MK Stalin

`ரூ.70 கோடி, 2 லட்சம் சதுர அடி பரப்பு; மதுரையில் உலகத்தர நூலகம் – அறிவிப்பும் பின்னணியும்!

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைப் போலவே மதுரையில் ரூ.70 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.. மதுரையில் அமைக்கப்படும் நூலகத்தின் முக்கியத்துவம் என்ன?

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, 33 அமைச்சர்களுடன் கடந்த மே 7-ம் தேதி பதவியேற்றது. கொரோனா இரண்டாவது அலையால் தமிழகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜூன் 3-ம் தேதி தி.மு.க முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை தி.மு.க-வினர் விமரிசையாகக் கொண்டாட வேண்டாம் என அக்கட்சித் தலைமை தொண்டர்களைக் கேட்டுக்கொண்டது.

Anna Library

கருணாநிதி பிறந்தநாளில் பல்வேறு திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மதுரையில் ரூ.70 கோடி செலவில் உலகத்தரமான நூலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில், “புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதன் மீதும் தலைவர் கருனாநிதிக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீராப் பற்றினை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இதன் வெளிப்பாடாகத்தான், 2010 ஆம் ஆண்டில், அண்ணாவின் 102-வது பிறந்தநாள் அன்று, சென்னை கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதி நவீன மிகப் பெரிய நூலகம் எனப் போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார்.

மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் என, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது என்று சொன்னால், அது மிகையாகாது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பைத் தமிழறிஞர்கள் பலரும் வரவேற்றிருக்கிறார்கள்.

மதுரை நூலகத்தின் முக்கியத்துவம் என்ன?

  • சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சிறப்புவாய்ந்த பெரிய நூலகம் இல்லை என்ற குறை நீண்டகாலமாகவே இருந்துவந்தது. அரசின் இந்த அறிவிப்பால் அந்தக் குறை அகலும்.
  • தமிழரின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றும் கீழடி அகழாய்வு தளம் மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில்தான் இருக்கிறது. மதுரையில் உலகத் தரத்தில் நூலகம் அமைக்கப்படும் பட்சத்தில் கீழடியில் கிடைக்கும் பொருட்களைக் காட்சிப்படுத்த நல்வாய்ப்பாக அமையும்.
  • மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருக்கும் ஓலைச்சுவடிகள், பழைய நூல்களைப் புதிய நூலகத்தில் சேகரித்துப் பாதுகாக்கலாம். செந்தமிழ் கல்லூரியில் இருக்கும் பாண்டியர் நூலகத்தில் மட்டும் பழமையான 55,000 ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • வாசிப்புப் பழக்கம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி உதவியுடன் அமைக்கப்படும் இந்த நூலகத்தால், அந்தப் பழக்கத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். சிங்கப்பூர் நூலகங்கள் தொழில்நுட்ப உதவியுடன் புதிய வாசிப்பு அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், நவீன வசதிகளுடன் இந்த நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்கிறார்கள் இலக்கியவாதிகள்.

Also Read – இயக்குநர் ஷங்கர் – அவரோட படங்கள் பத்தின உங்க மெமரியை செக் பண்ணுவோமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top