`முண்டாசு’ தியேட்டர் விசிட்; வங்கிக் கணக்கு – அறிஞர் அண்ணா.. 9 சுவாரஸ்யங்கள்!

அண்ணாவோட இறுதி ஊர்வலத்துக்கு வந்த கூட்டம் கின்னஸ் ரெக்கார்டு… அண்ணாவைப் பற்றி தெரியாதவர்களுக்குக் கூட இந்த விஷயம் தெரியும். திராவிடக் கட்சிகளின் பிதாமகராக இருந்த அண்ணாவைப் பற்றி இதைத்தாண்டியும் தெரிஞ்சுக்க நிறைய குட்டி விஷயங்கள் இருக்கு. அப்படி அண்ணாவுக்கு இருந்த 9 வித்தியாசமான விஷயங்களைத் தான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

சட்டைப் பையில் காசு வைத்திருக்க மாட்டார்.

கூட்டத்துக்கு நடுவுல அண்ணா நின்னா இவர்தான் சி.எம்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அண்ணா ரொம்ப எளிமையா இருப்பார். கசங்கின வேட்டி சட்டைலதான் இருப்பார். வாட்ச் கட்டுறதோ, மோதிரம் போடுற பழக்கமோ அண்ணாவுக்கு கிடையாது. அதே மாதிரி சட்டைப் பையில் எப்பவுமே காசு வச்சுக்கமாட்டார்.

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

கணக்கு பிணக்கு

எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் இரண்டு முறை ஃபெயிலானவர் அண்ணா. இரண்டு முறையும் கணக்குதான் அவரை கவிழ்த்துவிட்டது. மூன்றாவது முறை கணக்கு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் ஆனார். அரசியலில் தீவிரமாக இருந்த காலத்தில் அண்ணாவின் பேச்சைக் கேட்க விடிய விடிய மக்கள் காத்திருந்ததெல்லாம் உண்டு. முதல்முதலாக அண்ணா மேடையில் பேசத்தொடங்கியது கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போது. அதுவும் தமிழில் இல்லை ஆங்கிலத்தில். அரசியலில் எதிர்துருவத்தில் இருக்கும் நேருவே வியந்து பாராட்டும்படி நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றியவர் அண்ணா. அவருடைய ஒவ்வொரு பொன்மொழியும் காலம் கடந்து இன்னைக்கும் பொருந்தும்.

உங்களுக்குப் பிடிச்ச அண்ணாவோட பொன்மொழி எதுனு கமெண்ட்ல சொல்லுங்க.

மூக்குப் பொடி பழக்கம்

அண்ணானாலே எல்லாருக்கும் தெரிஞ்ச இன்னொரு விஷயம் அவரு மூக்குப் பொடி போடுவாருங்குறது. ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். ஸ்கூல் படிச்ச காலத்துல ஒரு எக்ஸாம் எழுதிட்டு இருந்த அண்ணா பாக்கெட்ல கையவிட்டு ரகசியமா எதையோ எடுக்குறதை அவங்க வாத்தியார் பாத்திடுறாரு. என்னடா பிட் அடிக்கிறியானு புடிச்சு விசாரிச்சா, அது பிட் இல்லை மூக்குப் பொடி. ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்து அண்ணாவுக்கு இந்த பழக்கம் இருந்திருக்கு.

பெரியாரிடம் சம்பளம்… பெரியாருக்கே வாடகை

அண்ணாவுக்கு சம்பாதிச்ச காசை சேர்த்துவைக்கிற பழக்கமெல்லாம் இருந்ததே இல்லை. பெரியார்கிட்ட வேலை பார்த்தப்போ அவருக்கு சம்பளம் 60 ரூபாய் மாசம் கொடுப்பாராம். தன்னோட வீட்டுக்குப் பின்னாடியே ஒரு இடத்துலதான் பெரியார் அவரைத் தங்க வச்சிருந்தார். அந்த 60 சம்பளத்துல பாதியை பெரியாருக்கு வீட்டு வாடகைனு சொல்லி திருப்பிக் கொடுத்துருவாராம். அப்போது ஜி.டி நாயுடு ’60 ரூபாயெல்லாம் ஒரு சம்பளம் இதைவிட பலமடங்கு தர்றேன். என்கூட வந்துடுங்க’ என்று கேட்டும் மறுத்துவிட்டார்.

இவனுக்கா உதய சூரியன் சின்னம்?

தி.மு.கவைத் தொடங்கினப்பறம் முதன் முதல்ல தேர்தல்ல போட்டியிடுறப்போ அண்ணாவுக்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது. இந்த செய்தியைக் கேட்டதும் ‘இவனுக்கு போயா உதயசூரியன் சின்னம் கொடுத்தீங்க… இவன் வாழ்க்கைல சூரிய உதயத்தையே பார்த்ததில்லையே’ என்று விழுந்து விழுந்து சிரித்தாராம் அண்ணாவின் அம்மா. காரணம் அண்ணா விடியவிடிய எழுதிவிட்டு 2 மணிக்கு மேலதான் தூங்கவே போவாரு. எழுந்திருக்க மதியம் ஆகிடும். அண்ணா தம்பிக்கு எழுதிய கடித்தத்தை எப்படி முடிப்பார் தெரியுமா? ‘தம்பி.. சேவல் கூவுகிறது. நான் உறங்கச் செல்கிறேன்’

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

அசைவத்துக்கு மாற்றிய ரயில் பயணம்

சின்ன வயதில் கேட்ட ஒரு ஜீவகாருண்யம் சொற்பொழிவுனால 13 வயசுல இருந்து அண்ணா சைவம் மட்டுமே சாப்பிடுவாரு. ஒருமுறை பெரியாருடன் ஹரித்வாருக்கு ரயிலில் போய்க்கொண்டிருந்தப்போ, அங்க இருந்த கேண்டின்ல அரிசி சாதமும், காய்கறியும் கேட்டிருக்காரு அண்ணா, ஆனா அரிசி சாதமும் கறியும் கொடுத்திட்டாங்க. வேற வழி இல்லாம 15 வருடங்களுக்கு அப்பறம் அன்னைக்குதான் அசைவம் சாப்பிட்டிருக்காரு. அதுக்குப் பிறகு அண்ணா அசைவத்துக்கே மாறிட்டாரு. பிரியாணியும் மீனும் அண்ணாவுக்கு ரொம்ப பிடிக்குமாம். அட இந்த தகவல் புதுசா இருக்கேனு நினைக்குறவங்க ஒரு லைக்க போடுங்க.

மாறுவேடத்தில் தியேட்டர் விசிட்

அண்ணாவுக்கு சினிமா பார்க்குறது ரொம்ப பிடிக்கும். அதுவும் தியேட்டர்ல மக்களோடு உக்கார்ந்து சினிமா பாக்குறதுதான் அவருக்கு விருப்பம். முதல்வர் ஆனதுக்கு அப்பறம் நம்ம முதல்வன் அர்ஜூன் மாதிரி முண்டாசு கட்டிட்டு மாறுவேசத்துல தியேட்டருக்குப் போவாராம். அப்படி போனப்போ திருச்சி பிளாசா தியேட்டர்ல மாட்டிக்கிட்ட சம்பவமும் நடந்திருக்கு.

அழுக்கென்று சொல்லுக்கு அண்ணா

ஒரே வேட்டியை நாலு நாள் கட்டுவார் அண்ணா. அழுக்கு வெளிய தெரியாம இருக்குற முதல் நாள் நேராகவும் இரண்டாவது நாள் தலைகீழாகவும் மூன்றாவது நாள் அப்படியே உள்பக்கத்தை நேராகவும் நான்காவது நாள் தலைகீழாகவும் கட்டுவார். சட்டை பட்டனை ஒழுங்கா மாட்டமாட்டார். “சின்னக் குழந்தை மாதிரி குளிக்க அடம்பிடிப்பாரு. நாலு தடவையாவது கட்டாயப்படுத்தி சொன்னாதான் குளிக்கவே போவார்” என்று சொல்லியிருக்கிறார் அண்ணாவின் மனைவி.

Annadurai - Periyar
அண்ணா – பெரியார்

சொத்து இல்லை; கடன்தான் இருந்தது.

காசு சேர்ப்பதில் விருப்பமே இல்லாததால்தான் அண்ணாவுக்கு முதல்வர் ஆகுறவரைக்கும் வங்கிக் கணக்கே கிடையாது. சம்பளம் போடணுமேனு தான் அவருக்கு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டது. அண்ணா இறந்தப்போ அவரோட வங்கிக் கணக்கில் இருந்த பணம் 5,000 ரூபாய். அதே சமயம் அவருக்கு ஆயிரக்கணக்கில் கடன் இருந்தது. அந்த 5,000 கடனை எஸ்.எஸ். ராஜேந்திரன் நான் அடைக்கிறேன் என்று சொல்ல எம்.ஜி.ஆர் தடுத்தார். ‘இப்படியும் ஒரு முதல்வர் இருந்தாருனு மக்களுக்குத் தெரியட்டும். அவருடைய கடனை அடைக்க மக்கள்கிட்டேயே நிதி வசூலிப்போம். மக்களே அவருடைய கடனை அடைக்கட்டும்’ என்று நிதி திரட்டி அவருடைய கடனை அடைத்தார்கள்.

பேரறிஞர் அண்ணாவைப் பத்தின இந்த விஷயங்கள்லாம் உங்களுக்கு நிறையவே புதுசா இருந்துருக்கும்னு நம்புறோம். இதுல எந்த தகவல் உங்களுக்கு ரொம்ப பிடிச்சதுனு கமெண்ட்ல சொல்லுங்க. வேற யாரைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறீங்களோ அதையும் சொல்லுங்க.

Also Read – அறிஞர் அண்ணா – 6 சுவாரஸ்யத் தகவல்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top