இந்திய சட்ட நடைமுறைகள், உரிமைகளைத் தெரிந்து வைத்துக்கொள்வது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைத் தேவையாகும். எந்த சூழலில் இந்த சட்ட நடைமுறைகள், உரிமைகள் தேவைப்படும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. நம்மில் பலருக்கு அடிப்படை சட்ட நடைமுறைகள், உரிமைகள் பற்றி தெரிந்திருக்கலாம். இந்தக் கட்டுரையில் நாம் அவசியம் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டிய 7 சட்ட நடைமுறைகள், உரிமைகள் பற்றிப் பார்க்கலாம்.
சிலிண்டர் விபத்து காப்பீடு
வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வெடித்து உயிரிழப்போ அல்லது சொத்து சேதாரமானாலோ ரூ.40 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்
இந்திய சட்ட நடைமுறைகளின்படி லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது குற்றமாகாது. அதேபோல், லிவ்-இன் ரிலேஷன்ஷிப் மூலமாகப் பிறந்த குழந்தை, தந்தை – தாயின் சொத்துகளில் உரிமை கோர முடியும்.

ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே ஃபைன்
போக்குவரத்து விதிமீறலுக்காக உங்களுக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே அபராதம் விதிக்க முடியும். ஒருமுறை ஃபைன் செலுத்திவிட்டால், அந்த நாள் முழுவதும் அதே காரணத்துக்காக உங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது. இதைப் பயன்படுத்தி விலக்கு தேடாமல், உரிய போக்குவரத்து விதிகளைக் கடைபிடிப்பது நல்லது.
எம்.ஆர்.பி விலை
ஒரு பொருளை அதன் கவரில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகபட்ச விலைக்கே (எம்.ஆர்.பி) வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அந்த விலையில் இருந்து குறைத்து நீங்கள் கடைக்காரரிடம் கேட்க முடியும். அதேநேரம், அந்தப் பொருளை எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்க கடைக்காரருக்கு உரிமையில்லை.
போலீஸ்
1861-ம் ஆண்டு போலீஸ் விதிப்படி, காவலர்கள் எப்போதும் பணியில் இருப்பவர்களாகவே கருதப்படுவார்கள். சிவில் டிரெஸ்ஸில் இருக்கும்போது, ஒரு குற்றம் அவர்களது கவனத்துக்கு வரும்பட்சத்தில் நான் டூட்டியில் இல்லை என்று கூறி அவர்களால் தட்டிக் கழிக்க முடியாது.

தத்தெடுப்பு
இந்து தத்தெடுப்புச் சட்டம் 1956-ன் படி உங்களுக்கு மகனோ, அல்லது மகனுக்கு மகனோ இருந்தால், ஆண் குழந்தையை நீங்கள் தத்தெடுக்க முடியாது. இதே நடைமுறைதான் மகள்களுக்கும். அதேபோல், தத்தெடுப்பவருக்கும் தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் இடையில் 21 வயது வித்தியாச இடைவெளி இருக்க வேண்டும் என்கிறது சட்டம்.
கர்ப்பிணி
எந்தவொரு நிறுவனமும் கர்ப்பிணிகளை வேலையைவிட்டு நீக்க முடியாது. இதற்காக அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். 10 பேருக்கு அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனத்தில் பெண்களுக்கு 84 நாட்கள் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு எடுக்க உரிமை உண்டு என்கிறது 1961ம் ஆண்டு மகப்பேறு நன்மைச் சட்டம்.
Also Read – ஒரு பாட்டு சீக்கிரமே உங்களுக்கு போர் அடிக்குதா; இதான் காரணம்!
0 Comments