`ஒரே குடும்பத்தில் 3 பேர் வெற்றி; ஒரு வாக்குகூட வாங்காத வேட்பாளர்’- தேர்தல் சுவாரஸ்யங்கள்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. 21 மாநகராட்சிகள் உள்பட பெரும்பாலான இடங்களில் ஆளும்கட்சியான தி.மு.க வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. தேர்தல் முடிவுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அப்படியான சுவாரஸ்ய சம்பவங்கள் சிலவற்றைத்தான் நாம் இப்போ பார்க்கப்போறோம்.

ஒரே குடும்பத்தில் 3 பேர் வெற்றி

ஒரே குடும்பத்தில் 3 பேர் வெற்றி
ஒரே குடும்பத்தில் 3 பேர் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி உறுப்பினர்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 15-வது வார்டில் போட்டியிட்ட ஏரல் ரமேஷ் வெற்றிபெற்றார். அதேபோல், 1-வது வார்டில் அவரது மகன் பாலகௌதம் மற்றும் 2-வது வார்டில் அவரது மகள் மதுமிதாவும் வெற்றியைப் பதிவு செய்தனர்.

வெற்றிபெற்ற தம்பதிகள், தாய்-மகன்

தாம்பரம் மாநகராட்சியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட சேகர் மற்றும் அவரது மனைவி கமலா ஆகியோர் முறையே 56 மற்றும் 57-வது வார்டுகளில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். அதேபோல், சுயேச்சையாகப் போட்டியிட்ட கிரிஜா சந்திரன் மற்றும் அவரது மகன் பிரதீப் சந்திரன் ஆகியோர் 39, 40-வது வார்டுகளில் வெற்றிபெற்றனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் பாலமுருகன் – ரேணுப்ரியா, ராஜபாளையத்தில் ஷியாம் ராஜா – பவித்ரா, ராதாகிருஷ்ண ராஜா – கீதா, திருவாரூர் நகராட்சியில் டி.செந்தில் – புவனப்ரியா, சேலம் மேட்டூர் நகராட்சியில் வெங்கடாஜலம் – உமா மகேஸ்வரி, திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஆர்.எஸ்.பாண்டியன் – கவிதா, கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் நீரோடி ஸ்டீபன் – ராணி என 7 தம்பதிகள் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்கள். அ.தி.மு.க சார்பில் திருவாரூர் நகராட்சியில் போட்டியிட்ட எஸ்.கலியபெருமாள் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகியோர் 1வது மற்றும் 2-வது வார்டில் வெற்றிபெற்றிருக்கிறார்.

தாய் - மகன் வெற்றி
தாய் – மகன் வெற்றி

இதேபோல், மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 13-வது வார்டில் வள்ளிமயில் மற்றும் 8-வது வார்டில் அவரது மகன் மருதுபாண்டி ஆகியோர் சுயேச்சையாகக் களமின்றி வென்றிருக்கிறார்கள்.

ஒரு ஓட்டு கூட இல்லை

கும்பகோணம் மாநகராட்சித் தேர்தலில் 35-வது வார்டில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் செந்தில் குமார் ஒரு வாக்குகூடப் பெறவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியின் 7-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் இப்ராஹிம்ஷா ஒரு வாக்கைக் கூடப் பெறவில்லை. மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியின் 14-வது வார்டில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய தமிழ்செல்வனுக்கு ஓட்டு 15-வது வார்டில் இருக்கிறது. இந்தத் தேர்தலில் அவருக்கு ஒரு ஓட்டுகூட கிடைக்கவில்லை. தருமபுரி பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சித் தேர்தலில் 2-வது வார்டில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் சதாசிவமும் இதே லிஸ்டில் சேர்கிறார். இதேநிலைதான் திருப்பூர் தாராபுரம் நகராட்சியின் 6-வது வார்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷேக் பரீத்துக்கும். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சியின் 4-வது வார்டு அ.ம.மு.க வேட்பாளர் ரமேஷ் கண்ணன் ஒரு வாக்குகூட பெறவில்லை.

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்

முதுகுளத்தூரில், 4,6,8 ஆகிய 3 வார்டுகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெர்னார்டுக்கு 6-வது வார்டில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. 4-வது வார்டில் 2 வாக்குகள் பெற்ற இவர், 8-வது வார்டில் 11 வாக்குகளைப் பெற்றார். இதேபோல், திண்டுக்கல் கன்னிவாடியில் 8-வது வார்டு அ.ம.மு.க வேட்பாளர் பிரபாகரன் ஒரு வாக்குகூடப் பெறவில்லை. விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சியின் 6-வது வார்டு பா.ஜ.க வேட்பாளர் நிரோஷாவுக்கு அந்த வார்டிலேயே வாக்கு இருந்தும், அவர் ஒரு வாக்குகூடப் பெறவில்லை. சிவகங்கை நகராட்சி 1-வது வார்டு ம.நீ.ம வேட்பாளர் செங்கோலுக்கு ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. இதேபோல், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தின் 25-வது வார்டு ச.ம.க வேட்பாளர் சதீஷ்குமாரும் ஒரு வாக்குகூடப் பெறவில்லை.

ஒரு ஓட்டு – இரண்டு ஓட்டு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியின் 11வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் நரேந்திரன் ஒரு வாக்கை மட்டுமே பெற்றார். நெல்லிக்குப்பத்தில் 3-வது வார்டு அ.ம.மு.க வேட்பாளர் மாயகிருஷ்ணன், 11-வது வார்டில் பா.ஜ.க வேட்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலா ஒரு வாக்கை மட்டுமே பெற்றனர்.

குலுக்கல் முறையில் வென்ற வேட்பாளர்கள்

மனுவேல்
மனுவேல்

திருநெல்வேலி பணகுடி பேரூராட்சி 4-வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் மனுவேல், அ.தி.மு.க-வின் உஷா ஆகியோர் தலா 266 வாக்குகள் பெற்றனர். இதில், குலுக்கல் முறையில் பா.ஜ.க வேட்பாளர் மனுவேல் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி 4-வது வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் செல்வி மற்றும் சுயேச்சை வேட்பாளர் சமயராணி ஆகியோர் தலா 186 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில், இரண்டு பேரின் பெயர்களையும் சீட்டுகளில் எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் செல்வி வெற்றிபெற்றார். இதேபோல், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி பேரூராட்சியின் 10-வது வார்டில் தி.மு.க வேட்பாளர் சுப்புலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலா 284 வாக்குகளுடன் சமநிலை பெற்றனர். இந்தநிலையில், குலுக்கல் முறையில் வெற்றியாளரைத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு சுயேச்சை வேட்பாளர் ராமகிருஷ்ணன் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், தி.மு.க வேட்பாளர் முன்னிலையில் குலுக்கல் முறையில் சீட்டு எடுத்தபோது, ராமகிருஷ்ணனின் பெயரே வந்திருக்கிறது. அப்போதும், ராமகிருஷ்ணன் குலுக்கல் முறைக்கு ஒத்துழைக்காத நிலையில், தான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும் என தி.மு.க வேட்பாளர் கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அவர் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளர் ராமகிருஷ்ணன் புகார் அளித்திருக்கிறார்.

இளம் வேட்பாளர்கள்

வெற்றிபெற்ற இளம் வேட்பாளர்கள்
வெற்றிபெற்ற இளம் வேட்பாளர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சியின் 13-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட 22 வயதான சட்டக்கல்லூரி மாணவி யசஷ்வினி வெற்றிபெற்றார். திருச்சி துவாக்குடி 5-வது வார்டு கவுன்சிலராக சுயேச்சையாகப் போட்டியிட்ட 22 வயது இரண்டாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவி சினேகா வெற்றியைப் பதிவு செய்தார். அதேபோல், சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியின் 5-வது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரதியா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். விருதுநகர் நகராட்சி 16-வது வார்டில் தி.மு.கவைச் சேர்ந்த 22 வயது இளம் வேட்பாளர் பிருந்தா வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். தி.மு.க சார்பில் சென்னை மாநகராட்சியின் 136-வது வார்டில் 22 வயதுக்குள்பட்ட இளம் வேட்பாளரான நிலவரசி துரைராஜ், கோவை மாநகராட்சியின் 97-வது வார்டில் திமுக சார்பில் 22 வயதான நிவேதா சேனாதிபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாநகராட்சியின் 98-வது வார்டில் 21 வயது உளம் வேட்பாளர் பிரியதர்ஷினியும் வெற்றிபெற்றனர்.

சுயேச்சைகள் ஆதிக்கம்

200 வார்டுகள் கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 5 சுயேச்சை வேட்பாளர்கள் கவுன்சிலராகியிருக்கிறார்கள். அதேபோல், 15 வார்டுகளைக் கொண்ட கோவை மோப்பிரிபாளையும் பேரூராட்சியில் முன்னாள் துணைத்தலைவர் சசிக்குமார் தலைமையில் சுயேச்சையாகப் போட்டியிட்ட 9 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். தி.மு.க இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மேலும், ராமநாதபுரம் சாயல்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளிலும் சுயேச்சைகளே வெற்றிபெற்றனர். கமுதி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 14-ல் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடினர். மதுரை பாலமேடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 14-ல் சுயேச்சை வேட்பாளர்களும் ஒரு வார்டில் தி.மு.க வேட்பாளரும் கவுன்சிலர்களாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Also Read – ஜெயலலிதா கலங்கி நின்ற 7 தருணங்கள்..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top