வாக்குச் சீட்டு முறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நோக்கி நகர்ந்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என தேர்தல் ஆணையம் அடித்துச் சொல்கிறது.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதம் எழுந்து அடங்கும். இந்தத் தேர்தலில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள், அதைத் தொடர்ந்து கைது, அதிகாரிகள் மீது நடவடிக்கை என அடுத்தடுத்த நிகழ்வுகளைப் பார்க்க முடிந்தது.
-
1 முதல் பயன்பாடு
இந்தியாவில் முதல்முதலாக 1982 கேரள பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இயந்திரங்களைத் தேர்தலில் பயன்படுத்த விதிகள் எதுவும் இல்லாததால், அந்தத் தேர்தலை செல்லாததாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்.
-
2 சட்டத் திருத்தம்
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த ஏதுவாக 1951-ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அது 1989-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
-
3 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து 1998-ல் பொதுவான கருத்து எட்டப்பட்டு, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் 25 தொகுதி வாக்குப்பதிவில் அவை பயன்படுத்தப்பட்டன. தமிழகத்தில் 2001-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
-
4 இரண்டு பகுதிகள்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் என்பது கண்ட்ரோல் யூனிட் (CU), பாலோட்டிங் யூனிட் (BU) என இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது. இவை இரண்டும் 5 மீ நீளமுள்ள ஒயர் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேட்டரியில் இயங்கக் கூடியவை என்பதால், தனியாக மின்வசதி தேவையில்லை. ஒவ்வொரு இயந்திரத்திலும் அதிகபட்சமாக 2,000 வாக்குகள் வரை பதிவு செய்ய முடியும்.
-
5 வேட்பாளர்கள் எண்ணிக்கை
ஒவ்வொரு இயந்திரத்திலும் 16 வேட்பாளர்களின் பெயர்களைப் பதிவு செய்ய முடியும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் ஒரே கண்ட்ரோல் யூனிட்டின் கீழ் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கேற்ப அதிகரிக்கப்படும்.
-
6 தயாரிக்கும் நிறுவனங்கள்
இந்தியாவில் இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கின்றன. ஹைதராபாத்தில் இருக்கும் எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பெங்களூரில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட். இந்த இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதிக்கும் அதிகாரம் கொண்டவர்கள்.
-
7 விலை
இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் M2, M3 என இரண்டு வகைகள் உண்டு. 2006 முதல் 2010 வரை தயாரிக்கப்பட்ட M2 வகை வாக்குப் பதிவு இயந்திரத்தின் விலை ரூ.8,670 ஆகவும், M3 வாக்குப் பதிவு இயந்திரத்தின் விலை (இரண்டு பகுதிகளும் சேர்த்து) தோராயமாக ரூ.17,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
-
8 வாக்குப் பதிவு
சட்டப்பிரிவு 49MA-வின்படி வாக்காளர், தான் பதிவு செய்த வாக்கு தவறாகப் பதிவானதாகக் கூறும்பட்சத்தில், தேர்தல் அதிகாரி எழுத்துப்பூர்வமாக அவரிடமிருந்து புகாரைப் பெற வேண்டும். அதன்பின்னர், வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப் பதிவு செய்து சோதிக்க வேண்டும். புகார் உண்மையானால், உடனடியாக வாக்குப் பதிவு நிறுத்தப்படும்.
-
9 விவிபேட்
வாக்காளர், தான் சரியான வேட்பாளருக்கு வாக்கை செலுத்தியிருக்கிறோமா என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். வேட்பாளருக்கு நேரே இருக்கும் நீல நிற பட்டனை வாக்காளர் அழுத்திய பின்னர், அந்த இயந்திரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் விவிபேட் இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம், வரிசை எண் போன்றவை 7 விநாடிகளுக்குக் காட்டப்படும். அதன்பின்னர், அந்த ஸ்லிப் விவிபேட் இயந்திரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டிக்குள் விழுந்துவிடும்.
-
10 வாக்குப் பதிவுக்குப் பின்
வாக்குப் பதிவு முடிந்த பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரால் வாக்குப் பதிவு இயந்திரம் சீல் வைத்து மூடப்படும். துணை ராணுவப் படை பாதுகாப்பில்லாமல் வாக்குப் பதிவு இயந்திரத்தை இடமாற்றம் செய்யக் கூடாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திலுள்ள ஸ்ட்ராங்க் ரூமில் வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்படும் மின்னணு இயந்திரம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில்தான் எடுக்கப்பட வேண்டும். அந்த அறையில் லைட் உள்பட வேறெந்த மின்சாதனங்களும் இருக்கக் கூடாது. 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்புடன் பாதுகாப்பும் போடப்பட வேண்டும்.
0 Comments