லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் தன்னிடமிருந்து 5,600 ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகவும், தன்னிடம் ஒரு ரூபாய்கூட கறுப்புப் பணம் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கமளித்திருக்கிறார்.
லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வணிகவரித் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் 2016-21 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.28 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 15-ல் வழக்குப் பதிந்தனர். மேலும், அதற்கு அடுத்தநாளான செப்டம்பர் 16-ல் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான சென்னை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 35 இடங்களில் திடீர் ரெய்டு நடத்தினர்.

காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை நீடித்த இந்த சோதனையில், 35 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், 5 கிலோ தங்க நகைகள், ரூ.1.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம், 9 சொகுசுக் கார்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியிடப்பட்டது. அதேபோல், ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணிக்குச் சொந்தமான வீட்டில் 551 யூனிட் மணல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைர நகைகள், வங்கி பாஸ் புத்தகங்கள், சொத்து ஆவணங்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் போன்றவையும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், வீரமணி வீட்டில் பதுக்கப்பட்டிருந்த மணல் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு பொதுப்பணித் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
கே.சி.வீரமணி விளக்கம்
இந்தநிலையில், திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்து கே.சி.வீரமணி இன்று விளக்கமளித்தார். அப்போது பேசிய வீரமணி, “லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தி, என்னுடைய வீட்டிலே கைப்பற்றப்பட்ட பொருட்கள் பற்றி ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் என்னென்ன கைப்பற்றினார்கள் என்பது பற்றிய ஆவணம் இது. இதில், என்னுடைய கையெழுத்து, சோதனையிட வந்த டி.எஸ்.பி உள்ளிட்ட போலீஸாரின் கையெழுத்துகள் இருக்கின்றன.

எங்கள் குடும்பத்துக்கென ஒரு பாரம்பரியம் இருக்கிறது. சிறுவயது முதலே வெளிநாட்டு கார்கள் மீது எனக்கு ஆர்வம் உண்டு. பள்ளிக் கூடத்தில் இருந்தே ஜெர்மன் தயாரிப்பான மெர்சடீஸ் பென்ஸ் காரைப் பயன்படுத்தியவன். ஏனென்றால், எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக பீடித் தொழிற்சாலை இருக்கிறது. எங்க அப்பா காலத்துல விவசாய வருமானமெல்லாம் இருந்தது. கிட்டத்தட்ட பத்தாயிரம் தொழிலாளர்கள் எங்களிடம் வேலை பார்த்திருக்கிறார்கள். பீடித் தொழில் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனது மனைவி தரப்பிலே, அவர்களும் மிகவும் வசதி படைத்தவர்கள்.
என்னிடம் வீட்டில் இருந்த தங்க நகைகள் 2,674 கிராம், ஏறத்தாழ 300 சவரன் நகைகள்தான் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். தேர்தலின்போது நான் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்திலேயே அதைவிட அதிகமான தங்க நகை எனக்குச் சொந்தமாக இருப்பதாக நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதனால, `நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் அனைத்தும் சாட்சிகள் முன்னிலையில் திரு.கே.சி.வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்று அவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள். நகைகளுக்குக் கணக்கு இருப்பதால், அதை எங்களிடமே திரும்பக் கொடுத்துவிட்டார்கள்.

ஆனால், பத்திரிகைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், கட்டிகள், வைர நகைகள் கே.சி.வீரமணி வீட்டில் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தேவையில்லாத விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. விஜிலென்ஸில் இருந்து வீட்டில் வந்து சோதனையிட்டார்கள். `இதெல்லாம் அபிடவிட்ல காட்டியிருக்கீங்க. அதனால, இதெல்லாம் தேவையில்லை’ என்று சொல்லித் திருப்பிக் கொடுத்துட்டு போய்ட்டாங்க. அதேபோல், வெளிநாட்டு கரன்சி என்று பார்த்தால், 2,508 அமெரிக்கன் டாலர், அதனுடைய தோராய மதிப்பு ரூ.1.80 லட்சம். ஆனால், வாட்ஸ் அப்ல பார்த்தா பண்டல் பண்டலா நோட்டுகளைக் காட்டுறாங்க. அதெல்லாம் எங்க இருந்து எடுத்துட்டு வந்தாங்கனு தெரியல.
அதுக்குக் காரணம் என்னான்னா, என்னுடைய மகளை ஆஸ்திரேலியாவில் மேற்படிப்புக்காக சேர்த்திருக்கிறேன். அவர் எப்போது வேண்டுமானாலும் வெளிநாடு கிளம்ப வேண்டிய சூழல் வரலாம். வெளிநாடு செல்பவர்கள் 5,000 டாலர்கள் வரை கையில் வைத்திருக்க வேண்டும். அதற்காக, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் அந்தப் பணத்தை மாற்றி வைத்திருக்கிறேன். என்னுடைய வீட்டில் 38 லட்சமோ 38 கோடி ரூபாயோ இப்படி யார் யாருக்கு என்னென்ன தோன்றுகிறதோ அதுப்படி செய்திகள் வெளியிட்டிருக்கிறார்கள்.
கார்களைப் பொறுத்தவரை என்கிட்ட ரோல்ஸ் ராய்ஸ் இருக்கு. அது 40 வருட பழமையான விண்டேஜ் கார். நான் ஏழாவது படிக்கும்போதே பென்ஸ் வேண்டும் என்று கேட்டேன். எங்க அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்தார். விண்டேஜ் கார் என்பதால் அதன் விலை 5 லட்ச ரூபாய்க்கு மேல் போகாது. நான் எதை வாங்கினாலும், எல்லாமே சட்டத்துக்குட்பட்டு கணக்கில் வரக் கூடிய வகையிலேதான் இருக்கும். நான் பள்ளி படிக்கும் காலம் தொட்டே வருமான வரி கட்டி வருகிறேன். அப்போவே, என்னுடைய அப்பா என் பெயரில் ஐ.டி கட்டி வந்திருக்கிறார். நான் பயன்படுத்தும் இடம், கட்டடம் என எல்லாமே கணக்கில் இருக்கக் கூடியவை. என்னிடம் ஒரு ரூபாய் கூட கறுப்புப் பணம் இல்லை. ரொக்கப் பணமாக 1,000 ரூபாய் மதிப்பிலான 10 ரூபாய்க் கட்டு ஒன்று, இதுதவிர 4,600 ரூபாய் என மொத்தம் 5,600 ரூபாய் மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீஸார் என்னிடம் இருந்து பறிமுதல் செய்திருந்தனர்.
புதிய கட்டுமானப் பணிகளுக்காக மணல் வாங்கி வைத்திருக்கிறோம். அதற்கான ஆவணங்கள், ரசீது என்னிடம் உள்ளன. குறைவான அளவில்தான் மணல் இருக்கிறது. 551 யூனிட் மணல் இருப்பதாக செய்தி வெளியாகிறது. யாருமே என்னுடைய வீட்டுக்குள் வரவில்லை. அப்படியிருக்க மணலை எப்படி அளந்திருக்க முடியும்?
சோதனையின்போது எனது மகனுக்கு வாங்கிய மூக்குக் கண்ணாடி ரசீது, ஆர்.ஓ. சிஸ்டம் சர்வீஸ் செய்த ரசீது என ஒன்றுகூட வைக்காமல் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றார்கள். அன்றிரவு 10 மணிக்குத்தான் ரெய்டு முடிந்தது. அதன் பிறகுதான் அது, இது என்று பட்டியல் போட்டுக் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால், மாலையிலேயே கோடிக்கணக்கில் பணம், நகை, சொத்து பறிமுதல் என்று செய்தி வெளியாகிறது. எனக்கு 40 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக் கடன் மட்டுமே இருக்கிறது. பாரம்பரியமான வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு எதுங்குங்க பினாமி? எல்லாமே என்னுடைய பெயரில்தான் இருக்கிறது. அண்ணன், தம்பி என சொந்தக்காரர்கள் பெயரில் கூட கிடையாது.

நான் மிகவும் எளிமையானவன். ஆடம்பரத்தை விரும்பாதவன். கார்கள் மீதுதான் பிரியமே தவிர மற்றபடி எதுவும் என்னிடம் இல்லை. திட்டமிட்டுத் தவறான தகவல்கள் பத்திரிகைகள் வாயிலாகப் பரப்பப்படுகின்றன. உண்மை இதுதான். பத்திரிகைகள் என்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து எனது கட்சியினரை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது நடக்கிறதா என்று தெரியவில்லை. சந்தேகத்தின் பெயரில் ரெய்டு நடக்கிறது. என் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். எதையும் நீதிமன்றம் வாயிலாக நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்று விளக்கமளித்தார்.
Also Read – கே.சி.வீரமணி: 645% சொத்து அதிகரிப்பு; 28 இடங்களில் சோதனை – எஃப்.ஐ.ஆர் என்ன சொல்கிறது?
Very shortly this web page will be famous amid all blog
people, due to it’s good articles or reviews
my webpage :: nordvpn coupons inspiresensation
At this moment I am ready to do my breakfast, once having my breakfast coming again to read more news.
Here is my web page :: nordvpn coupons inspiresensation (http://tinyurl.com)