தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் முதலமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் வகையிலான உத்தரவில் கையெழுத்திட்டார்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம்!
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக வழங்குவதற்காக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டதாகச் சொல்கிறது அரசு. தமிழக அரசால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது யுனைட்டெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயனடைவதாக தமிழக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதன்மூலம், பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை முறைகளுக்கும் 38 வகையான பரிசோதனைகளும் செய்ய முடியும். பச்சிளங்குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் இதன்மூலம் பயன்பெறலாம்.
காப்பீடு பெறுவது எப்படி?

அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்/அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கிருக்கும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பெற்று, பூர்த்தி செய்ய வேண்டும். அத்தோடு வருமான சான்று, குடும்ப அட்டை நகர், ஆதார் கார்டு நகல் போன்றவற்றை இணைந்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செயல்படும் மருத்துவக் காப்பீடு அலுவலகத்தில் விண்ணப்பிங்களை சமர்ப்பிக்கலாம். அங்கு ஒவ்வொரு காப்பீட்டுக்கும் 22 இலக்க எண் தருவார்கள். அதன்மூலம் திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள நோய்களுக்கு குறிப்பிட்ட திட்டங்களில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்கும்.
யாரெல்லாம் தகுதியானவர்கள்?
ஆண்டு வருமானம் ரூ.72,000-த்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் பயனாளி மட்டுமல்லாது, அவரது கணவர்/மனைவி, அவரின் குழந்தைகள் மற்றும் அவரைச் சார்ந்துள்ள பெற்றோரும் சிகிச்சை பெற முடியும். தகுதியுடைய நபரின் குடும்ப அட்டையில் அவர்களின் பெயர் இருப்பது அவசியம். அதேபோல், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்து ஆறு மாதத்துக்கும் அதிகமாகத் தங்கியிருப்பவர்கள், தமிழ்நாடு தொழில்துறையின் சான்றுபெற்று திட்டத்தில் இணையலாம். முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள், முகாம்களில் தங்கியிருப்பதற்கான சான்றை மட்டும் இணைத்தால் போதுமானது. அவர்களுக்கு வருமானச் சான்று தேவையில்லை.
விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்த பின்னர் 1800 425 399 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து தொடர்பு அதிகாரியின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அதன்பின்னர் நேரத்தை அறிந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

கொரோனா சிகிச்சை
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற விரும்புவர்கள் கொரோனா சிகிச்சைக்காக அரசு வழங்கியுள்ள 16 வகையான பேக்கேஜ்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். மிதமான சிகிச்சை முதல் தீவிர சிகிச்சை வரை 5 முதல் 14 நாட்களுக்கு வெவ்வேறு வகையான பேக்கேஜ்களை அரசு வழங்கியுள்ளது. இதில், ஒன்றை தொற்றாளர்களோ அல்லது அவரது குடும்பத்தினரோ தேர்வு செய்ய முடியும். தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் முதல் நாளிலேயே முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சைபெறப் போவதாகச் சொல்லிவிட்டால் எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. தவிர்க்க முடியாத நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6வது நாளில் இருந்தும் காப்பீட்டின் கீழ் சிகிச்சைபெறலாம்.
முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள பேக்கேஜ்களைப் பற்றி அறிந்துகொள்ள…
https://www.cmchistn.com/covidPackage.php
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளின் விவரங்கள் …
https://www.cmchistn.com/covid_empanlled_hospital.php
கூடுதல் தகவல்களை http://www.cmchistn.com/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
0 Comments