாட்டோம். சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அது அமல்படுத்தப்பட்ட பின்னர்தான் கொண்டாட்ட மனநிலையோடு வீடு திரும்புவோம். இது இந்திய விவசாயிகளுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். போராட்டம் தொடங்கி ஒரு வருடத்துக்குப் பின்னர் தீர்வு கிடைச்சிருக்கு. இப்போது நாங்க விதை போட்ருக்கோம். இனி இந்தியா மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் விவசாயிகளோ, மக்களோ உறுதியுடன் போராடினால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். சுமார் 750 விவசாயிகள் இந்தப் போராட்டத்துல இறந்து போயிருக்காங்க. வெயில், பனி, மழைனு எல்லாக் கஷ்டங்களையும் அனுபவிச்சுட்டோம். இதுதவிர எங்கள் போராட்டத்துக்குள் தவறான ஆட்களை அனுப்பி போராட்டத்தை முடிக்கப் பார்த்தாங்க. இங்க நாங்க உறுதியுடன் நின்றோம். அதனாலதான் எங்க போராட்டத்துக்கு நிலையான வெற்றி கிடைச்சுருக்கு. எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களும் ரொம்ப உறுதுணையா இருந்தாங்க. அவங்களுக்கும் இந்த நேரத்துல நாங்க நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம். இனிமே மக்களுக்கு எதிரா சட்டங்களைப் போடுற அரசை எதிர்த்து நிலையா எல்லாரும் போராடணும். தேர்தல் நேரத்துல இந்த அறிவிப்பு வந்துருக்கு, இருந்தாலும் சந்தோஷப்பட வேண்டிய நேரம் இது” என்றார்.

ரஜ்வீந்தர் சிங்
ரஜ்வீந்தர் சிங்

“வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, அவருக்கு விவசாயிகள் மீதுள்ள அக்கறை காரணமல்ல. அடுத்த ஆண்டும் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் அச்சத்தால் தான் இன்று மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்” என எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

Also Read – Singapore: 200 ஆண்டுகளில் 25% நிலப்பரப்பை அதிகரித்த சிங்கப்பூர்… ஏன்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top