`ஆட்டுக்குத் தாடியும் மாநிலத்துக்கு ஆளுநரும் தேவையா’ என்று தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், ஆளுநர் பதவி குறித்த கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான விவாதங்களும் பரவலாக எழுந்திருக்கின்றன. ஆளுநர் எப்படி நியமிக்கப்படுகிறார்… ஆளுநருக்கான அதிகாரங்கள் என்னென்ன?
பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் அரச பிரதிநிதிகளாக ஒவ்வொரு பகுதிகளையும் ஆளுநர்களே ஆட்சி அதிகாரம் செய்து வந்தனர். இவர்களுக்கெல்லாம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் வைசிராய் என்று அழைக்கப்பட்டார். சுதந்திரத்துக்குப் பிறகும் ஆளுநர் பதவி தேவையா என்ற விவாதம் எழுந்தது. அரசியல் நிர்ணய சபை கூடி இதுகுறித்து பலமுறை விவாதங்களை நடத்தியது. ஆளுநர்களே மாநில அரசுகளே நியமித்துக் கொள்ளலாம், மக்களே ஓட்டுப் போட்டுத் தேர்தெடுக்கலாம் உள்ளிட்ட யோசனைகள் அப்போது முன்வைக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இன்னொரு பதவி தேவைதானா என்ற கேள்வியால் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. அதேபோல், மாநில அரசுகளே ஆளுநர்களை நியமித்துக் கொள்ளலாம் என்பதுதான் பிரதமர் நேருவின் முடிவாக இருந்தது. அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் கலந்துகொண்டு இந்தக் கருத்தை அவர் பதிவு செய்திருக்கிறார். பின்னர், ஒரு கட்டத்தில் ஆளுநரை குடியரசுத் தலைவரே நியமிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மாநில முதலமைச்சருடன் ஆலோசித்த பிறகே ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று 1983-ல் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் பரிந்துரை செய்தது. ஆனால், இந்தப் பரிந்துரையைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற வகையில் சட்டத் திருத்தம் எதுவும் கொண்டுவரப்படவில்லை.
மத்திய அரசு பரிந்துரைக்கும் மூன்று பேரில் ஒருவரை குறிப்பிட்ட மாநிலத்துக்கு ஆளுநராகக் குடியரசுத் தலைவர் நியமிக்கலாம் என்கிறது அரசியல் சாசனம். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு பொதுவாக ஒருவரின் பெயரையே பரிந்துரை செய்யும் அதற்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுபவர், குறைந்தது 35 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவரையே ஆளுநராக நியமிக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. ஆனால், இந்த விதி மீறப்பட்ட உதாரணங்களும் இருக்கின்றன. சரோஜினி நாயுடுவின் கணவர் மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்த நிலையில், அவரது மகள் பத்மஜா நாயுடு, அம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதேபோல், பஞ்சாபைச் சேர்ந்த உஜ்ஜல் சிங், அம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
ஆளுநராக நியமிக்கப்படும் நபர், நியமனத்தின்போது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கக் கூடாது. அவருக்கு அரசிடமிருந்து ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவு ஆகியவைகளைப் பெறலாம் என்பதால், ஆதாயம் தரும் எந்தவொரு பதவியிலும் அவர் இருக்கக் கூடாது.
அரசியல் சாசனம் வகுத்துள்ள விதிகளை மீறி ஆளுநர் ஒருவர் நடந்துகொள்கிறார் அல்லது ஆளுநர் பதவி வகிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என குடியரசுத் தலைவர் எண்ணுகையில், ஆளுநரைத் திரும்பப் பெறும் உத்தரவை அவர் பிறப்பிக்க இயலும்.
* அரசியல் சாசன விதிப்படி ஒரு மாநில அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆளுநர்தான்.
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகள் ஆளுநரின் ஒப்புதலின்படியே சட்டமாகும் அல்லது நிறைவேற்றப்படும்.
* அரசியல் சாசன விதி 164-ன் கீழ் முதலமைச்சரையும், அவரின் ஆலோசனையின்படி அமைச்சர்களையும் அவரே நியமிப்பார்.
* மாநிலத்தின் தலைமை வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம்.
* மாநில அரசின் நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் ஆளுநர் ஒப்புதலுடனேயே சமர்ப்பிக்க வேண்டும்.
* நிர்வாகரீதியிலான உத்தரவுகள் அனைத்துமே ஆளுநரின் பெயராலேயெ வெளியிடப்பட வேண்டும்.
* சட்டப்பேரவையைக் கூட்டுவது, ஒத்திவைப்பது மற்றும் தேர்தல், அசாதாரண சூழல்களில் பேரவையைக் கலைக்கும் அதிகாரம் பெற்றவர்.
* மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனமும் ஆளுநரின் அதிகார வரம்புக்குட்பட்டதே.
* மாநிலத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் ஆளுநராலேயே நியமிக்கப்படுகிறார்கள்.
* ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகே எந்தவொரு மசோதாவும் சட்டமாக வடிவம் பெறும்.
* சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில், பண மசோதாவைத் தவிர மற்ற மசோதாக்களை விளக்கம் கேட்டு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பலாம். அதேநேரம், அந்த மசோதா ஆளுநருக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டால், அதற்கு ஒப்புதல் கொடுத்தே ஆக வேண்டும்.
* மாநில அரசின் திடீர் செலவுகளைச் சமாளிக்க, அவசர கால நிதியைப் பயன்படுத்தவும் ஆளுநரே ஒப்புதல் அளிக்கிறார்.
* தேர்தல் முடிவுக்குப் பின்னர் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நேரத்தில், முதலமைச்சரை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது.
* அவசர காலங்களில் குடியரசுத் தலைவரின் அறிவுரையின்பேரில், ஆளுநரால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்.
* மாநிலங்கள் நிலை பற்றி மத்திய அரசுக்கு அவ்வப்போது அறிக்கை மூலம் தகவல் அளிப்பார். மத்திய – மாநில அரசின் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, அவைகள் இடையிலான பரஸ்பர உறவைப் பொறுத்து ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவு இருக்கும். இது மோசமடையும்போது மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் பனிப்போர் சூழல் ஏற்படும்.
0 Comments