அ.தி.மு.க வரலாறு – இந்த 10 விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா?

அ.தி.மு.க என்ற இயக்கத்தை தி.மு.கவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் கடந்த 1972-ம் ஆம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி தொடங்கினார்.

அ.தி.மு.க – 10 சுவாரஸ்ய தகவல்கள்!

  • தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட (அக்டோபர் 10, 1972ல் எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருருந்து நீக்கப்பட்டார்) 8 நாட்களில் அ.தி.மு.க என்ற கட்சியின் கொள்கைகள், கொடி ஆகியவற்றுடன் புதிய கட்சி குறித்த அறிவிப்பை எம்.ஜி.ஆர் வெளியிட்டார்.
  • கட்சி தொடங்கிய பின்னர் முதல்முறையாக செய்தியாளர்களிடம் பேசியபோது எம்.ஜி.ஆர், “அண்ணாவின் புகழையும் கொள்கைகளையும் சுட்டிக்காட்டவும், அவர் விட்டுச் சென்ற பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது’’ என்று அ.தி.மு.க உருவாக்கத்துக்குக் காரணம் சொன்னார்.
  • அ.தி.மு.க-வின் கொள்கைகளை தமிழக சட்டமேலவை முன்னாள் உறுப்பினரான அனகாபுத்தூர் ராமலிங்கம் வெளியிட்டார். அண்ணா மீதான தனது பற்றுதலைத் தெரிவிக்கும் வகையில் அவர் படம் இடம்பெறும் வகையிலான கொடியை எம்.ஜி.ஆரின் கருத்துப்படி வடிவமைத்துக் கொடுத்தவர் கலை இயக்குநரும் சட்ட மேலவை முன்னாள் உறுப்பினருமான அங்கமுத்து. கட்சி தொடங்கிய பின்னர் தனக்குச் சொந்தமான ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அன்னை சத்யா திருமண மண்டபத்தைக் கட்சி தலைமையகத்துக்காக எம்.ஜி.ஆர் கொடுத்தார். கட்சிக்கான நிதியையும் அளித்த எம்.ஜி.ஆர், கட்சிக்கு நிதி திரட்டும் வகையில் அரியணை ஏறும்வரை தொடர்ச்சியாகப் படங்களிலும் நடித்தார்.
  • அ.தி.மு.கவின் முதல் தேர்தல் வெற்றி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் மூலமாகக் கிடைத்தது. அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் கட்சியின் முதல் வெற்றி வேட்பாளரானார். அந்தத் தேர்தலில் 16 சுயேச்சை சின்னங்களில் மாயத்தேவர் தேர்ந்தெடுத்த சின்னம்தான் இரட்டை இலை. பின்னாளில் அது அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ சின்னமானது. அடுத்து வந்த கோவை மேற்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றிபெற்றது.
  • தேர்தல் வரலாற்றில் இரட்டை இலை எம்.ஜி.ஆரையும் வீழ்த்திய சம்பவம் உண்மை. 1977ம் ஆண்டு நடந்த தேர்தலில் தாராபுரம் தொகுதியில் முதலில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக அய்யாசாமி என்பவர் முடிவு செய்யப்பட்டு அவருக்கு ஃபார்ம் பி உள்ளிட்டவை அனுப்பப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அங்கியம் பாலகிருஷ்ணன் என்பவரை எம்.ஜி.ஆர் வேட்பாளராக அறிவித்தார். அய்யாசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. இதனால், தமிழகம் முழுக்க இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர், தாராபுரத்தில் மட்டும் அங்கியம் பாலகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்ட சிங்கம் சின்னத்துக்கு வாக்குக் கேட்டதோடு, இரட்டை இலைக்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரசாரம் செய்தார். ஆனால், அதையும் மீறி இரட்டை இலை சின்னத்தில் நின்ற அய்யாசாமியே அந்தத் தேர்தலில் வென்றார்.
  • அ.தி.மு.க தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு முன்பாகவே புதுச்சேரியில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் 1974ம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 30 இடங்களில் 12 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உயர்ந்தது. காரைக்கால் தெற்கு தொகுதியில் வென்ற அ.தி.மு.க உறுப்பினர் சுப்பிரமணியன் ராமசாமி இரண்டு முறை (1974, 1977) புதுவை முதல்வராகப் பதவி வகித்தார்.
எம்.ஜி.ஆர்
  • 1977ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க முதல்முறையாக வென்று தமிழகத்தின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து 1977, 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க வென்றது. எம்.ஜி.ஆர் இறக்கும் வரையில் (24 டிசம்பர் 1987) வரை முதலமைச்சராகவே தொடர்ந்தார். இடையில் 1980ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மட்டும் அ.தி.மு.க சறுக்கியது. மொத்தமுள்ள 39 இடங்களில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வென்றது. அ.தி.மு.க-வால் இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
ஜெயலலிதா
  • எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டது. 98 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, 1988ம் ஆண்டு ஜனவரி 7 முதல் 30-ம் தேதிவரை 23 நாட்கள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து நடந்த 1989ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜானகி அணி – ஜெயலலிதா அணி எனப் பிரிந்து போட்டியிட்ட நிலையில், முறையே 2 மற்றும் 23 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. இந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதனால், ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டைப் புறாவும் சின்னங்களாக ஒதுக்கப்பட்டன. அதன்பின்னர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஒன்றாக இணைந்தது. அடுத்துவந்த 1991ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க வென்று முதல்முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார்.
  • 1991 – 1996 வரை ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சிக் காலத்தை ஜெயலலிதா நிறைவு செய்தாலும், ஊழல் புகார்கள் பெரும் விமர்சனத்தை அ.தி.மு.க சந்தித்தது. 1996ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில் அ.தி.மு.க போட்டியிட்ட நிலையில், 234 தொகுதிகளில் 4 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு, 2001, 2011, 2016 என மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் வென்று அ.தி.மு.க தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
ஓ.பி.எஸ் – எடப்பாடிபழனிசாமி

2016ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தநிலையில், எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். இரட்டை சிலை சின்னம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு, பின்னர் ஓ.பி.எஸ் – எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தன. இதையடுத்து இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தைத் திரும்பப் பெற்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அ.தி.மு.க ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. அதன்பிறகு, 2019ம் ஆண்டு 2 தொகுதிகள் மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. 2019ம் மே மாதத்தில் நடந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க இரண்டிலுமே வென்றது. 2019ம் ஆண்டு அக்டோபரில் நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வென்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top