2021 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது. முதன்முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். 2006-11 காலகட்டத்தில் நடைபெற்ற தி.மு.க ஆட்சிக்கு ஏற்பட்ட கெட்டபெயர் எதுவும், இந்த ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்கிறார். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக, 25 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. சிபாரிசுகள் வந்து குவிகின்றன. கட்சிக்காரர்கள், அமைச்சரவை சகாக்கள் என அனைவரும் ஆளுக்கொரு ஆலோசனைகளைத் தருகின்றனர். மு.க.குடும்பத்தில் இருந்தும் சில பரிந்துரைகள், சிபாரிசுகள், ஆலோசனைகள் வருவதும் தொடர்கிறது.

ஆனால், எதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படியே எடுத்துக் கொள்வதில்லை. இறுதி முடிவை மு.க.ஸ்டாலினே எடுக்கிறார். அப்படி எடுப்பதற்கு முன், அவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி, ஆலோசிப்பது, முதலமைச்சர் அலுவலக செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள உதயச்சந்திரன், சண்முகம், உமாநாத், அனுஜார்ஜ் என்ற நான்கு அதிகாரிகளிடம்தான். அதிலும், முதன்மைச் செயலாளர் உதயச் சந்திரன்தான், மு.க.ஸ்டாலினுக்கு பெரும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார்.

உதயச்சந்திரன் ஆட்சி!
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு நியமனம் செய்யப்பட்டிருந்தாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஆலோசனைகளுக்குத்தான் அரசாங்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதன்படியே அரசாங்கம் நடக்கிறது. துறைகள் இயங்குகின்றன. கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில், அவருக்கு ஆலோசகராக ராஜமாணிக்கமும், உதவியாளராக சண்முகநாதனும் இருந்தனர். அவர்களோடு துறையின் மூத்த அமைச்சர்களிடமும், கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களிடமும் கருணாநிதி ஆலோசனை மேற்கொள்வார். ஆனால், மு.க.ஸ்டாலின் தனக்குக் கீழ், சண்முகநாதனைப்போல் ஒரு உதவியாளரையோ, ராஜமாணிக்கத்தைப் போல் ஒரு தனிச் செயலாளரையோ நியமித்துக் கொள்ளவில்லை. முதலமைச்சர் அலுவலக செயலாளர்களை மட்டுமே நியமித்துள்ளார். அவர்களின் ஆலோசனைகளின்படியே செயல்படுகிறார். சில விஷயங்களுக்காக ராஜமணிக்கத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆலோசனைகளைக் கேட்டாலும், உதயச்சந்திரன் எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவாக உள்ளது. அந்தவகையில், ஒவ்வொரு துறைக்கும் அமைச்சரும், அதிகாரிகளும் இருந்தாலும், உதயச்சந்திரன் எடுக்கும் முடிவுதான் இறுதியானது.

முதலமைச்சர் கட்டுப்பாட்டில் அமைச்சர்களின் பி.ஏ-க்கள்…
அமைச்சர்களுக்கு மூன்று பி.ஏ-க்கள் வரை இருப்பார்கள். அதில் ஒருவர், அவர் துறையில் பணிபுரியும் அரசாங்க அதிகாரியாக இருப்பார். அவருக்கு அந்தத் துறை பற்றிய அனைத்து விபரங்களும் தெரிந்திருக்கும். அவர்கள், அமைச்சர்களின் பரிந்துரை அல்லது சீனியாரிட்டி அடிப்படையில் பி.ஏ-வாக வந்துவிடுவார்கள். அதன்பிறகு, அமைச்சர்கள் தங்களது பெர்சனல் பி.ஏ-வாக, ஒருவர் அல்லது இருவரை பணியமர்த்திக் கொள்வார்கள். அவர்கள் அமைச்சர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், இந்த முறை, அமைச்சர்களின் பி.ஏ நியமனத்தில் முதலமைச்சர் அலுவலகம் தனிக் கவனம் செலுத்த உள்ளது. அமைச்சர்களின் பி.ஏ-க்களில் ஒருவர் நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்தின் மூலம் நியமிக்கப்படுவார். அதன் மூலம் அமைச்சர்களின் ஒவ்வொரு அசைவும் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த ஆலோசனையை அளித்தது உதயச்சந்திரன்தான் என்கின்றனர்.

தற்போது கொரொனா சூழல் என்பதால், வேறு அரசியல் நடவடிக்கைகள் எதிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தவில்லை. நிர்வாக நடவடிக்கைகளை மட்டுமே அவர் மேற்கொண்டு வருகிறார். அதனால், இதுவரையிலான அரசாங்கத்தின் அரசியல் முகம் இன்னும் வெளிப்படவில்லை. நிர்வாக அரசாங்கமாக செயல்படும், இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை கணிக்க இன்னும் காலம் இருக்கிறது என்கின்றனர் அதிகாரிகள் வட்டத்தில்..
0 Comments