தி.மு.க

பெட்ரோல், டீசல் விலை… ஜி.எஸ்.டி அரசியல் – தி.மு.க மாற்றிமாற்றிப் பேசுகிறதா?

எதிர்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திய தி.மு.க, ஆட்சிக்கு வந்ததும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை

தி.மு.க தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அவற்றை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். தேர்தல் பிரசாரங்களின்போதும் இதுகுறித்து அவர் பேசியிருந்தார். பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்தசூழலில் கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றில் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 45-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக உறுப்பினர்கள் நேரடியாகக் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்ளவில்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வணிக வரித்துறை செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படாது என்று முடிவெடுக்க்ப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இந்த விவகாரம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், பெட்ரோலியம் பொருட்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பல உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் தெளிவாகத் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து கேரள உயர் நீதிமன்றத்துக்கு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்படும். பெட்ரோலியப் பொருட்களை வரி வரம்புக்குள் கொண்டுவர இது சரியான நேரம் இல்லை என ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்திருக்கிறது’’ என்றார்.

தமிழகத்தின் நிலைப்பாடு!

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர பல்வேறு மாநிலங்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்புப் பதிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில் இதை ஆதரித்த மகாராஷ்டிரா, பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டது. அதேபோல், தமிழகம் சார்பில் நிதியமைச்சரின் கருத்து எழுத்துப்பூர்வமாகக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே தற்போது உள்ளது. இதையும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும். அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வருவதை தமிழக அரசு எதிர்க்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம்

தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல், டீசல் விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த தி.மு.க, ஆட்சியமைத்தவுடன் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது ஏன் என்று அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதுகுறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து, அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினை என எந்த பிரச்னையாக இருந்தாலும், ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு என்பது தி.மு.க-வுக்குக் கைவந்த கலை. அந்த வகையில், தற்போது பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டுமென்றால், அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் வரம்புக்கு கீழ் கொண்டுவர வேண்டும் அல்லது அதற்கான ஆயத்தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த செய்தி 25-1-2018 அன்று அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

இதன் தொடர்ச்சியாக, 4-4-2018 அன்று தனது டுவிட்டர் பக்கத்திலும், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலிய பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்’’ என்று குறிப்பிட்டிருக்கும் அவர், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் எடுத்திருக்கும் நிலைப்பாடு குறித்து விமர்சித்திருக்கிறார்.

மேலும், `முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, ஜி.எஸ்.டி வரி வரம்பின் கீழ் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வண்ணம், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து தி.மு.க.வின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டு கொள்வதாகவும் ஓ.பி.எஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

நிதியமைச்சர் விளக்கம்

இது சர்ச்சையாகியிருக்கும் நிலையில் சூழலுக்கு ஏற்றவாறு தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்திருக்கிறார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2018-ல் கோரிக்கை விடுத்தார். 2018 – 2021 இடையே பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் விலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2001-ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 10 டாலராக இருந்தநிலையில், 2013-ல் அது 130 டாலருக்கு விற்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி செய்தபோது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், பெட்ரோல், டீசலை விலை கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது, நேர்முக வரி லிட்டருக்கு 55 பைசா, மறைமுக வரி லிட்டருக்கு 45 பைசா என்றிருந்தது. அதேபோல், பெட்ரோலுக்கு விதிக்கப்படும் செஸ் எனப்படும் கூடுதல் வரி லிட்டருக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.5 என்றிருந்தது. இப்போது இந்த செஸ் வரி பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 32 ரூபாயாகவும், டீசலுக்கு 31 ரூபாயாகவும் இருக்கிறது. செஸ் வரியை மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுப்பதில்லை. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரலாம் என மத்திய அரசு சொல்லவில்லை; உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டியே ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது.

எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு நேர்முக வரியை 100% மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. மாநில அரசுகளுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் ஆல்கஹால் என இருவகையான வரி வருவாய் மட்டுமே இருக்கிறது. மாநிலங்களில் வருமானத்தையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டால், மாநிலங்களில் நிர்வாகத்தை எப்படி நடத்த முடியும்? பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் செஸ் வரியை மத்திய அரசு நீக்கினால், அவற்றை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரும் முடிவுக்குத் தமிழக அரசு தயாராக இருக்கிறது’’ என்றார்.

ம.தி.மு.க ஆதரவு

வைகோ - ஸ்டாலின்
வைகோ – ஸ்டாலின்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரும் விவகாரத்தில் அ.தி.மு.க-வின் குற்றச்சாட்டுக்கு தி.மு.க சரியான பதிலடி கொடுத்திருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கருத்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விவகாரத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறே முடிவெடுக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Also Read – ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வராது… மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top