குண்டாஸ்

குண்டர் தடுப்புச் சட்டம் என்றால் என்ன… யாரை சிறையில் அடைக்கலாம்?!

சென்னை தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜ கோபாலன், தடகள பயிற்சியாளர் நாகராஜன், பா.ஜ.க ஆதரவாளரான கிஷோர் கே சாமி, தென் சென்னையின் முக்கிய ரவுடியாக பார்க்கப்படும் சி.டி.மணி என தொடர்ந்து பலர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிவசங்கர் பாபா மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது அதிகம் பேசுபொருளாக இருப்பது `குண்டர் சட்டம்’ என்பதுதான். குண்டர் சட்டம் என்றால் என்ன? அதனைப் பற்றிய தகவல்களைதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம். 

குண்டர் சட்டம் என்பதன் முழுமையானப் பெயர், `சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், திருட்டு வீடியோ குற்றவாளிகள், திருட்டுத்தனமாக திரைப்படங்களை சி.டி-க்களில் பதிவு செய்யும் குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ என்பது ஆகும். இந்த சட்டம் 1982-ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதாவது மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் இந்தசட்டம் கொண்டுவரப்பட்டது. அதிகாரிகள் இந்த சட்டத்தின் மூலம் ஒருவரை சிறையில் தள்ள முடியும். கிராமப்புற பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்களும் நகர்ப்புறப் பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் இந்த சட்டத்தை செயல்படுத்த முடியும். இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16,17, 22 மற்றும் 45 ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் குற்றங்கள் எதையாவது செய்யக்கூடியவர் அல்லது குற்றங்களை செய்யும் குழுவின் உறுப்பினர்களாக இருப்பவர் என்று கருதினாலே அவர்களை குண்டர்கள் என்று வரையறை செய்கின்றனர். 

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சரியா என்பதை நீதிபதி உள்ளிட்டோர் கொண்ட குழு முடிவு செய்யும். குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டால் அந்த நபரை சுமார் 12 மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வெளிவர முடியாது. அதுமட்டுமல்ல இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர்கள் நிபந்தனைகளை மீறினால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கலாம். மாநில அரசு விரும்பினால் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்கலாம். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு நீதிமன்ற விசாரணைகள் எதுவும் கிடையாது. இதனால், கைது செய்யப்பட்டவர் தன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி, ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழுவையே அணுக முடியும். இவர்களால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும்பட்சத்தில்  உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.

தொடர்ச்சியாக குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்கள் மீது இந்த குண்டர் சட்டம் அதிக அளவில் போடப்படுகிறது. எனினும், இந்த குண்டர் சட்டத்தின்மீது சமூக ஆர்வலர்களால் விமர்சனம் வைக்கப்பட்டும் வருகிறது. சமூக ஆர்வலர்கள் இந்த சட்டத்தின்கீழ் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வந்ததும் இந்த விமர்சனங்களுக்கு காரணமாக உள்ளது.

Also Read : கூகுள் மேப் உதவி; 21 ஏடிஎம்-களில் கொள்ளை – ஹரியானா கும்பலை நெருங்கும் போலீஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top