ஜோதிமணி

ஜோதிமணி – சளைக்காத போராளி… ஆய்த எழுத்து படத்தின் நிஜ கேரக்டர்! 

 கரூர் மாவட்டம் பெரிய திருமங்களம்தான் ஜோதிமணியின் சொந்த ஊர். அப்பா விவசாயி. ஆனால், ஜோதிமணியின் சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். அம்மா முத்துலெட்சுமிதான் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். முத்துலெட்சுமியின் அப்பா ஒரு காந்திய சிந்தனையாளர். அந்தப் பாரம்பரியம் முத்துலெட்சுமி வழியாக ஜோதிமணிக்கும் வந்தது. பள்ளிக்கூடத்தில் படித்தபோது, எப்போதும் ஜோதிமணி படுசுட்டி. எப்போதும் கிளாஸ் ஃபர்ஸ்ட் ஜோதிமணிதான்.

கல்லூரியிலும், நல்ல படிப்பாளி. அதோடு கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் முன்னால் நின்று ஒருங்கிணைப்பார். கல்லூரிகள் அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு வாங்குவார். உடுமலைப்பேட்டை ஜி.வி.ஜி.கல்லூரியில் பி.ஏ., தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் போனார். ஆனால், அந்தக் கல்லூரியில் தமிழ் பாடம் இல்லை. அதனால், பி.எஸ்.சி கணிதம் எடுத்துப் படித்தார். கணிதம் அவருக்குப் பிடிக்காத சப்ஜெக்ட் என்றாலும், பொறுப்பு என்று வந்துவிட்டபிறகு, அதில் அலட்சியமாக இருப்பது ஜோதிமணிக்குப் பிடிக்காத விஷயம். அதனால், வேகமாக கணிதப் பாடங்களை படித்து, கணக்குகளை வேகமாகப் போட்டு முடித்துவிட்டு வருவார்.

கல்லூரியில் படித்தபோது, கல்லூரி செக்கரட்டரிக்கான தேர்தல் வந்தது. அதில் ஆர்வத்துடன் பங்கேற்றார் ஜோதிமணி. ஆனால், அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அதனால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஜோதிமணி.
உண்மையில் அதுதான் ஜோதிமணியின் முதல் தேர்தல் வெற்றி என்றுகூட சொல்லலாம். அப்படிக் கல்லூரியில் படித்த காலத்தில், என்.எஸ்.எஸ் கேம்புக்காக ஒரு குக்கிராமத்திற்கு கல்லூரியில் இருந்து அழைத்துச் சென்றார்கள். அதில் சென்ற ஜோதிமணிக்கு அந்த அனுபவம் புதிதாக இருந்தது. அதுவும் அந்த மக்களோடு இருந்த அவர்களின் அனுபவங்களை கேட்டு, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டபோது, இப்படித்தானே நம் ஊரும், நம் ஊர் மக்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் ஏன் இதுபற்றி எல்லாம் பேசவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தார் ஜோதிமணி. அந்தப் புள்ளிதான் அவரை பொதுவாழ்க்கை நோக்கி நகர்த்தியது. கேம்ப் முடித்து ஊருக்குத் திரும்பியவருக்கு ஊரே புதிதாக தெரிந்தது.

அந்த நேரத்தில் அவருடைய அம்மா முத்துலெட்சுமிக்கு கர்ப்பப்பை ஆபரேசன் முடிந்து வீட்டில் இருந்தார். அவருடன் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் ஜோதிமணிக்கு இருந்தது. அப்போதுதான், அந்தப் பகுதியில் தலித் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சில ஊர்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் பிரச்னை இருப்பது ஜோதிமணியின் கவனத்துக்கு வந்தது. அதைக் கையில் எடுத்து, அதற்காக அரசு அலுவலகங்களுக்கு முறையிடச் சென்றவருக்கு அதிகாரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது. அந்த நேரத்தில் ஊராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் போட்டியிட முடிவு செய்தார் ஜோதிமணி. அப்போது ஜோதிமணி மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அந்தக் கட்சியின் சார்பில்தான் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜோதிமணி சொன்னார். ஆனால், வழக்கம்போல் வீட்டில் எதிர்ப்பு. 10 நாட்களாக வீட்டில் போராடினார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்காக பட்டினி கிடந்து, தன் நிலையை சொல்லி, தன் அம்மாவையும், சொந்தக்காரர்களையும் சம்மதிக்க வைப்பதே ஜோதிமணிக்கு பெரும் போராட்டமாக இருந்தது. கடைசியில் ஒரு வழியாக ஒப்புக் கொண்டனர்.

தெருத் தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். தலித் மக்கள் வாழும் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்து தருவேன் என்று உறுதியளித்து வாக்குறுதி கொடுத்தார். தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு வயது 22. 22 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான ஜோதிமணிக்கு அந்த வேலை எளிதாக இல்லை. அரசு அலுவலகங்களில் விதிமுறைகளைச் சொல்லி அலைக்கழித்தனர். ஒருவழியாக மூன்றரை ஆண்டுகள் கழித்து தலித் மக்கள் பகுதிக்கு தண்ணீர் வந்தது. அதன்பிறகு அந்த ஊரில் ஜோதிமணியின் மீது நம்பிக்கையும், மதிப்பும் உயர்ந்தது. தலித் மக்கள் கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்த அனுபவத்தை, ’நீர் பிறக்கும் முன்’ என்ற தலைப்பில் புத்தகமாகவும் எழுதினார். அதுபோக அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதி வந்த ஜோதிமணி, தற்போது எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். அதுபற்றி யாராவது கேட்டால், ’நான் எழுத்தாளர் இல்லை. முன்னாள் எழுத்தாளர்’ என்று சொல்கிறார்.

அரசியலில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஜோதிமணிக்கு உதாரணம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வாக மூன்று முறை வெற்றி பெற்றவர் சதாசிவம். அவர் 1957, 1962, 1977-ஆம் ஆண்டுகளில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வாக இருந்தார். மிக நேர்மையானவர், எளிமையானவர் என்ற பெயர் பெற்றவர். அவருடைய சொந்த ஊரும், திருமங்களம்தான். அவரைப்போல் இருக்க வேண்டும், அவரைப்போல் பெயரெடுக்க வேண்டும் என்பதுதான் ஜோதிமணியின் கனவாக இருந்தது. அந்தவகையில் ஜோதிமணியின் முதல் அரசியல் ஆதர்சம் என்பது சதாசிவம் அய்யாதான்.

இரண்டாவது முறையாக ஊராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றபோது, அமராவதி ஆற்றில் அரசாங்கமே மணல் எடுக்கும் என்ற அறிவிப்பு வெளியானது. தனியார் மணல் எடுத்தாலும் தவறுதான்… அரசாங்கம் மணல் எடுத்தாலும் தவறுதான்; அதனால், யாரையும் மணல் அள்ள விடமாட்டேன் என்று சொல்லி மக்களைத் திரட்டி, பொக்லைன் இயந்திரங்களை மறித்து போராட்டம் நடத்தினார் ஜோதிமணி. அதையடுத்து, அரசாங்கம் பின்வாங்கியது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த ப.சிதம்பரம், அப்போதே ஜோதிமணியின் திறமையை அடையாளம் கண்டு கொண்டார். அதன்பிறகு, அவர் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை தொடங்கிய போது ஜோதிமணியை கரூர் மாவட்டச் செயலாளராக நிமித்தார். அப்போது ஜோதிமணிக்கு வயது 25. 25 வயதில் ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த பெருமை, தமிழகத்தில் ஜோதிமணிக்குத்தான் இருக்கும்.

அதன்பிறகு ப.சிதம்பரம் அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு, காங்கிரஸில் இணைந்துவிட்டார். அவருடைய வழிகாட்டுதல்படி ஜோதிமணியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2006-ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார் ஜோதிமணி. அப்போது ராகுல் காந்தி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பைக் கையில் எடுத்திருந்தார். அப்போது இளைஞர் காங்கிரஸ் கட்சிக்காக ஒரு மீட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றது. தலித் மக்கள் வாழும் கிராமத்தில் தங்கி, அந்த மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அதுபற்றி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் முன் பேச வேண்டும். அதற்காக 1,800 பேர் வந்திருந்தனர். ஆனால், அவர்களில் 17 பேர் மட்டும்தான் பேசுவதற்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஜோதிமணியும் ஒருவர்.

அதன்பிறகு 5 எம்.பி.-க்கள் கொண்ட குழு நாடு முழுவதும் உள்ள யூத் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் டேலன்ட் டெஸ்ட் நடத்தியது. அப்போது, ஜோதிக்கு டெஸ்ட் வேண்டாம்… அவர் டேலண்ட்தான் நமக்குத் தெரியுமே.. என்று ராகுல் நேரடியாக ஜோதிமணியை தேர்வு செய்தார். அப்படித் தேர்ந்தேடுக்கப்பட்ட 22 பேர்தான் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர்கள் ஆனார்கள். தமிழகத்தின் பிரதிநிதியாக ஜோதிமணி அதில் இடம்பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. அந்தக் கட்சியில் உள்ள கோஷ்டிப் பூசல்கள், ஆணாதிக்கம் எல்லாம் ஜோதிமணியைப் பாதிக்காமல் இல்லை. ஆனால், தன்னுடைய அர்ப்பணிப்பு, உழைப்பு, கட்சிக்கான விசுவாசம் என்று இருப்பதால், அதை சமாளித்துத் தாக்குப் பிடிக்கிறார்.

இளைஞர் காங்கிரஸ் யுவராஜ் இருந்தவரை, அவருடைய முழு சப்போர்ட்டும் ஜோதிமணிக்கு இருந்தது. ஆனால், அவர் ஜி.கே.வாசனுடன் சென்றுவிட்ட பிறகு, ஜோதிமணியை ஓரம்கட்ட பல வேலைகள் நடந்தன. குறிப்பாக அது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலத்திலும் நடந்தது, அதன்பிறகு, திருநாவுக்கரசர் காலத்திலும் நடந்தது, தற்போது இருக்கும் தலைவர் கே.எஸ்.அழகிரி காலத்திலும் நடக்கிறது. அதன் காரணமாகவே, 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார் ஜோதிமணி. 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட ஜோதிமணிக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அப்போது அ.தி.மு.க-வில் இருந்த செந்தில் பாலாஜியிடம் ஜோதிமணி வெற்றி வாய்ப்பை இழந்தார்.அதன்பிறகு, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க வேட்பாளர்களுக்கு அடுத்த இடம்தான் ஜோதிமணிக்கு கிடைத்தது. ஆனால், மனம் தளராமல் கட்சி வேலைகளையும், மக்களுக்கான சேவைகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு வருடத்திற்கு முன்பே அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் ஜோதிமணி. ஆனால், அந்த முறை கூட்டணிக் கட்சியான தி.மு.க-விற்கு அரவக்குறிச்சிக்குப் போனது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் தன் வளர்ச்சியை தடுக்க அரவக்குறிச்சியை விட்டுக் கொடுத்துவிட்டார் என ஜோதிமணி அப்போது குற்றம் சாட்டினார்.

ஒரு வழியாக, 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு நேரடியாக ராகுல் காந்தியின் சிபாரிசிலேயே ஜோதிமணிக்கு சீட் கிடைத்தது. ஆனால், அந்த நேரத்தில் ஜோதிமணியை எதிர்த்துப் போட்டியிட்டது எம்.ஜி.ஆர் காலத்து அரசியல் ஜம்பவனும், கரூர் தொகுதியின் நிரந்தர நாடாளுமன்ற உறுப்பினர் என்று நினைக்கும் அளவுக்கு தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்த தம்பிதுரை. அவர் அளவுக்கு தேர்தலில் செலவழிக்க ஜோதிமணியிடம் பணம் இல்லை. அப்போது ஆபத்பந்தவனாக வந்து சேர்ந்தார் கரூர் செந்தில் பாலாஜி.

2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜோதிமணியை தோற்கடித்த வேட்பாளர் செந்தில் பாலாஜி, அதன்பிறகு அ.தி.மு.க-வில் இருந்து அ.ம.மு.க போய், பிறகு, அங்கிருந்து தி.மு.க-வுக்கு வந்து, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணிக்கு தேர்தல் வேலை பார்த்தார். அதுவும், தான் அந்த தொகுதியில் போட்டியிடுவது போல் நினைத்து ஜோதிமணிக்காக தேர்தல் வேலைகளைப் பார்த்தார் செந்தில் பாலாஜி. அவர் இல்லையென்றால், அந்த தேர்தலிலும் தம்பித்துரைதான் வெற்றி பெற்றிருப்பார். அந்தளவுக்கு தொகுதி கடினமாக இருந்தது. ஒரு வழியாக செந்தில் பாலாஜியின் உதவியோடு, ஜோதிமணி வெற்றி பெற்றார். அதற்கு கைமாறாக, செந்தில் பாலாஜி அரவக்குறிச்சியில் போட்டியிட்டபோது, அவருக்கு ஜோதிமணி பிரச்சார பீரங்கியாக செயல்பட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோதிமணி வெற்றிச் சான்றிதழை வாங்கச் சென்றபோது, அவர் அம்மா இல்லாததை நினைத்து வருந்தி அமர்ந்துவிட்டார். அப்போது அங்கு வந்த செந்தில் பாலாஜி, என்னை உங்கள் அம்மாவாக நினைத்து என் முன்னால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி தேற்றி வெற்றிச் சான்றிதழை வாங்க வைத்தார். அதன்பிறகும் அந்த நட்பு தொடர்ந்தது. ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் அந்த நட்பும் உடைந்து, ஒரே கூட்டணியில் இருந்தாலும், அரசியலிலும் இருவரும் எதிர் எதிர் துருவங்களாக அண்மையில் செயல்பட வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த நேரத்திலேயே அதிகாலையிலேயே ஜோதிமணியைப் பார்க்க, வீட்டிற்கு ஆட்கள் வந்துவிடுவார்கள். அதனால், இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்த ஜோதிமணி, திருமணம் செய்வதை தவிர்த்துவிட்டார். மகள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற வருத்தம் கடைசி வரை அவருடைய அம்மாவுக்கு இருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை ஜோதிமணி கரூர் பட்டாளம்மன், முத்தாளம்மன் கோயிலில் இருந்து தொடங்கினார். அந்தளவுக்கு அந்த பெண் தெய்வங்கள் மீது ஜோதிமணிக்கு நம்பிக்கையும், பக்தியும். தனிப்பட்ட முறையில் , கல்லூரி மற்றும் பழைய நண்பர்களோடு இன்னும் தொடர்பில் இருக்கிறார் ஜோதிமணி. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாகவும் , ஆறுதலாகவும் இருக்கின்றனர். அம்மாவின் மறைவுக்குப் பிறகு, அந்த நண்பர்கள்தான் ஜோதிமணியின் ஆறுதல் தேடும் இடம். அதோடு மன அமைதிக்காக விபாஷானா மெடிட்டேஷன் சென்டரில் தியானம் செய்வதை அன்றாட பழக்கமாக வைத்திருக்கிறார்.

கல்லூரியில் தமிழ் படிக்க முடியாத ஏமாற்றத்தைப் போக்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம், எம்.ஏ, எம்.பில் தமிழ் இலக்கியம் முடித்துள்ளார். கட்சி அரசியல், நாடாளுமன்ற வேலைகள், தொகுதி மக்களின் குறைகள் கேட்பது என நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொது வாழ்க்கைக்காக அர்ப்பணித்துள்ளார் ஜோதிமணி எம்.பி.

Also Read – 100 மணி நேரத்தில் கைமாறிய டீல்… அதானியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top