வங்கிகள்/நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கத் திட்டமிடுகிறீர்களா… உங்களுக்கான கடனை இறுதி செய்வதற்கு முன்னர், CIBIL Score என்ற மதிப்பீட்டை ஆய்வு செய்வார்கள். கடன் தொகை உடனடியாக அப்ரூவல் ஆக இந்த ஸ்கோர் அதிகமாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் கடன் தகவல் நிறுவனங்கள் என்கிற அடிப்படையில் 4 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது The Credit Information Bureau (India) Limited (CIBIL). மற்ற 3 நிறுவனங்கள் Experian, Equifax மற்றும் Highmark. இந்த நான்கில் முக்கியமானதாகப் பார்க்கப்படுவது சிபில் ஸ்கோர்தான்.
CIBIL நிறுவனம் இந்தியாவில் 60 கோடி தனிநபர்கள் மற்றும் 3.2 கோடி தொழில் நிறுவனங்களின் கடன் பற்றிய தகவல்களைப் பராமரித்து வருகிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் TransUnion என்கிற மல்டி நேஷனல் கம்பெனியின் ஒரு அங்கம்தான் CIBIL. இதனால், இந்த நிறுவனம் இந்தியாவில் அளிக்கும் ஸ்கோர் CIBIL Transunion score என்றும் அழைக்கப்படுவதுண்டு.
ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டு 3 இலக்க எண்ணில் சிபில் ஸ்கோர் அளிக்கப்படும். 300 முதல் 900 வரை அளிக்கப்படுவதுண்டு. 900-த்துக்கு நெருக்கமாக எந்த அளவுக்கு உங்களில் ஸ்கோர் இருக்கிறதோ அந்த அளவுக்கு கடன் பெறும் வாய்ப்பும் அதிகம்.
ஒரு கடனுக்காக விண்ணப்பிக்க நீங்கள் திட்டமிடும்போது, என்னுடைய கிரெடிட் ஸ்கோர் என்ன… கடன் வாங்க நாம் தகுதியானவரா போன்ற கேள்விகளை உங்களுக்குள் எழுப்பி விடை காணுங்கள். உங்களின் கிரெடிட் ஹிஸ்டரியை வைத்து நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கும் வங்கிகள் கிரெடிட் ரிப்போர்ட்டைப் பெறும். கிரெடிட் ஹிஸ்டரி என்பது நீங்கள் ஏற்கனவே எந்தெந்த வங்கிகளில் கடன் பெற்றிருக்கிறீர்கள், அவற்றை எப்படி திரும்பச் செலுத்தினீர்கள் போன்ற விவரங்களை வங்கிகள், அரசுகள், கலெக்ஷன் ஏஜென்சிகள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்களிடம் இருக்கும் தகவலாகும். உங்களது கடன் பற்றிய தகவல்களைக் கொண்டு உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படும்.
கிரெடிட் ஸ்கோர் ஆரோக்கியமானதாக உருவெடுக்க குறிப்பிட்ட கால அளவு எடுக்கும் என்பார்கள். பொதுவாக, ஒரு கடனைப் பெற்று 18 முதல் 36 மாதங்கள் அதை சரியாகத் திரும்பச் செலுத்தும்பட்சத்தில் உங்களின் கிரெடிட் ஸ்கோர் ஆரோக்கியமானதாக இருக்கும்.
வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் கேட்டு ஒருவர் விண்ணப்பிக்கும்போது, அவரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட்டைத்தான் அந்த நிறுவனங்கள் முதலில் ஆய்வு செய்யும். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும்பட்சத்தில், அந்த விண்ணத்தை மேற்கொண்டு பரிசீலிப்பதில்லை. அதேநேரம், கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், விண்ணப்பதாரர் கடன் கொடுக்கத் தகுதியானவரா என்பதை அறிய மற்ற காரணிகளை ஆய்வு செய்வார்கள்.
கடன் கொடுக்கும் நிறுவனங்கள், கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முதல் அடையாளமாக கிரெடிட் ஸ்கோரையே பார்க்கும். கிரெடிட் ஸ்கோர் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவருக்கு கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும். பொதுவாக, 700 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
நீங்கள் வாங்கிய கடன் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கான தவணையை உரிய நேரத்தில் சரியாகத் திரும்பச் செலுத்தும்பட்சத்தில், தாமாகவே உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும். கடனுக்கான தவணைகளை மிஸ் பண்ணாமல் கட்டுங்கள். கடன் விஷயத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், கிரெடிட் ஸ்கோர் ஒரு பிரச்னையாக உங்களுக்கு இருக்காது.
Also Read – புது வீடு வாங்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கியமான செலவுகள்!