ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நேற்று பேசியது தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. `நானும் தமிழன்தான்’ என அவர் வெளியே வந்து கூறிய வார்த்தைகளை தமிழர்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டாடி வருகின்றனர். ஆனால், இதற்கு முன்பே தமிழர்கள் மனதில் இடம்பிடிக்கும் வகையில் ராகுல் காந்தி பல விஷயங்களை செய்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகம் சார்பில் அவர் போட்டியிட விரும்புவதால் இத்தகைய செயல்களை அவர் செய்வதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தமிழர்கள் பலர் ராகுல் காந்தியை மெல்ல மெல்ல ஏற்றுக்கொண்டு வருகின்றனர் எனலாம். இந்த நிலையில், தமிழக மக்கள் மனதில் ராகுல் காந்தி இடம்பிடிக்க காரணமான 7 சம்பவங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
மாட்டுவண்டி பயணம்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ராகுல் வருகை தந்தார். கரூர் பகுதியில் அவர் பரப்புரை மேற்கொண்டிருந்தபோது வேளாண் சட்டங்கள் உள்பட பல விஷயங்கள் குறித்து மக்களிடம் பேசினார். அப்போது, விவசாயி ஒருவர் பழைய செல்லாத ரூ.500 நோட்டை எடுத்துவந்து ராகுல் காந்தியிடம் தந்தார். அதனை வாங்கிய ராகுல் காந்தி, “எனது சகோதரரான இந்த விவசாயியிடம் இருந்து இந்த 500 ரூபாய் நோட்டை பிரதமர் மோடி அரசு திருடிவிட்டது” என்று காட்டமாக தெரிவித்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் பேசியது தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் விவசாயிகள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல், கரூரில் விவசாயிகளுடன் உரையாட தன்னுடைய காரில் செல்லாமல் ஜோதிமணி எம்.பியுடன் மாட்டுவண்டியில் பயணம் மேற்கொண்டார். இதனைப் பார்த்து விவசாயிகள் ஆரவாரம் செய்தனர்.
தமிழர்களின் உணர்வுகளை தொட்ட ராகுல் காந்தி!
கரூர் செல்வதற்கு முன்பு திருப்பூரில் தனது பரப்புரையை மேற்கொண்டார். அந்தப் பரப்புரையில் பேசும்போது, “ஒரே நாடு ஒரே மொழி என்று பா.ஜ.க அரசு கூறுவது கண்டிக்கத்தக்கது. தமிழ் மொழியையும் அதன் கலாசாரத்தையும் யாராலும் ஏமாற்ற முடியாது. இந்தியாவில் தமிழர்களின் கலாசாரம் எப்போதும் மேலோங்கியே இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தில் கலாசாரத்தையும் வைத்துதான் `இந்தியா’ என்ற நாடு உருவாகியுள்ளது.” என்று கூறினார். தமிழர்களுக்கு ஆதரவான அவரின் குரல் தமிழர்கள் பலரின் கவனத்தையும் அவர் பக்கம் நோக்கி திருப்பியது. தமிழ் மக்களுடனான என்னுடைய பிணைப்பு பற்றி அனைவருக்கும். எனது குடும்பத்தினருக்கு நீங்கள் காட்டிய அன்பும் மரியாதையும் பற்றி எனக்கு நன்றாக தெரியும். நான் உங்களில் ஒருவன். உங்களிடம் எதையும் சொல்ல நான் வரவில்லை, உங்களை சந்தித்து பிரச்சனைகளை தெரிந்துகொள்ளவே வந்துள்ளேன். தமிழக வரலாற்றிலிருந்தும், தமிழ் மொழியில் இருந்தும் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. நான் தமிழன் இல்லை. ஆனால், தமிழர்களின் உணர்வையும் தமிழர் கலாசாரத்தையும் நான் மதிக்கிறேன். பா.ஜ.க-வும், பிரதமர் மோடியும் தமிழர் உணர்வுகளை மதிக்காமல் இருப்பதை எந்த வகையிலும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.” என்றும் தெரிவித்தார்.
சார்னு கூப்பிடாதீங்கனு சொன்ன ராகுல் காந்தி!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்க ராகுல்காந்தி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை வந்தார். டெல்லியில் இருந்து வந்த அவர் நேரடியாக ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குச் சென்று அங்கிருந்த மாணவிகளுடன் உரையாடினார். அப்போது, “என்னை சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் என்றே அழையுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் சுலபமான கேள்விகளை கேட்க வேண்டாம் என்றும் கடினமான கேள்விகளை கேளுங்கள் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து கேள்வி கேட்க எழுந்த மாணவி ஒருவர், ஹாய் ராகுல்’ என அழைக்க கூடியிருந்த மாணவிகள் கத்தினர். மாணவிகள் மத்தியில் சிரிப்பலையும் எழுந்தது. இப்படி கல்லூரி மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு நல்ல பெயர் ஏற்பட்டது. வீடியோவும் சமூக வலைதளங்களில் செம ட்ரெண்ட்.
Also Read: `உங்கள் வாழ்நாளில் தமிழர்களை ஒருபோதும் ஆள முடியாது’ – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது என்ன?
’வில்லேஜ் குக்கிங் சேனல்’ விசிட்!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் சுற்றுப்பயணம் நடத்திய போது அவர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். அதன்படி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ எனும் கிராமத்து சமையல் யூட்யுப் சேனலில் கலந்துகொண்டு அவர்களுடன் உரையாடினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், யூடியூபில் பிரபலமான ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ குழுவினர். இவர்கள், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் காளான் பிரியாணி தயார் செய்தனர். அவர்கள் சமைக்கும் இடத்திற்கே வருகை தந்த ராகுல், அவர்களுடன் “கல்லுப்பே… வெங்காயம்… தயிரு…” என சில வார்த்தைகள் தமிழில் பேசி, தரையில் அமர்ந்து சகஜமாக பழகினார். பின்னர் குழுவினரோடு சேர்ந்து அவரும் உற்சாகமாக சமையலில் இறங்கி அவர்களுக்கு உதவிகளைச் செய்தார். சமையல் முடிந்ததும் அவர்களோடு அமர்ந்து காளான் பிரியாணியை ருசி பார்த்தார். இந்த வீடியோ தான் யூடியூப் சேனலில் அந்த வாரம் முழுக்க டிரெண்டிங்.
பெரியார் ட்வீட்!
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், “சுதந்திரம், தைரியம், சமத்துவம் என்ற பெரியாரின் கருத்துகளை, அவரின் பிறந்தநாளில் நினைவுகூர்வோம்” என குறிப்பிட்டிருந்தார். அதோடு பெரியாரின் வரிகளான, “எந்த ஒரு கருத்தையும் மறுப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அந்த கருத்து வெளிப்பாட்டை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை” என்பதையும் பகிர்ந்துள்ளார். 2020-ம் ஆண்டு கோவையில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிராக சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அப்போது ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில், “எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது” என்று ட்வீட் செய்தார். இப்படி, பெரியார் பற்றிய ராகுல் காந்தியின் ட்வீட்டுகள் பெரியாரிஸ்டுகள் மத்தியில் அவர் மீதான கவனத்தை ஏற்படுத்தியது.
பக்கத்து இலையை கவனித்த ராகுல்!
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை ராகுல் பார்த்தது, மக்களோடு மக்களாக உட்கார்ந்து உணவு சாப்பிட்டது, பாட்டிமார்களுடன் போட்டோ எடுத்தது ஆகியவை கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் செம வைரல். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, அவர் உணவு சாப்பிடும்போது நடந்த சம்பவம்தான். ராகுல் காந்தி பந்தியில் அமர்ந்ததும் காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை விழுந்து விழுந்து கவனித்தனர். ஆனால், அவருக்கு இடது பக்கம் அமர்ந்த ஒரு தாயுக்கும் குழந்தைக்கும் இலை போடப்பட்டிருந்தது. சாப்பாடு பரிமாறப்படவில்லை. அவர்களை ராகுல் காந்தி கவனித்தார். அவர்களை நோக்கி கைகாட்டி உணவு பறிமாற கூறினார். உடனே, காங்கிரஸ் நிர்வாகிகள் பதறிக்கொண்டு அவர்களை கவனிக்க ஆரம்பித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
தமிழர்களை ஆளவே முடியாது!
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய ராகுல் காந்தி, “நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றே வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாடாக எந்தவொரு இடத்திலும் வரையறுக்கப்படவில்லை. இது மன்னராட்சி அல்ல. மாநில உரிமைகளைக் காப்பதை நமது ஒட்டுமொத்த நாடும் தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தமிழ் சகோதரரிடம் சென்று, உங்களுக்கு என்ன தேவை’ என்று கேட்டால், எனக்கு இதெல்லாம் தேவை என்று அவர் சொல்வார். அவர் நம்மிடம்,உங்களுக்கு என்ன தேவை’ என்று கேட்டால், நமக்குத் தேவையானதை அவரிடம் சொல்வோம். இதன் பொருள் இரண்டு தரப்புக்கும் இடையே நடக்கும் உரையாடல். இருதரப்பும் பரஸ்பரம் அவரவர் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே ஜனநாயகம். இது மன்னர் ஆட்சி செய்யும் நாடு அல்ல. உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் தமிழர்களை உங்களால் ஆளவே முடியாது. அதை எப்போதும் நிகழ்த்திக்காட்ட முடியவே முடியாது’’ என்றார்.
Also Read: பிரதமர் மோடி முதல் பிரியங்கா காந்தி வரை… பட்ஜெட் பற்றிய பிரபலங்களின் கருத்துகள்!
Some retaining wall issues may come from under the surface area.