தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்க இருக்கிறார்.
மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் அவர் இளைஞராக இருந்தபோதே தொடங்கிவிட்டது. தனது 14 வயதிலேயே, 1967 தேர்தலில் முரசொலி மாறனுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்தார். 1980களின் தொடக்கத்தில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்த அவர், 1982-ல் தி.மு.க இளைஞரணி தொடங்கப்பட்ட பின்னர், அதன் முதல் செயலாளராகப் பொறுப்பேற்றார். ஏறக்குறைய 40 ஆண்டு காலம் ஸ்டாலின் இருந்த அந்தப் பொறுப்பில், இப்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்.

1984ம் ஆண்டு முதல் 2021 வரை ஸ்டாலின், 9 முறை தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார். இதில், ஆறு முறை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்ட அவர், 1984, 1991 தேர்தல்களைத் தவிர நான்குமுறை வெற்றிபெற்றார். 2011ம் ஆண்டு ஆயிரம்விளக்குத் தொகுதியில் இருந்து கொளத்தூர் தொகுதிக்கு மாறிய ஸ்டாலின், அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்றிருக்கிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல்களும் ஸ்டாலினும்!
1984 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – தோல்வி
1989 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி
1991 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – தோல்வி
1996 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி
2001 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி
2006 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி
2011 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை கொளத்தூர் தொகுதி – வெற்றி
2016 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை கொளத்தூர் தொகுதி – வெற்றி
சென்னை மேயர்
1996-ல் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை ஸ்டாலின் பெற்றார். அவர் மேயராக இருந்தபோது சென்னையில் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில், 9 இடங்களில் மேம்பாலங்களைக் கட்டினார். `சிங்கார சென்னை’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்களையும் அவர் செயல்படுத்தினார். 2001-ல் இரண்டாவது முறையாக சென்னை மேயராக அவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2002-ல் தமிழ்நாடு மாநகராட்சிகள் சட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திருத்தத்தால், ஸ்டாலின் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த சட்டத் திருத்தத்தின்படி ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பதவிகளை ஒரே நேரத்தில் வகிக்க முடியாது.

துணை முதல்வர் – எதிர்க்கட்சித் தலைவர்
2001 தோல்வியிலிருந்து மீண்டு 2006-ல் தி.மு.க தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைத்தது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். 2009ம் ஆண்டு மே மாதத்தில் தமிழகத்தின் துணை முதல்வரானார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் துணை முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். தி.மு.கவில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலினா, மு.க.அழகிரியா என்ற விவாதம் எழுந்தபோது, 2013 ஜனவரி 3-ல் அந்த விவாதத்துக்கு கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்தார். தனக்குப் பிறகு ஸ்டாலின்தான் என்று அறிவித்தார் கருணாநிதி.
2011, 2016 என இரண்டு தொடர்ச்சியான தேர்தல்களில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையில், கொளத்தூரில் ஸ்டாலின் வென்று எம்.எல்.ஏவாக இருந்தார். 2016 முதல் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

கருணாநிதி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், 2017ம் ஆண்டு ஜனவரியில் தி.மு.கவின் செயல்தலைவரானார் ஸ்டாலின். 2018ம் ஆண்டு கருணாநிதி மறைவுக்குப் பின்னர் அக்கட்சியின் தலைவரானார். உள்கட்சிரீதியாக எதிர்ந்த எதிர்ப்பலைகள், வாரிசு அரசியல் போன்ற சலசலப்புகளை சமாளித்தார். தி.மு.க தலைவராக, 2019ம் ஆண்டு எதிர்க்கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி தலைமையிலான கூட்டணி, தமிழகத்தில் மொத்தமுள்ள 40 இடங்களீல் 39 இடங்களில் வென்றது.
அதேபோல், 2021 சட்டமன்றத் தேர்தலும் ஸ்டாலினுக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கும் என்று கருதப்பட்டது. தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவே. தி.மு.க தலைமையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளோடு பெரிய கூட்டணியை அமைத்தது. இப்போது தி.மு.க கூட்டணி பெரும்பான்மை பெற்றிருக்கிறது. தனது 45 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் பயணத்தில் முதல்முறையாக ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார். அதேபோல், அண்ணா, கருணாநிதிக்குப் பிறகு தி.மு.கவின் மூன்றாவது முதல்வராகிறார்.
0 Comments