சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்துக்கு யார் காரணம் என்று தி.மு.க – அ.தி.மு.க உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடந்தது.
சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று அவை கூடியதும், பேரவையில் பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனைப் பாராட்டி சிறப்புத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், நீர்வளத்துறையில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் தொடங்கியது.
சென்னை வெள்ளம்
விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அணைக்கட்டு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நந்தக்குமார், அ.தி.மு.க ஆட்சியில் கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாததே, 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்துக்குக் காரணம்’ என்று பேசினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,சென்னையில் செம்பரம்பாக்கம் மட்டுமல்ல, அதற்குக் கீழே 100 ஏரிகள் இருக்கின்றன. அந்த ஏரிகள் நிரம்பியதால் நீர் வெளியேறியது’ என்று பதிலளித்தார்.
அதற்கு தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், செம்பரம்பாக்கம் ஏரியை உரிய நேரத்தில் திறந்துவிடாததால், ஏரி உடைந்து நீர் வெளியேறியது’ என்றார். இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,ஏரி உடையவில்லை. அணை நிரம்பியதால், உபரி நீர் வெளியேறியது’ என்றார். அந்த சமயத்தில் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்க நான்கு நாட்களாக முதலமைச்சரின் உத்தரவுக்காகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் காத்திருந்தனர். இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரே நாளில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது’ என்றார். இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,அணைகளோ, ஏரிகளோ நிரம்பும்போது திறந்துவிடுவது வழக்கமான நடைமுறைதான். அதிகாரிகள் முதலமைச்சரின் உத்தரவுக்காகக் காத்திருக்கவில்லை. மழை, பேரிடர் காலங்களில் அணை, ஏரிகள் நிரம்பும்போது அதைத் திறப்பது குறித்து அதிகாரிகளே முடிவெடுக்கலாம்’ என்றார்.
அப்போது பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், `2015-ம் ஆண்டு தணிக்கைக் குழு அறிக்கையை பேரவையில் சட்டப்படியும் மரபுப் படியும் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், தாக்கல் செய்யப்படவில்லை. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியது. அப்போது, ஆளுங்கட்சி அளித்த தணிக்கைக் குழு அறிக்கையில் உடன்பாடு இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றிய அரசின் தணிக்கைக் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையிலே 2015 சென்னை வெள்ளத்துக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டிருந்தன. 2015-ம் ஆண்டுக்கு முன்னதாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவைக் கூட்டவில்லை. அதனால், அவர்களுக்கு விதிமுறை தெரியவில்லை. இரண்டாவதாக, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்க முதலமைச்சரின் அனுமதி கிடைக்கவில்லை. அதனால்தான், ஒரே நாளில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது என அப்போது ஒன்றிய அரசின் தணிக்கைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது’’ என்று கூறினார்.
Also Read – பேரவையில் கண்கலங்கிய துரைமுருகன்… ஸ்டாலினின் வாழ்த்தும், ஓ.பி.எஸ்-ன் பாராட்டும்!