தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் இணையதளம் மூலம் புகார் அளிப்பது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
மக்கள் பல்வேறு அரசு துறை சார்ந்த புகார்களை குறிப்பிட்ட துறைகளில் அளிக்கலாம். இதற்கென அந்தந்தத் துறைகளில் தனிப்பிரிவும் செயல்படும். ஆனால், முதலமைச்சரிடம் நேரடியாகப் புகார் கொடுக்க விரும்பும் மக்கள் cmcell.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்க முடியும்.

அந்த இணையதளத்தில் எப்படி புகார் அளிப்பது என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளலாம். முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் புகார் அளிப்பதற்கு முன்பாக உங்கள் தகவல்களைக் கொடுத்து, பிரத்யேக கணக்குத் தொடங்கி லாக் இன் செய்ய வேண்டும். உங்கள் பெயர், பாலினம், முகவரி, தந்தை/கணவர்/மனைவி பெயர், இ-மெயில் முகவரி போன்ற தகவல்களைக் கொடுத்து புதிய கணக்கைத் தொடங்கலாம். உங்கள் கணக்குக்கான லாக் இன் ஐடி என்பது நீங்கள் கொடுத்திருக்கும் இ-மெயில் ஐடிதான்.
அந்த இணையதளத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தையும் கொடுத்தபிறகு உங்களுக்கான பாஸ்வேர்டை இணையதளமே ரேண்டமாக உருவாக்கித் திரையில் காட்டும். அதைக் குறித்து வைத்துக் கொள்வது பின்னர் அந்த இணையதளத்துக்கு நீங்கள் செல்லும்போது லாக் இன் செய்ய உதவும். அதன்பின்னர் உள்ளே நுழைய வேண்டும். உங்கள் புகாரை டைப் செய்து அதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் டயலாக் பாக்ஸில் பதிவிட்டு சப்மிட் செய்ய வேண்டும்.

உங்கள் புகாரை சப்மிட் செய்தபிறகு உங்களுக்கான புகார் எண் கொடுக்கப்படும். அந்த புகார் எண்ணைப் பயன்படுத்தி பின்னர் உங்கள் புகாரின் நிலை, அதாவது அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அது எந்த நிலையில் இருக்கிறது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். முதலமைச்சர் தனிப்பிரிவில் நீங்கள் அளித்த புகார், சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி தீர்வு காணப்படும். வெப்சைட்டில் புகார் அளிப்பதில் சிரமம் இருந்தால், 044-25671764 என்ற தொலைபேசி எண் மூலம் புகார் தெரிவிக்கலாம். அதேபோல், cmcell@tn.gov.in என்ற இ-மெயில் மூலமாகவோ அல்லது 044-25676929 என்ற எண்ணுக்கு ஃபேக்ஸ் மூலமாகவோ உங்கள் புகாரை அனுப்பி வைக்கலாம்.
Also Read – `நாட்டுக்குள்ளே ஒரு நாடா?’ – மெட்ராஸ் மாகாணம் டு தமிழ்நாடு பெயர்மாற்ற சுவாரஸ்ய பின்னணி!
0 Comments