பெட்ரோல், டீசல் விற்பனையில் மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு சம்பாதிக்கின்றன?

கொரோனா ஆலோசனைக் கூட்டத்தில் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியது, புதிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெட்ரோல், டீசல் விற்பனையில் மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு சம்பாதிக்கின்றன?

கொரோனா ஆலோசனைக் கூட்டம்

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், அது குறித்து மாநில முதல்வர்களோடு பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘’நான் யாரையும் குற்றம்சாட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. அதேநேரம், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் குறைத்து, அதன் பலனை மக்களுக்குக் கொடுக்க வேண்டும். மக்கள் நலனுக்காகவே இந்த கோரிக்கையை நான் உங்களிடம் வைக்கிறேன்’’ என்று பேசியிருந்தார். பிரதமரின் இந்த பேச்சு, மக்களைத் திசைதிருப்பும் வகையில் இருப்பதாக தமிழகம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன.

பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு அதிகமான வரி விதித்து வரும் நிலையில், மாநில அரசுகள் விலையேற்றத்துக்குக் காரணம் என்கிற தோற்றத்தை ஏற்படுத்த பிரதமர் முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

உண்மையில், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு மத்திய, மாநில அரசுகளின் வரி எவ்வளவு?

பெட்ரோல், டீசல் மீதான வரி

பல்வேறு காரணிகள் அடிப்படையில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பெட்ரோல், டீசல் விலை மாறுபடுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாறுதல், பணவீக்கம், போக்குவரத்து செலவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த டிசம்பர் தொடங்கி மார்ச் 10-ம் தேதி வரை நூறு நாட்களுக்கு மேல் விலை மாறாமல் தொடர்ந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் இருந்ததற்கு ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடந்ததே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல் போன்றவை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்தியாவில், அதிக வரி விதிக்கப்படும் பொருட்களுள் முக்கியமானவையான இவையே மத்திய, மாநில அரசுகளின் முக்கியமான வரி வருவாய் ஆகும். மத்திய அரசைப் பொறுத்தவரை

கடந்த 3 நிதியாண்டுகளில் மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் வரி வருவாய் ரூ.8 லட்சம் கோடி அளவுக்குக் கிடைத்ததாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்திருந்தார். அதில், ரூ.3.71 லட்சம் கோடி மதிப்பிலான வருவாய் 2020-21 நிதியாண்டில் மட்டுமே கிடைத்ததாகும்.

சென்னையில் ஏப்ரல் 28-ம் தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 ஆகவும் இருக்கிறது. இதுவே, மும்பையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120.51 மற்றும் டீசல் ரூ.104.77-க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை மாற்றத்துக்கு முக்கியமான காரணம் மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரி மாறுபடுவதுதான்.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 என்று வைத்துக் கொண்டால், இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், கேரளா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அதில் பாதிக்கும் மேல் வரியாகவே நீங்கள் கொடுக்க வேண்டி வரும்.

மகாராஷ்டிரா – ரூ.52.5
ஆந்திரா – ரூ.52.4
தெலங்கானா – ரூ.51.6
ராஜஸ்தான் – ரூ.50.8
மத்தியப்பிரதேசம் – ரூ.50.6
கேரளா – ரூ.50.2
பீகார் – ரூ.50.0 என்கிற அளவில் வரி வசூலிக்கின்றன. இதில், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மத்திய அரசின் வரியை விட மாநில அரசு விதிக்கும் வரி விகிதம் அதிகமாகும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு Stats of India என்கிற ட்விட்டர் ஹேண்டில், கடந்த மார்ச் மாதம் இந்தத் தகவல்களை வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் எவ்வளவு?

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ’’கடந்த 2014-ல் பெட்ரோல் மீது 9.48 ரூபாயும், டீசலுக்கு 3.57 ரூபாயும் மட்டுமே கலால் வரியாக மத்திய அரசு வசூலித்து வந்தது. கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி சுமார் 200% அளவுக்கும்,டீசல் மீதான வரி 500% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வரி விகிதத்தை திரும்பவும் 2014 ஆம் ஆண்டில் இருந்தபடி குறைக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழகத்தில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 22.54, டீசல் மீது லிட்டருக்கு ரூ.18.45 மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதுவே கடந்த 2014-ல் முறையே ரூ.15.67, 10.25 ரூபாயாக இருந்தது.

Also Read – தமிழகத்தை வாட்டும் மின்வெட்டு… என்ன காரணம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top