கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

`எங்களுக்கு இது பெருசுதான்!’ – கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் அவசியத்தைப் பகிரும் மகளிர்! #TNEmpowersWomen

காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `இந்தக் கூட்டத்தில் இருக்கும் உங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் இந்தத் திட்டத்தைப் பத்தி ஒரு பதில் இருக்கும். பதில் வேறவேறயா இருந்தாலும் பயன் ஒண்ணுதான். இந்த ஆயிரம் ரூபாய் உங்க வாழ்க்கைக்கு உதவியாய் இருக்கப்போகுது’ என்று குறிப்பிட்டிருந்தார். மகளிர் உரிமைத் திட்டம் பற்றி இல்லத்தரசிகளிடம் கருத்துக் கேட்கச் சென்றிருந்தபோது இதை நாம் கண்கூடாக உணர்ந்தோம். இல்லத்தரசிகள் தொடங்கி பூ வியாபாரம் செய்யும் மகளிர் வரை திட்டம், தங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நம்மோடு பகிர்ந்திருந்தார்கள்.

யோகலட்சுமி
யோகலட்சுமி

பெருமைப்படுறோம்!

இல்லத்தரசியான யோகலட்சுமி இதைப்பற்றி பேசுகையில், `இது நல்ல ஒரு விஷயம்தான். ஊக்கத்தொகையா இல்லாம உரிமைத் தொகையா கொடுத்ததுக்குப் பெருமைப்படுறோம். இதுமூலமா தனிப்பட்ட முறையில் எங்களுக்கு அவர் அங்கீகாரம் கொடுக்குறாரு. எங்க வீட்ல ஒருத்தரா எங்க அப்பா மாதிரி நினைக்கிறேன். முதல்வருக்கு நன்றி' என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.ஒரு நாளைக்கு நூறு ரூபாய் என்று வைத்தால் கூட 10 நாளைக்கு எங்கள் வீட்டுக்குத் தேவையான செலவுக்கு நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்’ என்றும் அவர் சொன்னார்.

ராஜேஸ்வரி

வீட்டு வேலை செய்யும் ராஜேஸ்வரி நம்மிடம் இன்றைய சூழலில் இருக்கும் சமூக எதார்த்தை எடுத்துரைத்தார். அவர் கூறுகையில், `ஒருநாள் வீட்டு வேலை செஞ்சா 30 ரூபாய் கொடுக்குறாங்க. ஆனால், இன்றைய சூழ்நிலைல ஸ்டாலின் அய்யா எங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறது மிகப்பெரிய உதவியா இருக்கும். எங்களுக்குப் பெருமையா இருக்குது’ என்று குறிப்பிட்டார். ஆயிரம் ரூபாய் என்பது சொற்பத் தொகைதான் என்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இருந்தது ராஜேஸ்வரியின் கருத்து. மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பேருந்துப் பயணத் திட்ட அறிமுகத்தின்போது, பேருந்தில் பயணிக்க பத்து ரூபாய்கூட இல்லாமலா இருக்கிறார்கள் என்று ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், திட்டத்துக்கு முன்பு அரசுப் பேருந்தில் 40% ஆக இருந்த மகளிர் பயணிகளின் எண்ணிக்கை 61% ஆக உயர்ந்தது. அத்தோடு திட்டத்துக்குக் கிடைத்த மகத்தான வரவேற்பும் அந்த விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கியது. அதேபோன்றதொரு நிலைதான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கும் என்பதற்குக் கட்டியம் கூறியிருந்தார் ராஜேஸ்வரி.

கல்பனா
கல்பனா

மாற்றுக்கட்சியினரும் பாராட்டும் திட்டம்!

தங்களோட கட்சிக்காரர்களுக்காகவே இந்தத் திட்டம்னும் ஒரு பக்கம் குறை சொன்னாங்க. ஆனால், நடைமுறை உண்மை என்னனு சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த கலைவாணி நமக்குச் சொன்னாங்க. `இந்தத் திட்டம் பெண்களுக்கு வரப்பிரசாதமாகத்தான் இருக்கு.எங்க குடும்பமே அதிமுகதாங்க. ஆனால், எனக்கு உரிமைத் தொகை முதல்நாள் சாயந்தரமே வந்துடுச்சு. முதல்ல என் பசங்க ரெண்டு பேருக்கும் ஃபிரைட் ரைஸ் முதல்முறையா வாங்கிக் கொடுத்தேன். இன்னும் சில பேருக்கு வரலைனு சொல்றாங்க. கொஞ்சம் கொஞ்சமா அரசாங்கம் எல்லாரோட அக்கவுண்ட்லயும் பணத்தைப் போட்டுடுவாங்கனு நான் சொன்னேன். இதேமாதிரிதான் கட்டணமில்லா பேருந்து பயணத்துக்கும் சொன்னாங்க. இப்போகூட ஒவ்வொரு வாரமும் வடபழனி முருகன் கோயிலுக்கு நடந்தே போவோம். திரும்ப வரும்போது கட்டணமில்லா பேருந்துல ஏறி வீட்டுக்கு வந்துடுவோம். அந்தத் திட்டத்தால எங்களுக்கு மிகப்பெரிய பயன் கிடைச்சிருக்கு’ என்று பளீச்சென தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

நடைபாதை வியாபரம்

பூ வியாபாரம் செய்யும் நவநீதம் பாட்டி, `அவர் கொடுத்தது எவ்வளவோ நல்லது. இதை வைத்து எங்கள் செலவைப் பார்த்துக் கொள்வோம். குழந்தைகளுக்குத் தேவையானதையும் வாங்கிக் கொடுக்க முடியும். எங்களுக்கு அவர் செய்றதெல்லாம் நல்லதுதான். அவர் நாட்டுக்கும் சரி; எங்களுக்கும் சரி நல்லதுதான் பண்றார்’ என்று பாராட்டினார். இதேபோல், மற்றொரு பூ வியாபாரியான கலைவாணி பேசும்போது, “கோயம்பேடு போய் பூ வாங்கிட்டு வர்றதுக்கு பஸ்ல எந்தவொரு கட்டணமும் இல்லை. இதுக்கு முன்னாடி பஸ்ல போய்ட்டு வரும்போது டிக்கெட் காசும் மிச்சமாச்சு. இப்போ கொடுக்குற ஆயிரம் ரூபாய்க்கும் பூ வாங்கிட்டு வந்து வியாபாரம் பண்ணுவேன்’ என்றார்.

நவநீதம் பாட்டி
நவநீதம் பாட்டி

குடும்ப செலவுகளுக்கு உதவும்

இல்லத்தரசிகளான கல்பனாவோ, `பணம் எனக்கு என் அக்கவுண்ட்ல வர்றதால யாரையும் நான் எதிர்பார்க்கத் தேவையில்லல.. என் பசங்களுக்கு என்ன தேவையோ, அதை என்னாலேயே வாங்கிக் கொடுக்க முடியும். மாத்திரை செலவும், கேஸ்னு பல வகைகள்ல உதவும். எங்களுக்கு இது பெருசுதான்’ என்று நிறைவு செய்தார். சரஸ்வதி பாட்டி கூறுகையில்,மாத்திரை செலவு, பசங்க டியூஷன் ஃபீஸ், வீட்டு செலவுனு எல்லாத்துக்குமே இது உதவுற மாதிரி இருக்கு’ என்றார்.

தமிழ்நாடு அரசின் `கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ பற்றி நீங்க என்ன நினைக்குறீங்கங்குறதை கமெண்ட்ல சொல்லுங்க

Also Read – `கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ ஏன் இந்தியாவுக்கே முன்னோடித் திட்டம்- 3 காரணங்கள்! #TNEmpowersWomen

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top