தமிழக நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் கடந்த 18-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நிதித்துறைச் செயலாளர் என்.முருகானந்தத்தைப் பாராட்டினார்கள். இது ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மட்டத்திலும், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் கூடுதல் கவனத்தைப் பெற்றது. முதலமைச்சரும், நிதியமைச்சரும் பாராட்டும் அந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ் யார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
முருகானந்தம் ஐ.ஏ.எஸ்
முருகானந்தம் 1991-ஆம் ஆண்டு பேட்ஜ் அதிகாரி ஐ.ஏ.எஸ் அதிகாரி சென்னையைச் சேர்ந்தவர். பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்போடு, ஐ.ஐ.எம்-மில் வணிக நிர்வாகப் படிப்பையும் முடித்தவர். அதன்பிறகு சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் மத்திய அரசில் கூடுதல் செயலாளர் ரேங்கில் இருந்தார். இவரது மனைவி சுப்ரியா சாகு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில்,
மத்திய அரசுப் பணியில் இருந்து டெபுடேஷனில் தமிழகத்திற்கு வந்த முருகானந்தம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான முந்தைய அ.தி.மு.க அரசாங்கத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக இருந்தார். தொழில்துறை முதன்மைச் செயலாளராக இருந்த முருகானந்தம், அப்போது அதிக எண்ணிக்கையிலான தொழிற் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உருவாக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல், ஓ.பன்னீர் செல்வம் (பொறுப்பு) முதலமைச்சராகவும், பிறகு முதலமைச்சராகவும் இருந்த காலத்தில் அவருடனும் நெருக்கமாக இருந்தார்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு அமைந்தபோது, உள்துறை முதன்மைச் செயலாளர் பொறுப்புக்கு வர வேண்டும் என பல கட்ட முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், கடந்த பத்தாண்டுகளாக அந்தப் பதவியில் இருக்கும் எஸ்.கே.பிரபாகருக்கு டெல்லி வரை இருந்த செல்வாக்கின் காரணமாக அவரை அசைக்க முடியவில்லை. அதே நேரத்தில் அப்போது நிதித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த எஸ்.கிருஷ்ணனுக்கும், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் ஒத்து வரவில்லை. இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அதையடுத்து, எஸ்.கிருஷ்ணன் தொழிற்துறைக்கும், அந்த த் துறையில் முதன்மைச் செயலாளராக இருந்த என்.முருகானந்தம் நிதித்துறைக்கும் மாற்றப்பட்டனர்.
மேலும், இவர் நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டபோதும், அந்தத் துறையில் அனுபவம் இல்லாதவர் என்ற விமர்சனம் எழுந்தது. ஆனால், தற்போது சமர்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் 7,000 கோடி ரூபாய் வரை வருவாய் பற்றாக்குறையைக் குறைந்த விஷயத்தைக் கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு சாத்தியப்படுத்திக்காட்டி, தனது துறைக்கும், அரசாங்கத்திற்கும் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்து தன்னை நிருபித்துள்ளார்.