தமிழ்நாடு சந்தித்த இடைத்தேர்தல்-கள்… இந்த சம்பவங்கள்லாம் தெரியுமா?

1957 தொடங்கி தமிழ்நாடு சந்தித்திருக்கும் இடைத்தேர்தல்கள் பற்றி தெரியுமா... அதில் முக்கியமான சில தேர்தல்களில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்..1 min


இடைத்தேர்தல்கள்
இடைத்தேர்தல்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாம்ன விவாதப் பொருளாகியிருக்கிறது. வழக்கமான தேர்தல்கள் மாதிரி இல்லாம இடைத்தேர்தல்கள் எப்பவுமே ஸ்பெஷல்தான்… இடைத்தேர்தல்கள்னாலே குறிப்பிட்ட தொகுதி மக்கள் பரபரப்பாகிடுவாங்க. அப்படி இதுக்கு முன்னாடி தமிழ்நாட்டுல நடந்த இடைத்தேர்தல்கள் பத்தியும், அதுல நடந்த சில சுவாரஸ்யங்களைப் பத்தியும்தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்… வாங்க தெரிஞ்சுக்கலாம்.

இடைத்தேர்தல்

எம்.பியோ, எம்.எல்.ஏவோ உயிரிழந்துவிட்டால், அந்தத் தொகுதியைக் காலியானதாகத் தேர்தல் ஆணையம் முதல்ல அறிவிக்கும். அதுக்கப்புறம், அவங்க இறந்து ஆறு மாதத்துக்குள் குறிப்பிட்ட தொகுதியில் தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரைத் தேர்வு பண்ணுவாங்க. அப்படி புதிய உறுப்பினரைத் தேர்வு செய்ய நடத்தப்படுறதுதான் இடைத்தேர்தல். பெரும்பாலான இடைத்தேர்தல்கள்ல ஆளுங்கட்சிகள் ஜெயிச்சதைத்தான் வரலாறு சொல்லுது. ரொம்பவே அரிதா எதிர்க்கட்சிகளும் ஜெயிச்சிருக்காங்க. அந்த சம்பவங்களைப் பத்திதான் பார்க்கப்போறோம்.

தேர்தல்
தேர்தல்

காங்கிரஸை ஓரங்கட்டிய 2 இடைத்தேர்தல்கள்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த 1957, 1962 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக வென்று தமிழகத்தில் ஆட்சியமைத்திருந்தது. காங்கிரஸ் தமிழகத்தில் வலுவாக இருந்த காலகட்டத்தில் 1962-ல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி, 1963-ல் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தல்கள் வரலாற்றை மாற்றி எழுதின என்றுதான் சொல்ல வேண்டும்.

திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல்

1962 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றிபெற்ற சுப்பராயம், மகாராஷ்டிர மாநில ஆளுநரானார். சில மாதங்களிலேயே அவர் உடல்நலக் குறைவால் உயிரிழக்கவே, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செங்கோடக் கவுண்டரும் திமுக சார்பில் செ.கந்தப்பனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கு பிரஜா சோசலிஸ்ட் கட்சி, தமிழ்த் தேசியக் கட்சி, சோசலிசக் கட்சி, ஜனசங்கம் மற்றும் மா.பொ.சியின் தமிழரசுக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. அத்தோடு ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலமும் முக்கியமான பங்காற்றின. மறுபக்கம் திமுகவை ராஜாஜியின் சுதந்திரா கட்சி மட்டுமே ஆதரித்தது. கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் செ.கந்தப்பன் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்தார். தமிழகத்தில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் வென்ற வரலாறு அதுதான் முதல்முறை.

திருவண்ணாமலை இடைத்தேர்தல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு விதை போட்ட தேர்தல் என்றே இந்த இடைத்தேர்தலைச் சொல்லலாம். திருவண்ணாமலை தொகுதியில் 1962-ல் வென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனிபிள்ளை 1963-ல் உயிரிழந்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் ப.உ.சண்முகம் போட்டியிட்டார். இவர் ஏற்கனவே சுயேச்சை வேட்பாளராக திருவண்ணாமலையில் 1957-ல் போட்டியிட்டவர். அத்தோடு 1962 தேர்தலில் திமுக வேட்பாளராகக் களமிறங்கி தோல்வி கண்டவர். அவருக்கே மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பளித்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் பத்ராசலம் நிறுத்தப்பட்டார். திமுக வளர்ச்சியைக் கண்ட முதல்வர் காமராஜர், அமைச்சர்களுடன் திருவண்ணாமலையிலேயே முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அனைவருக்கும் இலவசக் கல்வி, சீருடை, சத்துணவு… இதுமட்டுமில்லாமல், மதுரைக்கு அறிவித்த கூட்டுக் குடிநீர் திட்டத்தை விட அதிக பொருட்செலவில் ரூ.48 லட்ச ரூபாயில் திருவண்ணாமலைக்குக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் காமராஜர் அளித்தார்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

மறுபக்கம் திமுக, `வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது, காகிதப்பூ மணக்காது, காங்கிரஸின் சமதர்மம் இனிக்காது. மத்திய அரசு இந்தியைத் திணிக்கிறது, மெல்லத் தமிழ் இனி சாகும்’ போன்ற முழக்கங்களை முன்வைத்தது. திமுக வேட்பாளர் ப.உ.சண்முகம், 38,666 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பொதுக்கூட்ட மேடைகளில் முழங்கினர் திமுக தலைவர்கள். தேசிய அளவில் திமுகவின் வெற்றி எதிரொலித்தது. இதையடுத்தே, 1967 தேர்தலில் திமுக வென்று முதல்முறையாக தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏறியது.

Also Read – “டாஸ்மாக்கே இல்லாத பட்ஜெட் சாத்தியம்” – ஆராய்ச்சி எழுத்தாளர் ராம்தாஸ் கதை!

திருப்பம் கொடுத்த தென்காசி

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகம் சந்தித்த முதல் இடைத்தேர்தல் தென்காசி தொகுதி இடைத்தேர்தல்தான். 1967 தேர்தலில் தென்காசி தொகுதியில் வென்றிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சிதம்பரம் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, 1968-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி உள்பட 8 அமைச்சர்கள் தென்காசியில் முகாமிட்டு திமுகவுக்காகத் தேர்தல் வேலை பார்த்தனர். திமுக வேட்பாளராக சம்சுதீன் என்கிற கா.மு.கதிரவன் களமிறக்கப்பட்டார். முதலமைச்சர் அண்ணா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “ஒரு விருந்தில் இலை விரித்து அறுசுவை பண்டங்களையும் வைத்திருப்பதுபோல், தமிழக மக்கள் திமுகவுக்கு ஆட்சி என்ற விருந்தை அளித்திருக்கிறீர்கள். அதில் இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது ஊறுகாய் போன்றது. அறுசுவை விருந்தில் ஊறுகாய் இல்லாவிட்டால் எப்படி இருக்கும்?” என்று பேசினார். திமுக உறுப்பினராக இருந்த எம்.ஜி.ஆர், அப்போது எடுத்த புதிய பூமி படத்தில் கதிரவன் என்கிற கேரக்டரை ஏற்று நடித்தார். தென்காசி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இப்படியும் ஒரு பிரசாரத்தை திமுக முன்னெடுத்தது. காங்கிரஸ் வசமிருந்த அந்தத் தொகுதியை திமுக கைப்பற்றியது.

காமராஜரின் எளிமையை உணர்த்திய குடியாத்தம்

காமராஜர் ஆட்சிக்கு வந்தபோது குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகத் தனியாளாக திறந்த ஜீப்பில் ஏறி வேலூருக்குச் சென்றார் காமராஜர். குடியாத்தம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக வி.கே.கோதண்டராமன் என்பவர் காமராஜரை எதிர்த்து நிற்கிறார்..
தான் போட்டி இடுகிற குடியாத்தம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு எந்த ஒரு அமைச்சரும், அதிகாரிகளும் வரக் கூடாது என்றார். பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தபோது, நான் முதலமைச்சராக வரவில்லை. இங்கு கோரிக்கை மனுக்கள் வாங்குவது சரியாக இருக்காது. எதிர்க்கட்சி வேட்பாளர் வந்தால், அவரிடம் இப்படி கோரிக்கை மனுக்கள் கொடுப்பீங்களா என்று கேட்டார். காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை வாக்கு சேகரித்துவிட்டு, எந்த ஊரில் இருக்கிறாரோ அங்கு இருக்கும் காங்கிரஸ் தொண்டர் வீட்டில் இரவு உணவு முடித்துவிட்டு தூங்கியிருக்கிறார் காமராஜர். `என்னை எதிர்த்து நிற்கும் கம்யூனிஸ்ட் வேட்பாளரும் அப்பழுக்கற்றவர். அவரும் மக்களை நேசிப்பவர். என்னைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும். எல்லாத்தையும் யோசித்துப் பார்த்து வாக்களியுங்கள்’ என்று பெருந்தன்மையோடு பல இடங்களில் குறிப்பிட்டார் காமராஜர். அந்த இடைத்தேர்தலில் மக்கள் பெருவாரியான வெற்றியை காமராஜருக்கு அளித்தனர்.

காமராஜர்
காமராஜர்

2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடந்தன. இதில், மங்களூர் தொகுதி இடைத்தேர்தலில் மட்டும் எதிர்க்கட்சியாக இருந்த திமுக வெற்றிபெற்றது. மற்ற தேர்தல்களில் ஆளுங்கட்சியான அதிமுக வெற்றிபெற்றது. அதேபோல், 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் திருமங்கலம் உள்பட 11 தொகுதிகளுக்கான இடத்தேர்தல்கள் நடந்தன. இந்த 11 தேர்தல்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி ஆகியவையே வெற்றிபெற்றன.

திருமங்கலம் ஃபார்முலா

தமிழகம், ஏன் இந்தியா முழுமைக்கும் ஃபேமஸான இடைத்தேர்தல் என்றால் அது 2009-ம் ஆண்டு நடந்த திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல்தான் என்று சொல்லலாம். காரணம், வாக்காளர்கள் தெரு வாரியாகக் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வெகுவாக விநியோகிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுதான். அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு திருமங்கலம் தொகுதியில் வென்றிருந்த வீரஇளவரசன் மறைவுக்குப் பிறகு 2009-ல் திருமங்கலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக ஆட்சியில் இருந்த நிலையில், அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி தலைமையில் அக்கட்சி தேர்தலை சந்தித்தது. ஏற்கனவே நடந்த மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கும் மதுரை மேற்கு தொகுதி தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் வெற்றிக்கும் மு.க.அழகிரி உதவியிருந்ததால், எதிர்பார்ப்பு அதிகரித்தது. மதுரை சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் ஆளுங்கட்சியான திமுக மீது அதிருப்தி ஏற்பட்டிருந்த சூழல் அது. அப்படியான சூழலில் திமுகவின் வெற்றிக்கு அழகிரி பல்வேறு வியூகங்கள் வகுத்தார்.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

தொகுதி வாக்காளர்கள் மற்றும் குடும்பங்கள் எண்ணிக்கை முறையாக கணக்கிடப்பட்டு அவர்களுள் எக்கட்சியும் சாராத குடும்பங்களை குறிவைத்து பண வினியோகம் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின. மேலும் வெளியூர்களுக்கு சென்றிருந்தவர்களின் வீடுகளில் ஜன்னல்கள் மற்றும் கதவு இடுக்குகள் வழியாக பணப் பட்டுவாடா நடைபெற்றதாகவும் செய்தித்தாள்கள் மற்றும் வாக்காளர் சீட்டு ஆகியவற்றில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை மறைத்து விநியோகிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்தன. வெளியூரில் வசிப்போரை அழைத்து வந்து, அவர்கள் வாக்களித்ததும் ரொக்கம், பிரியாணி ஆகியவற்றை தந்து மீண்டும் அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எதிர்பார்த்தபடியே திமுக வேட்பாளர் லதா அதியமான், 79,422 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம், சுமார் 40,000 வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் ச.ம.க சார்பில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் வாக்கு சேகரித்தும், அந்த வேட்பாளரால் 831 வாக்குகளையே பெற முடிந்தது. இருப்பினும் பண பட்டுவாடா குறித்து எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்க முடியாததால், குற்றவியல் நடவடிக்கையோ அல்லது தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்யவோ இல்லை. அதேநேரம், பணம் புழங்கியது காரணமாகவே இது மோசமான முன்னுதாரணமாக அமைந்து, இன்றுவரை திருமங்கலம் ஃபார்முலா என்ற சொல்லாடல் அரசியல் களத்தில் நிலைத்துவிட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

திருமங்கலம் இடைத்தேர்தலைப் போலவே, தமிழக அரசியல் வரலாற்றில் இன்னொரு முக்கியமான இடைத்தேர்தல் என்று சொன்னால், அது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்தான். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ல் உடல்நலக் குறைவால் காலமானார். அதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டது. டிடிவி தினகரன் தனியாகக் களமிறங்கினார். சுயேட்சை வேட்பாளராக அவர் களமிறங்கிய நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவரான மதுசூதனன் நிறுத்தப்பட்டார். இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான திமுக சார்பில் மருது கணேஷ் களமிறக்கப்பட்டார். முதலமைச்சர், அமைச்சர்கள் என அரசு இயந்திரமே ஆர்.கே.நகரில் முகாமிட்டது. ஜெயலலிதா வெற்றிபெற்றிருந்த தொகுதி என்பதால், தமிழக அரசியல் களமே ஆர்.கே.நகர் பிரசாரத்தையும் முடிவையும் எதிர்பார்த்திருந்தது. ஒரு கட்டத்தில் ஜெயலலிதா உயிரற்ற உடல் போன்ற உருவ பொம்மையை வைத்தும் வாக்கு சேகரித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. 2016 தேர்தலின்போது ஆர்.கே.நகரில் ஜெயலலிதா, 39,544 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்தார். இந்தத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ரூ.20 விநியோகித்து, வெற்றிபெற்ற பிறகு அந்த ரூபாய் நோட்டைக் கொடுத்தால் பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று கூறி டிடிவி தினகரன் வாக்குறுதி கொடுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு கிளம்பியது. இந்த வெற்றி மூலம் 2004-க்குப் பிறகு முதல்முறையாக இடைத்தேர்தலில் வென்ற சுயேட்சை வேட்பாளர் என்கிற பெருமை பெற்றார் தினகரன்.

தமிழகம் எத்தனையோ இடைத்தேர்தல்களை சந்தித்திருக்கிறது. நேரம் கருதி அதில், குறிப்பிட்ட சில இடைத்தேர்தல்கள் பற்றி மட்டுமே இங்கே குறிப்பிட்டிருக்கிறோம். அப்படி இடைத்தேர்தல் சம்பவம் வேற எதாவது உங்களுக்குத் தெரியும்னா மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Subscribe Tamilnadu Now Youtube channel for more entertaining videos


Like it? Share with your friends!

505

What's Your Reaction?

lol lol
12
lol
love love
8
love
omg omg
40
omg
hate hate
8
hate

0 Comments

Leave a Reply

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
`பிறவிக் கலைஞன்’ நாசரின் மறக்க முடியாத ரோல்கள்! ஸ்டீரியோடைப்பை உடைத்த தமிழ் சினிமா ஹீரோயின்களின் ரோல்கள்! தனுஷ் முதல் சரத்குமார் வரை… கோலிவுட்டின் ஃபுட்பால் லவ்வர்ஸ்! உடல் எடைக்குறைப்பில் உதவும் கோடைகால உணவுகள்! தினசரி உணவில் மீன் சேர்த்துக் கொண்டால் இத்தனை நன்மைகளா?!