Baby

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் பிறந்த குழந்தைக்கும் உரிமை உண்டு… கேரள நீதிமன்றத் தீர்ப்பு ஏன் முக்கியம்?

லிவ் – இன் ரிலேஷன்ஷிப்பில் பிறந்த குழந்தையும் திருமணமான தம்பதிக்குப் பிறந்த குழந்தையாகவே கருதப்படும் என கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.முகமது முஷ்டாக், கௌசர் எடப்பாகத் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.

குழந்தைகள் நலனை உறுதி செய்வதற்காக சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம் 2015 அமலில் இருக்கிறது. கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கொன்றில் அளித்திருக்கும் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தத்தெடுப்புக்காகக் கொடுக்கப்பட்ட தங்கள் குழந்தையைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி லிவ்- இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த தம்பதி ஒருவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஏ.முகமது முஷ்டாக், கௌசர் எடப்பாகத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

என்ன நடந்தது?

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனிதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), ஜான் (பெயர் மாற்றம்) என்பவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். இவர்களுக்கு குழந்தை பிறந்தநிலையில், ஜான் பணிசூழலால் வேறு மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். இதனால், ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்திருக்கிறார்கள். அதேபோல், இருவரும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் என்பதால், இதை அவர்களது குடும்பங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தசூழலில் குழந்தையைத் தத்தெடுப்புக்காக குழந்தைகள் நல ஆணையத்திடம் கடந்தாண்டு மே மாதத்தில் அனிதா ஒப்படைத்திருக்கிறார்.

குழந்தை

திருமணமாகாத பெண்ணுக்குப் பிறந்த குழந்தை என்பதால், தத்தெடுப்பு விதிமுறைகள் 2017 மற்றும் சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம் 2015-ன் 38-வது பிரிவின் கீழ் அந்தக் குழந்தையை ஒரு தம்பதிக்குக் குழந்தைகள் நல ஆணையம் தத்துக் கொடுத்திருக்கிறது. தற்போது அனிதாவும் ஜானும் ஒன்று சேர்ந்த நிலையில், தங்கள் குழந்தையைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுத் தாக்கல் செய்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள், குழந்தையின் தந்தை இன்னார்தான் என லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த அந்தப் பெண் ஒப்புக்கொண்டார். அதனால், அந்தக் குழந்தையைத் திருமணமான தம்பதிக்குப் பிறந்த குழந்தையாகவே கருத வேண்டும். அவரைத் திருமணமாகாத தாய் என்ற பிரிவில் சேர்க்க முடியாது என்று தெரிவித்தனர். அந்தக் குழந்தை ஏற்கெனவே தத்துக் கொடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் வாதிட்டதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

தீர்ப்பின் சாராம்சம்

தத்தெடுப்பு என்பது இரண்டு சூழ்நிலைகளில் நிகழலாம். ஒன்று திருமணமான பெற்றோர், இருவரின் ஒப்புதலோடு குழந்தையைத் தத்தெடுப்புக்காக ஒப்படைப்பது. மற்றொன்று திருமணமாகாத தாய், தனது குழந்தையை ஒப்படைக்கலாம். தந்தை எங்கிருக்கிறார் என்பது அறியாத சூழலில், தத்தெடுப்பு சட்டத்தின் விதிமுறை 6-ன் கீழ் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதேநேரம், அந்தக் குழந்தையின் உண்மையான பெற்றோர்களைக் கண்டுபிடிக்க உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிதலோடும், தத்தமது உரிமைகளையும் ஏற்றுக்கொண்டே இருக்கிறார்கள். அதனால், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் பிறக்கும் குழந்தைகளும் திருமணத்தால் பிறக்கும் குழந்தைகளைப் போலவே கருதப்பட வேண்டும். சிறார் நீதி சட்டத்தின் அடிப்படையில் நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு குழந்தை திருமணமத்தால் பிறந்ததா என்பதை விசாரிக்க வேண்டும். தத்தெடுப்பு சட்டத்தின் கீழ் குழந்தையை அரசிடம் ஒப்படைக்கும்போது பெற்றோர்கள் இருவருமே அதற்கான ஒப்புதலோடு கையெழுத்திட்டிருக்க வேண்டும். அதேநேரம், பெற்றோர் இருவரில் ஒருவர் இருக்கும் இடம் தெரியவில்லை என்றால், அந்தக் குழந்தை கைவிடப்பட்ட குழந்தையாகவே கருதப்பட வேண்டும். மேலும், பெற்றோர் இருக்கும் இடம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி, அவர்களிடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை குழந்தையைத் தத்தெடுப்புக்காக ஒப்படைத்த விண்ணப்பத்தில் தாய் மட்டுமே கையெழுத்திட்டிருக்கிறார். தந்தையின் கையெழுத்து இல்லை. இதனால், தத்தெடுப்பு முறையே சட்டவிரோதமானது என்பதால், தத்தெடுத்தவர்கள் அந்தக் குழந்தையின் மீது எந்தவொரு உரிமையும் கோர முடியாது என கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு சிறார் நீதி சட்டத்தில் முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

கேரள உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் சிறார் நீதி சட்டம் 2015-ன் கீழ் குழந்தையைத் தத்தெடுப்பதற்கான விதிகள் மாற்றப்பட வேண்டிய சூழல் எழுந்திருக்கிறது. இதனால், குழந்தை தத்தெடுப்பின்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் விவகாரத்திலும் மாற்றம் ஏற்படும். இதுகுறித்து கேரள உயர் நீதிமன்றம், தனது தீர்ப்பில் விரிவாக விளக்கம் கொடுத்திருக்கிறது. குழந்தைகள் சட்டவிரோதமாகத் தத்தெடுக்கப்படுவது குறையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் குழந்தைகள் நல ஆர்வலர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top